இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!

சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஞ்சு து ராம் பேக்கர் (30) பெண் பயிற்சியாளராக வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் கடினமாக உழைத்து,
இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!

சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஞ்சு து ராம் பேக்கர் (30) பெண் பயிற்சியாளராக வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் கடினமாக உழைத்து, பயிற்சிப் பெற்று தற்போது இந்தியாவிலேயே முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியளாருக்கான "ஏ லைசன்ஸ் கோச்' உரிமையை பெற்றுள்ளார். எனக்கு கிடைத்துள்ள இந்த "ஏ லைசன்ஸ் கோச்' எனக்களிக்கப்பட்ட மிக பெரிய பொறுப்பாகவும், புதிய சவால்களை எதிர்கொள்ளவும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன் என்று கூறும் அஞ்சு து ராம்பேக்கர், இதற்காக தனக்கேற்பட்ட எதிர்ப்புகளையும், இன்னல்களையும் நம்முடன் இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 "கோலாப்பூர், பெக்கநல் நகரத்தில் பிறந்த எனக்கு சிறுவயது முதலே ஆண்களுக்கே உரிய விளையாட்டு என்றாலும் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து விளையாட்டை பெண்கள் கூட விளையாடலாம் என்ற எண்ணமும் இருந்தால், பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும்போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் முதலாவதாக இருந்தேன். பண்ணை மற்றும் வீட்டு வேலை, எருமைகளைப் பராமரிப்பது, பள்ளிக்குச் செல்வது என பல்வேறு வேலைகளுக்கிடையே கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்துவது பெரிய சவாலாக இருந்தது.
 இதில் உள்ள கடினமான பயிற்சி பெண்களின் ஆர்வத்துக்கு தடையாக இருந்தாலும், எனக்குள் இருந்த மன உறுதி, கால்பந்து ஆடுவதை விட்டு விலக இடம் தரவில்லை. தினசரி வாழ்க்கைக்கும், கடினமான உழைப்புக்கும் இடையிலுள்ள மதிப்பு, எதிர்காலத்தில் நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தருமென்ற நம்பிக்கையை வளர்த்தது.
 என் குடும்பத்தை பொருத்தவரை ஊர் மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி என்னை கால்பந்து விளையாட போகக்கூடாது என்று முதலில் தடை விதித்தனர். ஆண்கள் தான் கால்சட்டை அணிந்து, நேரத்திற்கு வீட்டுக்கு வராமல் கால்பந்து ஆடுவார்கள். இது பெண்களுக்கு ஒத்துவராது என்று ஊர் பெரியவர்கள் சிலர் என் தந்தையிடம் வந்து எனக்கு அறிவுறுத்தக் கூறினர்.
 கால்பந்து விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்களால் ஆட முடியாது என்ற நிலை மாறிவந்ததால், பெண்களாலும் கால்பந்து விளையாட முடியும் என்று என் குடும்பத்தினரும், நண்பர்களும் ஏற்றுக் கொண்டதால் என்னுடைய ஆர்வத்துக்கு தடை விதிக்கவில்லை. அதே போன்று ஆண்கள் மட்டுமே மோட்டார் பைக் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறையை மீறி நானும் பைக் ஓட்ட கற்றுக் கொண்டதோடு, லைசன்சும் பெற்றேன். இருப்பினும் கால்பந்து ஆடுவதை நிறுத்திவிட்டு, பத்தாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். ஆனால், நான் பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு உடற்பயிற்சி கல்வியிலும் பட்டம் பெற்றேன்.
 இறுதியில் என் திறமையையும், ஆர்வத்தையும் உணரும் சந்தர்ப்பம் வந்தது. கோலாப்பூரில் உள்ள பெண்கள் கால்பந்து குழுவுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு கிடைத்தது. சில மாதங்களுக்குள் மும்பை சென்று தேர்வு பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. என் பெற்றோருக்கு விருப்பம் இல்லையென்றாலும், எப்படியோ அனுமதி பெற்று மகாராஷ்டிரா குழுவுக்காக அசாமில் நடந்த தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் விளையாடினேன். இந்த தகவல் பத்திரிகைகளில் செய்தியாக இடம் பெற்றது. சோலப்பூரிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் பெற்றோரை பொருத்தவரை தொழில் ரீதியாக கால்பந்து விளையாட்டில் நல்ல எதிர்காலம் இல்லையென்று கருதி, என்னை போலீஸ் படையில் சேரும்படி கூறினர். ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று பார்த்தனர். ஆனால் நான் தொடர்ந்து மகாராஷ்டிரா குழுவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வந்தேன்.
 இறுதியில் புணே சென்று மேற்கொண்டு படிக்கப் போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் எப்படியும் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வேண்டுமென்ற லட்சியம் என் மனதில் இருந்தது. புணேயில் படித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா கேம்ப் பயிற்சிக்காக இருமுறை தேர்ந்தெடுக்கபட்டேன். எதிர்பாராதவிதமாக அந்த கேம்ப் செயல்படவில்லை.
 வாழ்க்கைக்கு தேவையான கல்விச் செலவு, உணவு, உடை, தங்க இடம் போன்றவைகளுக்காக பேராட வேண்டியிருந்தது. என் செலவுக்காக புணேயில் படித்துக் கொண்டே வேலை பார்க்கத் தொடங்கினேன். இதற்கு தீர்வுகாண இரண்டு வழிகள் தான் இருந்தது. கால்பந்து பயிற்சியாளர் ஆகும் ஆசையை விட வேண்டும். அல்லது புதிய வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது வழிதான் சரியெனப்பட்டது. வீடுகளில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன். கூடுதலாக பணம் புரட்ட அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தேன். இதன் மூலம் ஓரளவு படிப்பு, உணவு, உடை, தங்க இடம் ஆகிய செலவுகளுக்கான பணம் கிடைத்தது.
 பின்னர் மும்பையில் நடந்த சீனியர் தேசீய பயிற்சிக்குச் சென்றேன். மகாராஷ்டிரா குழு. "மேஜிக் பஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியை வழங்கியது. உடனடியாக பணியில் சேர்ந்தேன். வாய்ப்புகள் அதிகரித்தது. கூடவே என் வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டது. பின்னர் தேசிய அளவில் விளையாடுவதை குறைத்துக் கொண்டு உள்ளூரிலேயே போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன்.
 பெண்களுக்கு பயிற்சியளிப்பது ஆண்களுக்கு பயிற்சியளிப்பது போன்று அத்தனை சுலபமல்ல. இருந்தாலும் என்னைப் பொருத்தவரை பயிற்சியின்போது ஆண்} பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை. பெரும்பாலும் ஆண்களுக்கு பயிற்சியளிப்பதற்கு ஏற்கெனவே மும்பையில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்த அனுபவம் உதவியாக இருந்தது. 2010} ஆம் ஆண்டு முதன் முறையாக வெளிநாட்டு பயணமாக நெதர்லாண்ட் சென்றபோது, கே.என்.வி.பி. சர்வதேச கோச்சிங் கோர்ஸ் பெருமளவில் உதவியாக இருந்தது. இந்தியாவிலேயே முதல் கால்பந்து பயிற்சியாளராக "ஏ லைசன்ஸ் கோச்' சான்றிதழ் கிடைத்தது. தற்போது நூறு சதவீதம் பயிற்சியளிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. பெரியசவால்களை ஏற்பது, இத்துறைக்கு வர விரும்பும் மற்றவர்களுக்கும் புத்துணர்வை அளிக்க உதவும்'' இவ்வாறு கூறினார் அஞ்சு து ராம்பேக்கர்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com