சமூகத்திற்கு மாறான பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்

"என் திறமைகேற்ப பாத்திரங்கள்தான் என்னை தேடிவந்தன. எனக்கேற்ற வித்தியாசமான கதைகளுடன் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினாலும், அனைத்துமே திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக கூற முடியாது."
சமூகத்திற்கு மாறான பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்

"என் திறமைகேற்ப பாத்திரங்கள்தான் என்னை தேடிவந்தன. எனக்கேற்ற வித்தியாசமான கதைகளுடன் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினாலும், அனைத்துமே திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக கூற முடியாது."
 கடந்த 24 ஆண்டுகளாக பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள தபு, நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை விட வேண்டாமென்று ஒதுக்கிய படங்களே அதிகம். "எனது கொள்கை எனது வாழ்க்கை' என்ற உறுதியோடு திரைப்படங்களில் நடித்துவரும் தபு அதற்கான காரணங்களை சொல்கிறார்:
 இதுவரை நீங்கள் நடித்த படங்கள் உங்களுக்கு திருப்தியளித்துள்ளதா?
 இதுவரை நான் காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், திரில்லர் என பல வகையான பாத்திரங்களை ஏற்றிருந்தாலும் இதில் எது பிடித்தது என்று கூறுவது சுலபமல்ல. இப்போதுள்ள தயாரிப்பாளர்கள் வித்தியாசமான படங்களை தங்களுடைய பாணியில் தயாரிக்க விரும்புகிறார்கள். காமெடி படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமும் குறைவு.
 நான் நடித்த படங்களைவிட நடிக்க மறுத்த படங்களே அதிகம், ஜாவீத் அக்தர் சாப் கூட கேட்பதுண்டு, "வரும் வாய்ப்புகளை ஏன் மறுக்கிறாய் ?'' நான் நடிக்க மறுப்பது கூட பெரிய விஷயமாக பேசப்பட்டது. படங்களில் நடிக்க நான் உடனடியாக ஒப்புக் கொள்வதில்லை எனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைவிட படத்தை வெற்றிப் பெற செய்யமுடியுமா? என்பதை யோசித்த பிறகே ஒப்புக் கொள்வேன். ஏற்கெனவே நடித்த படங்களின் கதையைப் போன்று இருக்கிறதா என்று யோசித்து முடிவெடுத்ததால் நல்ல அனுபவம் பெற முடிந்தது.
 சமூகத்திற்கு மாறான பாத்திரங்களில் நடிக்க மறுப்பது ஏன்? பணம் உங்களுக்கு தேவையில்லையா?
 என்னுடைய இளமை காலத்தில் குல்சார், மகேஷ் மஞ்சரேக்கர் போன்றோர் கடினமான பாத்திரங்களை எனக்களித்ததும், அந்த சமயத்தில் நான் நடித்த படங்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் திறமைகேற்ப பாத்திரங்கள்தான் என்னை தேடிவந்தன. எனக்கேற்ற வித்தியாசமான கதைகளுடன் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினாலும், அனைத்துமே திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக கூற முடியாது. ஆனால் எந்த பாத்திரத்திற்கும் பொருந்துவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் வெற்றிப் பெற்றன. பாலிவுட்டை பொருத்தவரை பணத்தை ஏற்க மறுப்பது சுலபமானதல்ல. எப்போதுமே ஆர்வத்தைத் தூண்டச் செய்யும். பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. காரணம் வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டும். நல்ல உடைகள் அணிய வேண்டும். பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டுமென்ற ஆசைகளை நடிப்பதன் மூலம் கிடைத்த வருவாயில் நிறைவேற்றிக் கொண்டேன்.
 இருபதாண்டுகளுக்கு மேல் நடித்துவரும் நீங்கள், இப்போதுள்ள மாற்றத்தைப் பற்றி கூற முடியுமா?
 இருபதாண்டுகளுக்குமேல் திரையுலகில் இருந்தாலும் சினிமாவை பற்றிய சிந்தனைகள் மிக குறைவு என்பதால் சினிமாவைப் பற்றிய விவாதங்கள்களில் நான் கலந்து கொள்வதில்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இன்று திரையுலகில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
 நவீன தொழில்நுட்பமும், உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. இன்று திரையில் பார்க்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நிஜமென்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் இதுபோன்ற பாத்திரங்களை பிரதிபலிக்கும் நடிக, நடிகைகளுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 அதே சமயத்தில் சமூகத்திற்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்க நான் ஒப்புக் கொள்வதில்லை. எனக்கென்று திரையுலகில் ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற திட்டம் ஏதுமில்லை. "எனது கொள்கை எனது வாழ்க்கை' என உறுதியோடு இருக்கிறேன். இன்றைய நடிகைகள் என்ன செய்யலாமென்று நினைக்கிறார்களோ அதை மட்டும் செய்ய வேண்டும். மனதிற்கு பிடிக்காததை செய்ய மறுக்கலாம் என்பது என்னுடைய கருத்தாகும்.
 சிறுவயதில் நடிகையாவோம் என்று நினைத்ததுண்டா?
 என்னுடைய சிறுவயதில் சினிமா என்பது வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு என்று மட்டுமே நினைத்தேன். படிக்கும்போது நிறைய படங்கள் பார்த்ததுண்டு. நடிகையாக வேண்டுமென்ற திட்டம் ஏதும் இருந்ததில்லை. பின்னர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டாலும் சினிமாவைப் பற்றிய அறிவாற்றலோ, சிந்தனைகளோ இல்லை. நிறைய எழுதுவேன். அவை அனைத்தும் என் ஆத்ம திருப்திக்காக. இதனால் படம் தயாரிக்க வேண்டும் - இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏதுமில்லை. அதுபோன்ற பெரிய பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இல்லை'' என்றார் தபு.
 - பூர்ணிமா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com