இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா..?

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா..?

இங்கிலாந்தைச் சேர்ந்த  தாம்சன்  ராய்ட்டர்ஸ்  என்ற  நிறுவனம் நடத்திய ஆய்வில்  "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத  நாடுகள் பட்டியலில்  இந்தியா  முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக  தகவல் வெளிவந்துள்ளது.  இதே  ந

இங்கிலாந்தைச் சேர்ந்த  தாம்சன்  ராய்ட்டர்ஸ்  என்ற  நிறுவனம் நடத்திய ஆய்வில்  "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத  நாடுகள் பட்டியலில்  இந்தியா  முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக  தகவல் வெளிவந்துள்ளது.  இதே  நிறுவனம் 2011}இல்   இதே தலைப்பில் நடத்திய  ஆய்வில்  இந்தியாவுக்கு நான்காம் இடம் தரப்பட்டிருந்தது. இந்த  ஆய்வினை  மத்திய அரசின்  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை  முற்றிலும் மறுத்துள்ளது.  உண்மையிலேயே  இந்தியாவில்  பெண்களுக்குப்  பாதுகாப்பில்லையா  என்று  ஒரு பெண் வழக்கறிஞரிடமும்,  பயண ஆர்வலரிடம்  கருத்துக்களைக்  கேட்டோம்.
வழக்கறிஞராகவும்,  பெண்களின் உரிமை, பாதுகாப்பு குறித்து  இலவச ஆலோசனை வழங்கியும், ஊடகங்களில்  பெண்களுக்காக  எழுதியும்  குரலும் கொடுத்து வரும்  சென்னையைச் சேர்ந்த வைதேகி பாலாஜியிடம்   கூறியது:
""உலகத்தில் எத்தனைதான் தொழில்நுட்ப  வளர்ச்சி வந்தாலும் பெண்கள்   உச்சப்பொறுப்புகளில்  அமர்ந்தாலும் அவர்கள் எதிர்கொண்டே  ஆக வேண்டிய சில பிரச்னைகளில் ஒன்று தான் பயணத்தின்போது எதிர்கொள்ளும்  தொல்லைகள்.  என் பள்ளிப்படிப்பிலிருந்து சட்டப்படிப்பு வரை  விடுதியில்  தங்கிதான் படித்தேன்.  திருமணம் செய்துக் கொண்டு அகமதாபாத் செல்லும் வரையிலும் தனியாகப்  பயணித்தேன் என்று சொல்வதற்கு ஒரே அனுபவம் கூட கிடையாது.  எப்போதும்  ஒரு உறவினர்  எங்கு போனாலும்  பாதுகாப்பாளராக உடன் இருப்பார்.   அப்படித்தான் வளர்க்கப்பட்டேன்.   
தனியாக பயணித்த அனுபவம் இல்லாத நான் முதன் முதலாக இரு சக்கர வாகனத்தில் முன்பின் தெரியாத  அகமதாபாத் நகரிலிருக்கும்  குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு இருபது  கிலோமீட்டர் தூரம்  வாரத்தில் ஐந்து நாட்கள் தனியாக பயணம் செய்திருக்கிறேன். என் அனுபவத்தை பொருத்தவரை பெண்களுக்கு அகமதாபாத்தை போன்றதொரு பாதுகாப்பான  ஓர்  இடத்தை இந்தியாவில் வேறெங்கும் காட்டிவிட முடியாது.  வழித்தடம் தெரியவில்லை   என்று யாரிடமாவது கேட்டால், நாம் தனியாக கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வரும்வரை அவர்கள் வாகனத்திலேயே நம்மோடு வருவார்கள். "பெஹன்' (சகோதரி)  என்று பெண்களை  அழைக்கும்  அன்பும்,   கொஞ்சம் கவர்ச்சியாய்  உடை  அணிந்த  பெண்  எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தாலும்   ஆண்கள்   அந்தப் பெண்ணின்  கண்களை  மட்டும் பார்த்து பேசுவார்கள்.    அந்தப் பெண்ணின்  ஆடையில் கவனம் செலுத்தமாட்டார்கள். பெண்களின் கண்களை நேருக்கு நேராய்  மட்டும்  பார்த்து பழகும் நேர்மையும் கண்ணியமும் அவர்களுக்கே  உரித்தானது.  இது என் சொந்த அனுபவம்.  அகமதாபாத்தும்  இந்தியாவின்  ஒரு  பாகம்தான்..!
நல்லதும்  கெட்டதும்  சேர்ந்தது தான் வாழ்க்கை, பயணத்தின் போது பெண்கள் சந்திக்கிற  சவால்கள் என்று யாராவது  ஒரு பெண்ணிடம்   கேளுங்கள்.  நிச்சயம்  ஓர் அனுபவமாவது இருக்கும்.  பஸ், ரயில், டாக்சி  இவற்றில் பயணம் செய்யும்  பெண்களிடம் அத்து மீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன.  இளம் நடிகையிடம்  விமானப் பயணத்தில்  ஆண் பயணி  வரம்பு மீற..  அந்த நடிகை   புகார்  செய்த  விஷயம்  இப்போது பழையதாக  போயிருக்கலாம்.  எனக்குத் தெரிந்த பெண் ஒருவர்  என்னிடம் பகிர்ந்து கொண்ட  அவரது அனுபவத்திலிருந்து சில தகவல்களை இங்கு பதிவிடுகிறேன்.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சுமார் மூன்று மணிநேர விமான பயணம் அவர் திருமணமான நடுத்தர வயதுடைய பெண். விமானத்தில் நிறையதடவை பயணித்திருந்தாலும் அவர் தனியாக பயணித்தது  அதுதான் முதல் முறை.  இரவு எட்டு மணிக்கு விமானத்தில் ஏறிய அவருக்கு ஆரம்பமே திகிலை கொடுத்திருக்கிறது விமானத்தின் பின் பக்கம் இரண்டு வரிசைக்கு முன்பாக அவருக்கான சீட் ஒதுக்கப்பட்டிருந்தது, அவருக்கு இரண்டு மூன்று முன்வரிசையிலும்  பின் வரிசையிலும் ஒரே ஒரு பெண் பயணிகள் கூட இல்லை.  நல்லவேளையாக அவரது பக்கத்துக்கு இருக்கைக்கு யாரும் வரவில்லை என்ற தைரியத்தில்  கைப்பையை துணைக்கு வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.   அவருக்கு எதிரே இருந்த வரிசையில் ஒரே ஒரு ஆள் மட்டும்தான், அவருடைய பின் வரிசையிலும் ஒரே ஒரு ஆள் மட்டும் தான். எதேச்சையாக எதிர்பக்கம் பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது அவன் இவரையே உற்று பார்ப்பதை உணர   முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் அந்தப் பெண்.  
சற்று நேரம் கழித்தும் அவன்   அந்தப் பெண்ணை   வைத்த கண்ணை மாற்றாமல்  குறுகுறு என்று பார்ப்பது தெரியவர,  மிதமான மின்விளக்கின் வெளிச்சத்தில்  மிரள மிரள  சுற்றிலும் பார்த்தார்.   விமானப் பயணத்தில்  இன்னொரு பெண்ணாக இருந்த  விமானப்  பணிப்பெண்ணும் எங்கோ உட்கார்ந்திருந்தார்.  அந்த  ஆணின்  வெறித்த பார்வை   அந்தப் பெண்ணிடம்   பயத்தை கூட்டியிருக்கிறது,  அவன் பார்வையைத்  தவிர்க்க,  இருக்கை  மாறி  அந்தப் பெண் அமர்ந்தார்.  அவர் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கைக்கு இடம் மாறி உட்கார்ந்துவிட்டு  முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டுள்ளார்.  வேறு ஒரு  ஆசாமி  கழிப்பறைக்கு  செல்லும்போது அந்தப்  பெண்மணியைப்   பார்த்து சிரித்திருக்கிறான்.
  அந்தப் பெண்மணியிடம் நெருங்கி,  ""உங்களுக்கு வலதுபக்கம் சீட்டில் இருக்கிற பையை எடுங்க நான் உட்கார்றேன்'  என்று கேட்டிருக்கிறான்.  இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "முடியாது..' என்ற ஒற்றைச்  சொல்லை அவர் மறுப்பாக தெரிவித்திருக்கிறார், அவனும்  விடாபிடியாக  "இடது புறம் உள்ள இருக்கை காலிதானே... அங்கே   உட்கார்ந்துக்கிறேன்... கொஞ்சம் தள்ளி உட்காருங்க''  என்று மீண்டும் வற்புறுத்தி இருக்கிறான். மீண்டும்  இவர்  மறுத்திருக்கிறார். பெங்களூருவில்  விமானம் தரை இறங்கிவிட்டால்   அபாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடும்  என்று  கடிகாரத்தைப் பார்த்தபடி இருந்தாராம்.  சீண்டுதல், தொடுதல்,  உரசிவிட்டுபோதல் இவைதான்  "தொல்லை.. துன்புறுத்தல்'  என்றில்லை எல்லாவற்றிற்கும்  மேலாக  இதுபோன்று பயத்தை கொடுத்து .. என்ன நடக்குமோ  என்று பதறச்  செய்யும்  "மனக்கொடுமை'  (mental  agony).  பீதியை விட    பல மடங்கு  கொடியது.  என்று அவர் ஆதங்கத்துடன் சொன்னபோது  ""விமான பணிப்பெண்ணிடம் சொல்லவில்லையா?'' என்றேன்.  ""எனக்கு இந்தி  ஆங்கிலம் தெரியாது,  புகார் கொடுக்க துணைக்கு யாரையாவது கூப்பிடணும்,  இவன் உத்துபாக்கறான்.. என்னைப் பார்ப்பதற்காக  அவன்  கழிப்பறைக்குப்   போவதும் வருவதுமாக இருக்கிறான்'' என்று புகார் கொடுத்தால் என்னை ஒரு மாதிரியாகப்   பார்ப்பார்கள்.   இது எனக்கும் அசிங்கம் இல்லையா அதனால்  மெüனமாக இருந்துவிட்டேன்.
விமானத்தில் சீட் பெல்டை  அணிவதற்கு விளக்கம் சொல்லும்போது, பாலியல் தொந்தரவுகள் நேர்ந்தால் உடனடியாக எங்களிடம்  புகார்  செய்யுங்கள்  என்ற விளக்கத்தையும் சேர்த்தே  சொல்ல  வேண்டும்.   
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்  இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை  முதல் இடத்தில் நிறுத்தியிருக்கிறது இங்கிலாந்து நாட்டின் ஒரு அமைப்பு நடத்திய  ஆய்வு அறிக்கை. வெளிநாடுகளில் குறிப்பாக  அமெரிக்காவில் நடக்கும்  பெண் கொடுமைகளுடன் ஒப்பிட்டால்  இந்தியாவில்   வீட்டிலும், வெளியிலும்,  வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் நடக்கும்  பெண் கொடுமைகள் குறைவுதான். அதற்காக,  இந்திய பெண்களுக்கு  குறைவாகத்தானே  கொடுமைகள் உதாசீனங்கள்  நடக்கின்றன என்று சும்மா  இருக்க முடியாது.  பெண்கள் அச்சமில்லாமல் அணுகும் பாதுகாப்பான சட்ட அணுகுமுறையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.   சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்,  பெண்கள்  மீது  கரிசனம்  காட்டுங்கள். பெண்ணுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்பை விட  அவசியமானது சகமனிதன் கொடுக்கும் பாதுகாப்பு''  என்கிறார்  வைதேகி  பாலாஜி.

