பெண்களும் - நீரிழிவும்!

பெண்களும் - நீரிழிவும்!

பெண்களுக்கான நீரிழிவு, கர்ப்பக்கால நீரிழிவு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு "திவாஸ்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

பெண்களுக்கான நீரிழிவு, கர்ப்பக்கால நீரிழிவு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு "திவாஸ்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது ஆண்டுதோறும் நீரிழிவு குறித்த கருத்தரங்கம் நடத்திவருகிறது. இந்த ஆண்டிற்கான கருத்தரங்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இது குறித்து "திவாஸ்' அமைப்பின் பொறுப்பாளர் மருத்துவர் மாலதி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நீரிழிவைப் பொருத்தவரைக்கும் அது பரம்பரை நோயாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நாம் என்ன மாதிரியான உணவு சாப்பிடுகிறோம், எவ்வளவு நேரம் உடற் பயிற்சி செய்கிறோம், என்ன மாதிரி மன அழுத்தத்தில் இருக்கிறோம். தூக்கமின்மை. எவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கிறோம் என்பதை பொருத்துதான் ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதும், வராததும்.
முன்பெல்லாம் பெண்கள் அரைப்பது, இடிப்பது, புடைப்பது, துடைப்பது, பெருக்குவது என எல்லாம் அவர்கள் செய்து வந்தார்கள். அதுபோன்று முன்பெல்லாம் எங்கு செல்வதானாலும் பெரும்பகுதி தூரம் நடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. இப்போது நமது லைப் ஸ்டைல் மாறிவிட்டது.
சாதாரணமானவர்கள் வீட்டில் கூட இப்போது மிக்ஸியும், கிரைண்டரும், மாப்பும் இருக்கிறது. இதெல்லாம் பெண்களின் சுமையைக் குறைத்துவிட்டது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தற்போது இதுவே பெண்களின் நீரிழிவுக்கு காரணமாகி இருபதும் மறுக்க முடியாதது.
இதுதவிர, தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதனால் அலுவலகம், வீடு, குழந்தைகள் என அவர்களுக்கு இடத்துக்குத் தகுந்த மனஅழுத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. வீடு திரும்பியதும் மீண்டும் அவர்களுக்காக வீட்டு வேலைகள் காத்திருக்கிறது. இது தொடர்கதை ஆகி போனது. அதுபோன்று பெண்களின் வாழ்க்கைமுறையைப் பார்த்தாலும் பூப்பெய்துதல், மாதவிலக்கு, கர்ப்பம், பிரசவம், மாதவிலக்கு நின்று போதல் என்று எல்லாமும் ஏனோ பெண்களுக்கே பணிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் உலகளவில் பார்த்தால், பெரும்பகுதி பெண்களுக்குதான் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது, வாதம் வருகிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது, நீரிழிவு ஏற்படுகிறது, பெண்களின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. தற்போது உலகளவில் 400 மில்லியன் பேருக்கு நீரிழிவு உள்ளது என்றால் அதில் சரிபாதி பெண்களுக்கு உள்ளது.
அதே போன்று நம்மூர் பெண்கள் 60 - 70 சதவீதம் கிராமத்தில் இருப்பவர்கள்தான். பண வசதி குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் தங்களின் கணவரையும், குழந்தைகளை கவனிப்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறார்களே தவிர, தங்கள் உடல்நலன் மீது அக்கறை கொள்வதில்லை. அதுபோன்று சிறு வயதில் அப்பாவை சார்ந்திருப்பார்கள், பிறகு கணவர், பிறகு தனது குழந்தைகள் என அடுத்தவர்களை சார்ந்தே இருப்பதும், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் தான் தனக்காக செலவு செய்துகொள்ள நினைப்பதில்லை. இதன் அடிப்படையில்தான் உடலில் ஏதவாது பிரச்னை இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்லாமல், இது இதனால்தான் வந்திருக்கும் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். நோய் முதிர்ந்த நிலையில் செல்லும்போது அவர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது.
கடந்த ஆண்டு 30 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 15 சதவீத கர்ப்பிணி பெண்களுக்குக் கர்ப்பகால நீரிழிவு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த தாயையும் பாதிக்கும், குழந்தையையும் பாதிக்கும். கர்ப்பக் கால நீரிழிவு உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 15-20 வயதிலேயே நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது. இது குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் "திவாஸ்' தொடங்கினோம். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என எந்த இடத்தில் எல்லாம் பெண்களுக்கு நீரிழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சென்று உணவு பழக்கங்கள், உடல் பயிற்சி, மன அழுத்தம், கொழுப்பு, கர்ப்பகால பராமரிப்பு, பிபி போன்றவற்றை பற்றி எல்லாம் பேசி வருகிறோம்.
பெண்கள் நீரிழிவு வராமல் தற்காத்துக் கொள்ள, ஹைஸ் ஸ்கூல் வந்துவிட்டாலே அவர்கள் ஜங்க் புட் எல்லாம் சாப்பிடாமல், காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், கட்டாயமாக 14- 15 வயதிலிருந்தே உடற்பயிற்சி தொடங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருக்க வேண்டும்.கூடிய மட்டும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் , அதுபோன்று சின்னச் சின்ன வீட்டு வேலைகளை சிறுவயதிலேயே பழக்கிக் கொள்ள வேண்டும். கூடிய மட்டும் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட பழக வேண்டும். முன்பெல்லாம் சமையலில் பெரும்பாலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டார்கள், கடலெண்ணெய்யும், தேங்காய் எண்ணெய்யும் சமையலில் மாறிமாறி வரும். அதுதான் சரியான முறை. ஆனால் நாம் இப்போது ஒரே எண்ணெய்யைத்தான் சமையலுக்கு உபயோகப்படுத்துகிறோம். அப்படி செய்யக் கூடாது. இவையும் நீரிழிவும், இதய நோயும் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். என்பதையெல்லாம் எடுத்து கூறுகிறோம்.
அதுபோன்று ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததுமே, குறைந்தது ஆறுமாத காலமாவது சரியான நேரத்துக்கு சரியான உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் எடை அதிகம் இருந்தால் குறைக்க வேண்டும். குறைவாக இருந்தால் அதிகரிக்க வேண்டும். ரத்த சோகை இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும், மன அழுத்தம், ரத்த அழுத்தம், சரியான தூக்கம் போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெரும்பாலான பெண்களின் கர்ப்பக்கால நீரிழிவு மட்டுமில்லாமல், குழந்தையின்மையும் தடுக்க முடியும்'' என்றார்.
- ஸ்ரீதேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com