மழைக்கால உணவுகள் ஸ்பெஷல்

புளியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்பு வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மழைக்கால உணவுகள் ஸ்பெஷல்

பூண்டு தொக்கு

தேவையானவை:
பூண்டு - 30 பல்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வற்றல் - 3
வேர்கடலை - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: புளியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்பு வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகுமளவு நன்றாக வதக்கவும். அதனுடன் வேர்க்கடலையைச் சேர்க்கவும். பிறகு புளிக் கரைசலைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதிக்கும்போது சாம்பார் பொடி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்து எண்ணெய் மேலே தெளியும் போது இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.


முளைவிட்ட காராமணி கூட்டு

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2
சீனிக்கிழங்கு - 1
முளை கட்டிய காராமணி - 3 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 1
வற்றல் - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
இந்துப்பு - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: முளை கட்டிய காராமணி, சீனிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், வற்றல், பெருங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை, புதினா போட்டு வதக்கவும். அதனுடன் வேக வைத்தவற்றை சேர்க்கவும். அதனுடன் புளிக் கரைசல் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகள், இந்துப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தயிர் சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.


பச்சைப் பொரியல்

தேவையானவை:
பச்சை காராமணி - 200 கிராம்
குடமிளகாய் - 3 
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை காராமணி, குடை மிளகாய், பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கவும். பிறகு அந்தக் கலவையை அடுப்பில் வைத்து கரண்டியால் நன்றாகக் கலக்கி உப்பு சேர்த்து, மிளகாய்த் தூள், சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக தனியாத் தூள், கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு நெய் சேர்த்து இறக்கவும். சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.


சீரக சம்பா பிரியாணி

தேவையானவை:
சீரக சம்பா அரிசி - 1 கிண்ணம்
வெங்காயம் - 3
காராமணி - 1 கைப்பிடி அளவு
கேரட் - 2
குடை மிளகாய் - 1
தக்காளி - 2
நெய் - 2 தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி - சிறிது 
பூண்டு - 10
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா, தனியா தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1/2 கிண்ணம்
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: சீரகச் சம்பா அரிசியை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும். அகலமான கடாயில் நெய், கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு மெலிதாக அரிந்த வெங்காயம், காராமணி, கேரட், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதனுடன் புதினா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்க்கவும். பிறகு வேக வைத்த சாதத்தைச் சேர்த்து, கரம் மசாலா, தனியாத் தூள் போட்டு இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.


கேரட், முட்டை கோஸ் உப்புமா

தேவையானவை:
சேவை - 3 கிண்ணம்
கேரட், முட்டை கோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு
வெங்காயம் - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல் 
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கொதிக்கும் தண்ணீரில் சேவையைப் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு பொடியாக நறுக்கிய கேரட், முட்டை கோஸ் சேர்த்து நன்றாக வதங்கியதும், வடிகட்டி வைத்துள்ள சேவையைக் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி நெய் சேர்த்து இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com