சமூக, பயண ஆர்வலர் மூகாம்பிகை கூறியது:


""உலக நாடுகள் பலவற்றிற்கும்,  இந்தியாவின்  அனைத்து  பாகங்களுக்கும்  பெரும்பாலும்  தன்னந்தனியாக  சுற்றுலா சென்று  வந்திருப்பவர் பொள்ளாச்சியைச்  சேர்ந்த மூகாம்பிகை.  சமூக,  பயண ஆர்வலர். "இந்தியாவை  மோசமான நாடு  என்று  கருப்புச் சாயம் பூசும்   இந்த  ஆய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.  இந்தியாவில்  சுமார் 135  கோடி மக்கள் வாழ்கிறார்கள். குற்ற நிகழ்வுகளை  மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி ஒப்பிடும் போது  இந்தியாவில்  குற்றங்கள் மற்ற  நாடுகளைவிட   குறைவுதான்.
இந்தியாவின்  மூலை  முடுக்குகளில்  தனியாகப் பயணம் செய்து வந்திருக்கிறேன்.  இவற்றில்  இரவு நேர பயணங்களும் அடக்கம்.  ஒரு பிரச்னையும்  நடந்ததில்லை. பாதுகாப்பாகவே   உணர்ந்திருக்கிறேன்.  பெண்களுக்கு வீட்டில் வெளியில்  நடக்கும்  வன்முறைகள்  குறித்து  சம்பந்தப்பட்டப்  பெண்  தான் நம்பும்  பெண் அல்லது ஆணிடம் சொல்ல வேண்டும். பள்ளியில் இது குறித்த  விழிப்புணர்வினை உருவாக்க வேண்டும். வீட்டில்  வெளியில் இப்படி  நடந்தால்  இவர்களிடம்  புகார் செய்யுங்கள் அல்லது  ஆசிரியர்களிடம் கூறுங்கள்  என்று  சொல்லும் போது  மாணவிகளிடத்தில்  மன  திடம் உருவாகும்.  வன்முறைகளுக்கு எதிராகக்  குரல்  எடுப்பார்கள்'' என்கிறார் மூகாம்பிகா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com