சுடச்சுட

  
  mm17

  வான் வருவான்' பாடலுக்கு தேசிய விருதைப் பெற்றுள்ளார் ஷாஷா திருப்பதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 12 இந்திய மொழிகளில் பாடுகிறார். தாய் மொழியான காஷ்மீரி மொழிக்குப் பிறகு தேசிய விருதைப் பெற்றுத் தந்த தமிழ் மொழிதான் பிடிக்கிறது என்கிறார் ஷாஷா. பாடகி மட்டுமல்ல. அவர் ஓர் இசைக் கலவையாளர். சவுண்ட் டிஸைனர். பாடலாசிரியர். நாடறிந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்.
  தேசிய விருது பெற தில்லிக்கு வந்திருந்த அவரை "தினமணி'க்காக சந்தித்தோம். 
  ஒரு பாடகி தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஆகியது எவ்வாறு?
  வாழ்க்கையில் சந்தித்த அவமானங்களும், அது தந்த அனுபங்களும்தான் காரணம். இசைக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் பிறந்து, முட்டி மோதி பாடகியானதை பல மணி நேரம் பேசலாம்.
  உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்கள் தொடர்பாக பல தடவைகள் பேசியுள்ளீர்களே..? 
  அவற்றை அவமானங்கள் என்று சொல்வதைவிட வாழ்க்கைப் போராட்டங்கள் எனக் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கனடாவில் படித்துக் கொண்டிருந்த மருத்துவப் படிப்பை இடை நிறுத்திவிட்டு இசை ஆர்வத்தில் மும்பை வந்தேன். மும்பையில் ஒரு ஈ , காக்காவைக் கூடத் தெரியாது. தங்குவதற்கு இடம் இல்லை. துணைக்கு ஆள் கிடையாது. ஒவ்வொரு ஸ்டுடியோவும் ஏறி இறங்கி வாய்ப்புக் கேட்டேன். எந்தக் கதவுகளும் திறக்கவில்லை. "இவ்வளவு கேவலமான குரலை வைத்துக் கொண்டு நீ எல்லாம் ஏம்மா பாட ஆசைப்படறே' என்றார் ஓர் இசையமைப்பாளர். ஒருநாள் 3 மணி நேரம் பயணம் செய்து இசைமைப்பாளர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன். கன மழையில் ஆறு மணி நேரம் என்னை அவர் காக்க வைத்தார். இறுதியில் நேரமில்லை எனக் கூறி என்னை அவர் பார்க்கவில்லை. மழையில் தெப்பலாக நனைந்திருந்தேன். நிராகரிப்பால் கூனிக் குறுகிப் போயிருந்த அந்த மழையின் இரவில் "செமையாக வாழ்ந்து காட்ட வேண்டும்' என முடிவெடுத்தேன். அந்த அவமானங்கள்தான் என்னை உறுதியாக்கியது. பாடகியாக வேண்டும் என்ற எனது நெஞ்சுரத்தை, பிடிவாதத்தை வளர்த்தது. கனடாவில் மருத்துவராகியிருக்க வேண்டிய என்னை தேசிய விருது வாங்கும் அளவுக்கு உயர்த்தியது அவமானங்கள்தான். அவமானம் தந்தவர்களுக்கு நன்றி. 
  பாட வந்த சில ஆண்டுகளுக்குள் தேசிய விருது கிடைக்கும் என நினைத்தீர்களா..?
  பகல் கனவில் கூட நான் அப்படி நினைக்கவில்லை. வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தேசிய விருது கிடைக்கலாம் என நினைத்தேன். பாட வந்து சில ஆண்டுகளே ஆனாலும், எனக்கு "வான் வருவான்' போல சில அற்புதமான பாடல்கள் கிடைத்தன. 
  தமிழ் தெரியுமா..?
  தெரியாது.
  ஆனால், நீங்கள் பாடும் பாடல்களில் தமிழ் உச்சரிப்பும் உணர்வும் மிகத் தெளிவாக உள்ளதே..?
  ஒவ்வொரு தடவையும் பாடலின் உள்ளடக்கத்தையும், எந்தப் சூழலில் பாடப்படுகிறது என்பதையும் கேட்டறிவேன். பாடல் வரிகளைச் சரியாக உச்சரிப்
  பதில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உதவுவார்கள். "ராசாளி' பாடல் பாடிய போது கவிஞர் தாமரை அருகில் இருந்து ஒவ்வொரு வரியையும் மிகச் சரியாகவும் தெளிவாகவும் உச்சரிக்க உதவினார். 
  தெரிந்த மொழிகளில் பாடுவதற்கும், தெரியாத மொழிகளில் பாடுவதற்கும் இடையே என்ன வித்தியாசம்..?
  சினிமாப் பாடல்களுக்கு மொழி தடையாக இருப்பதாக நினைக்கவில்லை. திரையில் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை பாடல் வரிகளில் மிகச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மொழி தடையில்லை. 
  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் சிறுமியாக இருந்த போது ஆரம்பித்தது. நாங்கள் இசைக் குடும்பமல்ல. ஆனால், வீட்டில் நாள் முழுவதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். முகமது ரஃபி, லதா மங்கேஷ்கரைத் தாண்டிய இசை அவர்களுக்குத் தெரியாது. அந்தக் காலத்தில்தான், ஏ.ஆர்.ரகுமானின் "கண்ணாளனே' பாடலை முதல்தடவையாகக் கேட்டேன். மொழியைத் தாண்டிய ரசனையில் அந்தப் பாடல் என்னை தூங்க விடாமல் அலைக்கழித்தது. அந்தப் பாடலின் அத்தனை இசைக் கோர்வையும் எனக்கு அத்துப்படி. ஆனால், அந்தப் பாடலின் இசையமைப்பாளரின் பெயர் தெரியாது. பிறகு, "பம்பாய்', "ரங்கீலா" எனத் தொடர்ச்சியாக அவரின் இசை பரீட்சயமானது. இசை ஆர்வம் அதிகரிக்க, இசை கற்கட்டும் என கனடாவில் இருந்து அகமாதபாத்துக்கு அனுப்பினார்கள். பாட்டியுடன் தங்கி இசை கற்றேன். வீட்டில் கைச் செலவுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை சேமித்து சேமித்து ரஹ்மானின் பாடல் கேசட்டுகளை வாங்கினேன். அவரின் பாடல்கள் தான் பின்னாளில் நான் மும்பைத் தெருக்களில் தனியாக அலைந்த போது துணையாக இருந்தது. 
  எதிர்காலத் திட்டம்...?
  நான் நன்றாகப் பாடுவேன் என இப்போது கூட நினைக்கவில்லை. இப்போதும் நன்றாகப் பாட முயற்சி செய்யும் ஒருத்தியாகத்தான் என்னைப் பார்க்கிறேன். இசைத் துறையில் எத்தனையோ இளம் திறமைசாலிகளைக் கண்டுள்ளேன். அவர்களின் திறமைக்கு முன்னால் போட்டியிடுவது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. முடியும் வரை போராடிக் கொண்டிருப்பேன். 
  -அருளினியன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai