Enable Javscript for better performance
மண்டோதரி எனும் இராவணனின் பதிவிரதை- Dinamani

சுடச்சுட

    

    மண்டோதரி எனும் இராவணனின் பதிவிரதை

    Published on : 10th January 2015 03:45 PM  |   அ+அ அ-   |    |  

    mandodari

    மண்டோதரி ராவணனின் மனைவி. பேரழகி. குணவதியும் கூட. இலங்கைக்கு சென்ற அனுமன், முதலில் இராவணனின் அந்தப்புரத்தில் மண்டோதரியைப் பார்த்து அவளை சீதை என்று நினைத்து விடுகிறார்.

    பிறகுதான், பதிவிரதையான சீதை நிச்சயம் இராவணனின் அந்தப்புரத்தில் உறங்கிக் கொண்டிருக்க மாட்டாள் என்று முடிவு செய்து சீதையைத் தேடுகிறார். அந்த அளவிற்கு சீதைக்கு நிகராக மண்டோதரி இருந்துள்ளார்.  குணத்திலும் சீதைக்கு இணையானவர் தான் மண்டோதரி.

    மந்தோதரி என்ற பெயரே மண்டோதரி என்று திரிந்துவிட்டது. மந்தோதரி என்றால் சிற்றிடையாள் என்று பொருள்.

    அரக்கன் மயனின் மகளான மண்டோதரியின் பிறப்பு குறித்து பல்வேறு கதைகள் உள்ளன. அதில் ஒரு புராணக் கதை..

    அதாவது,  பாம்பு ஒன்று துறவி அருந்த வைத்திருந்த பாலில் தன் நஞ்சைக் கலந்து விடுகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தவளை, துறவியைக் காப்பாற்றுவதற்காக அந்த பாலில் விழுந்து இறந்து விடுகிறது.

    இது பற்றி எதுவும் அறியாத துறவி, பாலில் செத்துக் கிடக்கும் தவளையைப் பார்த்து கோபம் அடைகிறார். அந்த தவளையை சபிக்கிறார். அந்த சாபத்தின்படியே, அந்த தவளை அழகிய பெண்ணாக மாயனுக்கு மகளாகப் பிறக்கிறது. அந்த பெண்தான் மண்டோதரி.

    உத்தம குணங்கள் பல கொண்ட பதிவிரதையாகவும், சிறந்த அறிவுத் திறன் கொண்டவளாகவும் மண்டோதரி இருந்தும், இராவணனின் மனைவியாக இருந்ததாலேயே அவள் அதிகம் போற்றப்படவில்லை. அவளது நற்குணங்களும் வெளி உலகுக்கு அதிகம் தெரியாமல் போனது.

    மேலும், மண்டோதரியை பார்த்ததுமே அவளது அழகில் மயங்கிய ராவணன், காதல் கொண்டான். ராவணனுக்கும், மண்டோதரிக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. ராவணனுக்கு அசுர குலத்திலும், இறைக் குலத்திலும், நாகர் குலத்திலும் ஏகப்பட்ட மனைவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராவணன் மண்டோதரியைத் தான் தனது காதல் மனைவியாகக் கருதினான்.

    ராவணனுக்கு எப்போதும் நல் வழிகளையே போதித்தாள் மண்டோதரி. அதே போல ராமனின் மனைவியான சீதையை ராவணன் சிறைபிடித்து வந்த போதும், சீதையை விட்டுவிடுமாறு மண்டோதரி ராவணனுக்கு பலமுறை அறிவுறுத்தினாள்.

    சீதாதேவியைக் கவர்ந்து வந்தது, அறத்துக்குப் புறம்பானது என ராவணனுக்கு பலவாறும் அறிவுறுத்தினாள் மண்டோதரி. ஸ்ரீராமன் குறித்து எச்சரித்தும், மாரீசனின் வார்த்தையைச் சொல்லி, வழி தவறியவனைத் திருத்த முயன்றாள். மேலும், அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் துணை நிற்கும்; ஆனால், அறத்திலிருந்து விலகியவரை உடன்பிறப்பும் விலக்கி வைக்கும் என்பதை உணர்த்த முற்பட்டாள்.

    அதே சமயம் இராமன் சாதாரண மனிதன் அல்ல என்றும், அவர் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் என்பதையும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். ஆனால் பெண்ணாசை கொண்ட தனது கணவர் ராவணனை அழிக்கவே, ராமன் அவதாரம் எடுத்திருப்பதை மண்டோதரி உணர்ந்திருக்கவில்லை.

    ராவணனுக்கும், ராமனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் ராமபாணம் பாய்ந்து ராவணன் மண்ணில் வீழ்ந்ததும், தனது கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுதாள். பலவாறு புலம்பி அழுது ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்கள் பொருந்தியிருக்கும் அந்த ராவணனின் ஒப்பில்லாத மார்பினைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி தனித் தன்மையுடன் நின்று உரத்த குரலினால் அழைத்துப் பெருமூச்சு விட்டாள். பின் மண்டோதரி தனது உயிரை நீங்கினாள்.

    எண்ணற்ற சிறந்த நற்குணங்கள் வாய்க்கப் பெற்றும், தனது கணவரின் தீய குணத்தினால் மிகத் துயர முடிவை அடைந்தாள் மண்டோதரி. இவள் சீதைக்கு நிகராக இருந்தாலும், ராவணனுக்கு சீதையின் மீது ஏற்பட்ட ஆசையின் காரணமாக, தன்னுடனே இருக்கும் சீதைக்கு ஒத்த மண்டோதரியின் நற்குணங்களை அறியாமல் போனான் ராவணன்.

    இது புராண இதிகாசமாக இருந்தாலும் தற்போதைய பல்வேறு சம்பவங்களுக்கும் இது பதில் அளிக்கும் விதத்தில் உள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp