மித்தாலியை ஆட்டத்திலிருந்து  ஒதுக்கியது ஏன்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  பல ஆண்டுகளாகச் செயல்பட்ட  மித்தாலி ராஜ், "பெண்கள் கிரிக்கெட்டில்' பல சாதனைகளை செய்தவர்.
மித்தாலியை ஆட்டத்திலிருந்து  ஒதுக்கியது ஏன்!


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  பல ஆண்டுகளாகச் செயல்பட்ட  மித்தாலி ராஜ், "பெண்கள் கிரிக்கெட்டில்' பல சாதனைகளை செய்தவர்.  சமீபத்தில் நடந்து முடிந்த  உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப்போட்டி வரை  கொண்டு சென்றதில் மித்தாலி ராஜின்  பங்களிப்பு அதிகம்.    

பெண்கள் கிரிக்கெட்டில் மித்தாலி நிகழ்த்திய சாதனையைத் தொடர்ந்து  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  அதிக ஓட்டங்கள் எடுத்த  இந்திய ஆண் கிரிக்கெட் வீரர்களான  ரோஹித் சர்மா, விராட் கோலியை  பின்னுக்குத் தள்ளி மித்தாலி ராஜ்  அதிக ஓட்டங்கள்  எடுத்தவர்   என்ற  சாதனை படைத்து கிரிக்கெட்  ஆட்டத்தில் முதலிடம்  பிடித்திருக்கிறார்.  மித்தாலி  80 இன்னிங்ஸில்  எடுத்திருக்கும் 2283  ஓட்டங்கள்,   இன்னும் சில காலத்திற்கு கிரிக்கெட் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்  இந்த சாதனை  லட்சிய   இலக்காக அமையும். 

இந்த  சாதனை  தருணத்தில்,  மித்தாலி  ஒரு பிரச்னையை எதிர் கொள்ள வேண்டி வந்துள்ளது.     மித்தாலியையும், அவரது ரசிகர்களையும்  ஏன்  இந்திய மகளிர் கிரிக்கெட் விளையாட்டிற்கும்  ஒரு பெருத்த  சேதாரமாக  அந்த பிரச்னைவிசுவரூபம் எடுத்துள்ளது.     

சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸில் நடந்து முடிந்த  "ஐசிசி மகளிர் 20  ஓவர் உலகக் கோப்பை' போட்டியில்,  மித்தாலி ராஜ் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 17-வது அரை சதம் ஆகும்.  இந்த  ஓட்டங்களை சேர்த்து,  டி20 ஆட்டங்களில் "அதிக ரன்கள் குவித்த இந்தியர்'  என்ற சிறப்பையும் மித்தாலி பெற்றுள்ளார். அவர் 80 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். மித்தாலி புதிய சாதனையை  ஏற்படுத்தும் வரை,  இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட்  விளையாட்டில்  2207 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தவர்  ரோஹித் சர்மா. 2102 ரன்களுடன்  விராட் கோலி இரண்டாவது இடத்தில்    இருந்தார். மித்தாலி முதலிடத்தைப் பிடித்ததும், ரோஹித்  இரண்டாவது இடத்திற்கும், கோலி மூன்றாவது  இடத்திற்கும் வந்து விட்டனர். 
சரி.. பிரச்னைதான் என்ன ? 

மகளிர் 20 ஓவர்  கிரிக்கெட்டில் நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் 2996 ரன்களும், மேற்கு இந்திய  அணியின் ஸ்டெபினி டெய்லர் 2691 ரன்களும் எடுத்து முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளார்கள். அந்த இலக்கை அடைய குறைந்தது இன்னும் 20 ஆட்டங்களிலாவது  மித்தாலி விளையாட வேண்டும்.  ஆட வாய்ப்பு கிடைத்தால்  மித்தாலி உலக சாதனை நிச்சயம் படைப்பார்.   இந்த சூழ்நிலையில் மித்தாலி  கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படவில்லை.

""இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் பவார்,  நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி  இருவரும்  எனக்கு  எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.  எனது  கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க   முயல்கிறார்கள்''  என்று மித்தாலி ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

""மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளாதது  எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துள்ளது'' என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு  கடிதம் மூலம் மித்தாலி தெரிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்  அணியில்  மித்தாலி  அனுபவம் மிகுந்த  மூத்த வீராங்கனை. என்கிற அடிப்படையில்   மித்தாலி  சில சலுகைகளை அனுபவித்தாரா இல்லை  எதிர்பார்த்தாரா  என்ற கேள்வி  ஒருபுறமும் ,   மூத்த வீராங்கனையிடம்  அலட்சியமாக ரமேஷ் பவார் நடந்து கொண்டாரா  என்ற கேள்வியும்  எழுந்துள்ளது. 

சமீபத்திய கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் மித்தாலி ராஜ்  விளையாட  அனுமதிக்கப்படவில்லை.  இந்தத் தொடரில் இரண்டு அரை சதங்கள்  விளாசித் தள்ளிய நிலையில்  மிதாலி ராஜ் திடீரென்று இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது  குறித்து எல்லா கோணத்திலிருந்தும் கடும் விமர்சனங்கள்  புயலாகக்  கிளம்பின.  அது காரணமாக முழு விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, மித்தாலி தடுக்கப்பட்டதில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். "நானும்  அருமையாக விளையாடிக் கொண்டிருந்தபோது அணியில் இருந்து நீக்கப்பட்டேன். மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்  ஆட வேண்டாம் என்று தடுக்கப்பட்டதில்  ஆச்சரியம் ஏதும் இல்லை. நான் நன்றாக விளையாடி கேப்டனாக இருந்தபோது என்னையும் இப்படித்தான் வெளியே  அமர வைத்தார்கள். இப்போது மித்தாலி ராஜ்  விளக்கப்பட்டிருக்கிறார்.  என்னை 15 மாதங்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கவில்லை. வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும்  நடக்கும்.  திறமைசாலிகளுக்கும்  சில வேளைகளில் கதவு மூடப்படும்.  மித்தாலி ராஜுக்கு இது முடிவு அல்ல; அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது'' என  கங்குலி  கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து முடிந்த  ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. லீக் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடி வென்ற இந்தியா, அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

""அணியின் மூத்த வீராங்கனையான மித்தாலி ராஜை இந்த போட்டிக்கு சேர்க்காதது நிச்சயம் பாதிப்புதான். அவரது அனுபவம் களத்தில் முக்கிய தருணங்களில் இளம் வீராங்கனைகளுக்கு உதவியாக இருந்திருக்கும்'' என்று மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி  கூறுகிறார்.

உடல்தகுதி நன்றாக இருந்தும்  மித்தாலி  ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பது  பெரும் விவாதமாக மாறியுள்ளது. 

""அரையிறுதி போட்டியில் மித்தாலி ராஜை இந்திய அணியில் சேர்க்காதது இமாலய தவறு. அவர் நீண்ட காலம் விளையாடியவர்.  பல இக்கட்டான தருணங்களை சமளித்தவர்'' என்று முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனான சாந்தா ரங்கசாமி  தனது கருத்தைத்  தெவித்துள்ளார்.   

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் "மித்தாலி ராஜை சேர்க்க வேண்டாம் என்று அணி நிர்வாகம் எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்.  அதே சமயம்,  மித்தாலியின் அனுபவம் மிகவும் மதிப்பு மிக்கது'' என்று  சொல்லியிருக்கிறார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்,  மித்தாலிக்கிடையே  உள்ள பனிப்போர்

காரணமாக  இந்த பிரச்னை உருவாராகியுள்ளது  என்று சொல்லப்பட்டாலும், ""பிரச்னைக்குக்  காரணம் ஹர்மன் ப்ரீத்  அல்ல,  பயிற்சியாளர் ரமேஷ் பவார்தான்  என்னை  அரையிறுதி போட்டியில் ஆடவிடாமல் செய்தார்.  அவரது முடிவை கேப்டன் ஹர்மன்ப்ரீத்  ஏற்றுக் கொண்டது  எனக்கு  ஹர்மன் ப்ரீத் மேல்  உள்ள ஒரே வருத்தம்.  ஹர்மனுடன்  எனக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை''  என்கிறார் மித்தாலி. 

இது குறித்து மித்தாலி  கூறுவது என்ன? 

உலக டி20 மகளிர்  கிரிக்கெட் தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் போனதிலிருந்து ரமேஷ் பவார்  என்னை ஓரங்கட்ட முயற்சி  செய்தார்.  நான்  எப்போதும் ஆட்டத்தின் துவக்கத்தில்  முதலாவது ஆட்டக்காரராக   களம் இறங்குவேன். என்னை நடுவில் ஆட களம் இறங்குமாறு   ரமேஷ்  பணித்தார்.  அதனால்,   நியூசிலாந்துடன்   நடந்த போட்டியில் இந்தியாவின்  தொடக்கம்,  ஓட்டங்கள் சரியாக அமையவில்லை.  அடுத்த போட்டியிலும்  என்னை மிடில்-ஆர்டரில் களம் இறங்குமாறு ரமேஷ்  கூறினார். ஆனால், நான்  தேர்வாளர்களிடம் இது பற்றி பேசி மீண்டும் துவக்கத்தில் களம் இறங்கினேன்.  அடுத்த இரண்டு போட்டிகளில் நான் அரை சதம் அடித்து அசத்தினேன்.  

ஆனால், இதை ரமேஷ் விரும்பவில்லை. நான், வலை பயிற்சியில்  ஈடுபட்டால் ரமேஷ்  அந்த இடத்திலிருந்து  இருந்து விலகி செல்வது,  நான் அவருடன்  பேச எத்தனித்தால்   அலைபேசியில்  பேசுவதாக  காட்டிக் கொண்டு போய்விடுவார். ரமேஷ்   என்னை  ஒதுக்குவது  எனக்கு மன உளைச்சலைத்  தந்தது.  அணி மேலாளரோடு பேசினேன்.  மேலாளர்,  என்னையும் ரமேஷையும்  அழைத்துப் பேசினார்.  அப்போது  ""தவறு நிகழ்ந்துவிட்டது''  என்று ரமேஷ் ஒத்துக் கொண்டார்.  என்றாலும்  நிலைமை  இன்னும் மோசமானது.   அயர்லாந்து போட்டியின்போது  எனக்கு  சிறிய காயம் ஏற்பட  ஒரு நாள் ஓய்வில் இருந்தேன். அடுத்த  போட்டியின் போது  நான்  ஆடத்   தயாராகிவிட்டேன்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி துவங்கும் முன் ரமேஷ் பவார் என்னை  அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கட்டளையிட்டார். "விளையாட வர வேண்டாம்' போன்ற அறிவிப்புகள் எப்போதும் மேலாளரிடம் இருந்து தான் வரும்.  ஆனால், பயிற்சியாளர் ஏன் நான் விளையாடுவதைத் தடுக்கிறார்  என்று எனக்குப் புரியவில்லை. என்னைப்  போட்டியில் ஆடவிடாமல்  தடுக்க  இப்படி அறைக்குள்  சிறை வைத்து இருக்கிறார்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.  

தொடர்ந்து கூறுகையில், ""அடுத்து அரையிறுதிப் போட்டியில் ஆட வேண்டிய நிலையில்,  இந்திய அணியில்  நானும்  இடம் பெறுவேன்  என்ற நம்பிக்கையில் இருந்தேன். மித்தாலி  விளையாட மாட்டார்  என்று  அனைவரிடமும்  ரமேஷ் சொல்லியிருக்கிறார்.  ஆட்டம் தொடங்கப் போகும் போதுதான் நான் விளையாட சேர்க்கப்படவில்லை  என்பதைத் தெரிந்து கொண்டேன்.  என்னைத் திட்டம் போட்டு  அவமானப்படுத்தி,  இந்திய அணியையும் அரையிறுதியில் வெல்ல விடாமல் செய்துள்ளார் ரமேஷ் பவார்'' என்று ஆக்ரோஷமாக  மித்தாலி தனது கடிதத்தில்  கூறியுள்ளார்.

"மூத்த  ஆட்டக்காரர், அதிக ஓட்டங்களை  எடுத்தவரை ஆட விடாமல் செய்தது சரியில்லை. மிகுந்த  அழுத்தங்களைத்  தரும் போட்டியில்,  அழுத்தங்களை லாகவமாகக் கையாண்டு  அனுபவமுள்ளவரை ஆட்டத்திலிருந்து  விலக்கியது விவேகமில்லை. அவர் மீண்டும் விளையாட வர வேண்டும். சாதனைகளை ஏற்படுத்த வேண்டும்..." என்கிறார்  மூத்த  கிரிக்கெட்  ஆட்டக்காரரான பிரீத்தி ஸ்ரீநிவாசன். இவரது எதிர்பார்ப்புதான்  மித்தாலியின்  ரசிகர்களுக்கும். கிரிக்கெட் வாரியம்  நல்ல முடிவை எடுக்குமா  ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com