Enable Javscript for better performance
புடவையில் பாரம்பரிய சிலம்பம்!- Dinamani

சுடச்சுட

  
  mm6

  2016-ஆம் ஆண்டு தேசிய கைத்தறி தினத்தன்று, மராட்டிய மாநிலப் பெண்கள் புடவை அணியும் பாணியில் சாதாரண கைத்தறி புடவை அணிந்து தமிழ்ப் பெண்ணான ஐஸ்வர்யா மணிவண்ணன், சிலம்பம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி, லட்சகணக்கானவர்கள் பார்வையில் வைரலாக பரவியது. கைத்தறி விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோ, பரபரப்பை ஏற்படுத்துமென யாருமே எதிர்பார்க்கவில்லை. எனக்கு கைத்தறி ஆடைகள், புடவைகள் மிகவும் பிடிக்கும். அதைவிட, சிலம்பம் மிகவும் பிடிக்கும் என்று கூறும் ஐஸ்வர்யா சென்னையைச் சேர்ந்தவர்.
   தமிழகத்தில் பிரபலமான வீர விளையாட்டு எனப்படும் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அகத்திய முனிவர் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிலப்பதிகாரம், சங்க கால இலக்கியங்களில் சிலம்பம் கம்பு சூத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் சிலம்பம் வீர விளையாட்டாக கருதப்பட்டதோடு, உலகில் உள்ள பழமையான வீரவிளையாட்டுகளில் சிலம்பம் முன்னோடியாக கருதப்படுகிறது.
   சிலம்பம் ஆட முக்கிய தேவை மூங்கில் கொம்புகள். "சிலம்' என்பதற்கு மலை என்று பொருள், "பிரம்பு' என்பது மூங்கிலை குறிக்கும். மான் கொம்பு, வேல் கொம்பு, வாள், சுருள்வாள் போன்றவைகளும் சிலம்பாட்டத்தில் பயன்படுத்துவதுண்டு. பண்டைய தமிழ் மன்னர்கள் காலத்தில் போர்களின்போது சிலம்பம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆங்கிலேயர்களை ஜான்சிராணி எதிர்ப்பதற்கு முன்பே, தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வேலுநாச்சியார் சண்டையின் போது எதிராளியை தாக்க சிலம்பத்தைப் பயன்படுத்தியதாகவும் வரலாறு கூறுகிறது.
   ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் சிலம்பம் பெரும்பாலும் கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் இடம் பெறும் கலையாக மாறியது. இதற்காக உருமி மேளம் உருவாயிற்று. கடந்த சில ஆண்டுகளாக சிலம்பமும் ஒரு விளையாட்டாக கருதப்பட்டு தனிப்பட்ட அமைப்புகள், குழுக்கள் பயிற்சியளிக்க தொடங்கி உலக அளவில் உஸ்பெகிஸ்தான், தைவான், போர்ச்சுகல், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிரபலமடைந்து விளையாட்டு பட்டியலில் இதுவும் அங்கீகாரம் பெற்றது. கராத்தே, பயிற்சியில் வழங்குவது போன்று பெல்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து ஐஸ்வர்யா கூறியது:
   சிலம்பம் கற்பதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
   ஐந்தாண்டுகளுக்கு முன் பரத நாட்டியம் கற்று வந்தபோது கூடவே சிலம்பம் கற்பது நடன கலைஞர்கள் உடற்கட்டு ஒரே சீராக இருக்க உதவும் என்று நடன ஆசிரியர் கூறினாராம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிலம்பம் பயிற்சியளித்த ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான அழகர்சாமியிடம் பயிற்சிப் பெற்ற மடக்குளம் ரவி ஆசான் மூலம் பவர் பாண்டியன் ஆசானிடம் சிலம்பம் பயிற்சி பெற தொடங்கினேன்.
   உடல் மொழிக்கு சிலம்பம் தீவிர உணர்வுகளை அளிக்கக் கூடியது என்றாலும், சில நேரங்களில் பயிற்சியின்போது காய மேற்பட்டால் வலுக்கட்டாயமாக ஒய்வெடுக்க வைத்துவிடும். இருந்தாலும் பரத நாட்டியமா? சிலம்பமா? என்ற கேள்வி எழுந்தபோது சிலம்பம் பயிற்சி பெறுவதையே தேரந்தெடுத்தேன்.
   சிலம்பம் நமக்குள் தற்காப்பு உணர்வு, உறுதி, சுயமரியாதை, பிறருக்கு மரியாதை அளித்தல் போன்றவைகளை தூண்டுகிறது. இதனால் ஒரே விஷயத்தில் மட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நம் உடலை இடதுபுறமாகவும், வலது புறமாகவும் சம அளவில் இயக்க சிலம்பம் உதவுகிறது. இதனால் சிந்திக்கும் ஆற்றல் கூடுகிறது. இது ஒரு தற்காப்பு கலை. இதை கற்பதால் உடல், மனம் இரண்டும் உறுதிபடும்.
   அதுசரி, புடவையில் சிலம்பம் எப்படி?
   நமது பாரம்பரிய கைத்தறி ஆடைகள் நெசவாளர்களின் கைத்திறனையும், தரத்தையும், மதிப்பையும் தொனிப்பவை. அதை மேலும் மேம்படுத்துவதற்காக புடவை அணிந்து சிலம்பம் ஆடுவது போல் வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். இதை பார்த்தவர்கள் இ}மெயில் மூலம் தொடர்பு கொள்ள துவங்கினர். பாரம்பரிய வீர விளையாட்டை மற்றவர்களுக்கு கற்றுத் தருவதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். எனக்கும் சிலம்பத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் ஆவண படமொன்றை தயாரிக்கவுள்ளேன் என்கிறார் ஐஸ்வர்யா.
   -பூர்ணிமா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai