சுடச்சுட

  
  mm15

  வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது சிறிய அசம்பாவிதம் நடந்துவிட்டால் கூட "எல்லாம் குடி முழுகிப் போய்விட்டது.. எதிர்காலம் இனி இருண்டு போகும்..' என்று பரிதவிக்கும் பலர் இருக்கிறார்கள். இரண்டு கண்களாலும் பார்க்க இயலாதவர், அதுவும் ஒரு பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பலருக்கும் வழிகாட்ட வந்திருக்கிறார். முற்றிலும் பார்வை இழந்த பிராஞ்சல் பாட்டீல் மும்பை உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர். கேரளம் எர்ணாகுளம் மாவட்ட உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்தியாவில் முதல் முறையாக, பார்வையற்ற ஒருவர், அதிலும் பெண் அதிகாரி, மாவட்ட (பயிற்சி) உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது ஒரு சாதனை. உழைப்பும் மன உறுதியும் இருந்தால் கண் பார்வை இல்லாமலிருந்தாலும் வாழ்க்கையில் சாதனை படைக்கலாம் என்று நிரூபித்திருப்பவர் பிராஞ்சல்.
  "எட்டு வயது வரை ஓடி விளையாடி.. பள்ளி சென்று வந்து கொண்டிருந்தேன். கண்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் வகுப்பில் சக மாணவி பென்சிலால் என் கண்ணைக் குத்த .. பென்சிலும் கண்ணில் ஆழமாக இறங்க.. ஒரு கண் பார்வை பறி போனது. கண்ணில் ஏற்பட்ட காயத்தால் உயிர் போகிற வலி. காயத்தை ஆற்றவும், வலியைக் குறைக்கவும் டாக்டர்கள் மருந்துகள் தந்தார்கள். இந்த மருந்துகளின் பின்விளைவுகள் இரண்டாவது கண்ணையும் பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தார்கள்.
  அவர்கள் சொன்ன மாதிரியே, ஓர் ஆண்டிற்குள் இரண்டாவது கண்ணின் பார்வையும் போய் விட்டது. "எல்லாம் மகளின் தலை விதி..' என்று என் பெற்றோர் முடங்கிவிடவில்லை. என்னையும் முடக்கிவிடவில்லை. பார்வையில்லாதவர்கள் பயிலும் பள்ளியில் என்னைச் சேர்ந்த்துவிட்டார்கள்.
  பிரெய்ல் முறையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். மும்பையில் பிரசித்தி பெற்ற கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன். கல்லூரிக்கு வீட்டிலிருந்து தனியே பஸ்ஸில் வந்து போவேன். பலரும் நான் பஸ் ஏற இறங்க.. இருக்கையில் அமர உதவுவார்கள். "இவ்வளவு கஷ்டப்பட்டு நீண்ட தூரம் தனியாகப் பயணித்து படிக்கணுமா'. அப்படிப் படித்து என்னதான் சாதிக்கப் போகிறாய்?' என்று கேட்டவர்களும் உண்டு. இரவு போனால் பகல் வரும் . எனக்கு எல்லாம் இரவாகவே மாறிவிட்டது. இருந்தாலும் , மனதை உடைந்து போக விடவில்லை. "என்ன இந்த வாழ்க்கை' என்று யாரையும் நிந்திக்க தோன்றவில்லை .
  முதுகலை படிக்க டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். பிறகு பிஎச்டி செய்ய பெயரைப் பதிவு செய்தேன் . அப்போதுதான் நாமும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கணினி விஞ்ஞானத்தில் அதீத முன்னேற்றம் காரணமாக புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் மென்பொருள்கள் எனக்குக் கை கொடுத்தன . இந்த மென்பொருள்கள், படிக்க வேண்டிய புத்தகங்களைக் கணினி வழியாக வாசித்துக் காட்டும். அந்த மென்பொருளை என் மடிக் கணினியில் பொருத்தினேன்.
  நான் படிக்க வேண்டிய நூல்களை, கணினி வாசிக்க நான் கவனமாகக் கேட்டு மனதில் பதித்துக் கொண்டேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக கணினி வாசிப்பதை பல முறை போட்டுக் கேட்பேன். 2016- இல் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். தேர்வின் முடிவு வெளியானபோது எனக்கு 733 ஆவது ரேங்க்தான் கிடைத்திருந்தது. அதன் காரணமாக ஐஏஎஸ் பதவி கிடைக்கவில்லை.
  ஆனால், ரயில்வேயில் நிதி மற்றும் கணக்குத் துறை அதிகாரியாக நியமன ஆணை வந்தது. ஆயினும், ரயில்வே துறை "கண் பார்வை சற்றும் இல்லாதவரை பணியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்' என்று சொல்ல என்னால் பணியில் சேர முடியவில்லை. தேர்வு ஆணையத்திடம் முறையிட்டாலும், உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை. அதுவும் நல்லதற்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
  எனது பணி குறித்து ஒரு தீர்மானம் ஆக காலதாமதம் ஆகும் என்று தெரிந்ததும் ஐஏஎஸ் கனவை நனவாக்க மீண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுத ஆயத்தம் செய்து.. 2017-இல் தேர்வு எழுதி 124 ஆவது ரேங்க்கில் தேறினேன். இந்த ரேங்க் எடுத்ததினால், நான் கனவு கண்ட மாதிரி ஐஏஎஸ் அதிகாரியாக ஆக முடிந்தது.
  பயிற்சிக்காக எர்ணாகுளம் உதவி ஆட்சியராக எனக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது. எனக்கு ஊக்கமும், மன தைரியமும் ஊட்டி வளர்த்த எனது தாய் என்னை "உதவி ஆட்சியர்' இருக்கையில் அமர வைக்க அனுமதி வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் ஒத்துக் கொண்டனர். என் அம்மா அந்த அலுவலக நாற்காலியில் அமரச் செய்து அழகு பார்த்தார். அவர் கண்களிலும் எனது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்'.
  ஐஏஎஸ் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்களாலும் முடியும் என்ற திடம் வேண்டும். நம் வாழ்வில் நம்பிக்கை என்பது வேண்டும். லட்சியம் நிச்சயம் வெல்லும். எதிர்மறை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
  விமர்சனங்களுக்கு காது கொடுங்கள். அதற்காக விமர்சனங்களைக் கண்டு வீழ்ந்து விடாதீர்கள். நாம் விரும்பும் எதிர்பார்க்கும் பலன்கள் கை மேல் கிடைக்க கால தாமதம் ஆகலாம். அதற்காக முயற்சிகளைப் பாதியில் விட்டுவிடக் கூடாது.
  எனது சொந்த முயற்சி, நான் படித்த கல்வி, என் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கை என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நான் சொன்ன விடையை எனக்காக எழுதியவர் ஒழுங்காக எழுதியதால்தான் எனக்கு 124 ஆவது ரேங்க் கிடைத்திருக்கிறது. நினைத்தது மாதிரி எல்லாம் நடந்தது'' என்கிறார் பிராஞ்சல்.
  - பிஸ்மி பரிணாமன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai