Enable Javscript for better performance
நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ள முடியும்!- Dinamani

சுடச்சுட

  
  mm18

  ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வருபவர் ராதா நந்தகுமார். இவர், மல்டி டிஸபளிட்டி உள்ள குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். மேலும், சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாளராகவும், பெற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவர், சமீபத்தில் "பேரன்புடன்' என்ற குறும் படத்தை தயாரித்துள்ளார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
  "சாதாரண மனிதர்கள் போல கேட்டு அதை உடனடியாக உணரும் நேரக் கணக்கில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது. உதாரணமாக, சதாரண மனிதர்களாகிய நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும். ஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும். எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும். அப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வரும்? அந்த எரிச்சல்தான் அவர்களை சாதாரண மனிதர்களைப் போன்று செயல்பட முடியாமல் தடுத்துவிடுகிறது. இது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. பெற்றோரின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் , நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ளவும் முடியும். 
  சிறப்பு குழந்தைகளுடனான பயணம் எப்படி தொடங்கியது? 
  அதற்கு நான் என்னைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும். நல்ல அந்தஸ்தில் உள்ள அனைவரும் படித்த பெரிய குடும்பத்தில் நான் திருமணமாகி வந்தேன். என் கணவரும் மிகப்பெரிய படிப்பாளி. டெல்லியில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். அதனால் நாங்கள் டெல்லியில் செட்டிலாகியிருந்தோம்.
  என் முதல் குழந்தை பிறந்து மூன்று, நான்கு மாதங்களில் அவனுக்கு வலிப்பு வந்தது. அப்போதுதான் அவனுக்கு உடல் ரீதியாக பிரச்னை இருப்பதை உணர்ந்தோம். அதன்பிறகு அவனுக்கு தினமும் வலிப்பு வர ஆரம்பித்தது. இதனால் மருத்துவரை அணுகி தினசரி சிகிச்சை பெற்று வந்தோம். தினசரி மருத்துவர் என்ன ஆலோசனை வழங்குகிறாரோ அதனை தவறாமல் செய்து வந்தேன். எனது உழைப்பை பார்த்துவிட்டு குழந்தைகள் நல மருத்துவர் சுனந்தா ரெட்டி, என்னைப் போன்று குழந்தைகளின் பெற்றோரை ஒரு குழுவாக சேர்த்து முறையான, சரியான மருத்துவ வசதியில்லாத குப்பத்துப் பகுதிகளுக்குச் சென்று நம்மாலான உதவிகளை செய்வோம் என்று "கேர் நிதி' (Care Nidhi) என ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து செயல்படலாம் என்றார். இப்படித்தான் என் பயணம்தொடங்கியது. 
  இந்நிலையில், என் குழந்தை வளர்ந்து சிறப்பு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். அவனுடன் தினமும் நானும் செல்வேன். அந்தப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு நானே விரும்பிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இந்த குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை முழுமையாக அறிந்து கொண்டேன். நான் ரொம்பவும் ஈடுபாட்டுடன் வேலை செய்வதை பார்த்து அந்த சிறப்பு பள்ளியில் என்னை ஆசிரியையாக வரும்படி அழைத்தார்கள். இதனால், சிறப்பு குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான ஆசிரியர் பயிற்சியும் பயின்றேன். 
  இதற்கிடையில் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தான். முதல் குழந்தை இப்படி பிறந்துவிட்டான் என்பதால் மிகச் சிறந்த மருத்துவர்கள் பலரிடம் முறையான மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகுதான் அடுத்த குழந்தையை பெற்றுக் கொண்டேன். இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவரிடம்தான் டெலிவரியும் பார்த்துக் கொண்டேன். 
  குழந்தை நார்மலாகத்தான் இருந்தான். அவனுக்கு இரண்டு வயதாகும்போது, மூத்த மகனுக்கு மிகவும் சீரியஸôகிவிட்டது. இதனால் அவனுடன் மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் என் மாமியார், நாத்தனார் பொறுப்பில் இரண்டாவது மகனை விட்டேன். மூத்த மகனை கவனிப்பதிலேயே இருந்தேன். இதற்கிடையில் பெரிய மகன் சிகிச்சை பலனின்றி இறந்து விட, வீட்டிற்கு திரும்பியதும் தான் இளையவனை கவனித்தேன். நன்றாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஓரே இடத்தில் உட்கார்ந்து ஒரே விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடிக் கொண்டிருந்தான். நான் சிறப்பு பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால். எனக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவரை அணுகினேன். அவர்கள் ஆட்டிசம் பாதித்திருப்பதை உறுதி செய்தார்கள். இதற்கிடையில் பெரிய மகன் இறந்த கவலையில் பாதிக்கப்பட்டு, கிட்னி பெயிலராகி என் கணவரும் இறந்தார். 
  அதன்பிறகு, என் மகனை முழுமையாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. என் குடும்பத்தினர் டெல்லியில் தனியாக இருக்க வேண்டாம் என்று சென்னை அழைத்து வந்துவிட்டார்கள். 
  சென்னை வந்ததும் மகனை "ப்ளே ஸ்கூலில்' சேர்த்தேன். அவனை அவர்களால் சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் சிறப்பு பள்ளியில் சேர்த்து விட்டேன். அதன்பின்னர் அவன் நன்றாக படிக்க ஆரம்பித்தான், ஆங்கிலம் நன்றாக பேசுவான். டைப் ரைட்டிங் கற்றுக் கொண்டான். அதன் மூலம் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறான். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டான். அவன் படித்த சிறப்பு பள்ளியான வித்தியாசாகர் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் எல்லாரும் அவன் படித்த பள்ளியின் நிர்வாகி லயோலா கல்லூரியில் சேர்த்து விட முயற்சி செய்தனர். ஆனால், நான்தான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இதன்பிறகு அவனுக்கு படிப்பு தேவையில்லை. ஏனென்றால் இதுவரை, அவனுக்கு தனியாக சாலையைக் கடக்கவோ, பணத்தின் மதிப்போ தெரியவில்லை எனவே, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொண்டாலே போதும் என்று நினைத்தேன். 
  தற்போது, வடபழனியில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி , கொளப்பாக்கம் புனித பிரான்ஸிஸ் பள்ளி, பத்மா சுப்பிரமணியம் பாலாபவன், மாண்ட்ஃபோர்ட் ஆகிய நான்கு பள்ளிகளில் ஆலோசகராக இருக்கிறேன். மேலும், சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பெற்றோர்களுக்கு சரியான புரிதல் கொடுத்து வழிநடத்துவது போன்றவற்றை செய்து வருகிறேன். 
  சிறப்பு குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதுவதிலும், முனைப்பாக உள்ளேன். காரணம், தனி ஒருவருக்கு பயிற்சி அளிப்பதை விட ஒரு ஆசிரியருக்கோ, புத்தகமோ எழுதி வைத்தால் நான் இருந்தாலும், இல்லை என்றாலும் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். 
  குறும்படத்திற்கான எண்ணம் எப்படி தோன்றியது? 
  கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது சந்தேகம். அந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க... வழிதவறிப்போனான். 
  ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையைப் புரிந்துகொள்ளவில்லை. இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்த பிள்ளை அங்கும் வழி கேட்டு சென்றுள்ளது. என்றாலும் அவனின் நிலை அவனை புறக்கணிக்க வைக்கவே பயன்பட்டது. 
  இறுதியாக, களைத்துப் போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனாது. அந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். இந்த குழந்தைகள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்த விரும்பினேன். இப்படி தொடங்கியதுதான் இந்த "பேரன்புடன்' என்ற குறும்படம்''என்றார் ராதா நந்தகுமார். 
  - ஸ்ரீதேவி குமரேசன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai