1 லட்சம் மாணவிகளை சந்திப்பதே இலக்கு!

சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் டாக்டர் அனிதா பரமசிவன் கதிரியக்க சிகிச்சை நிபுணர் (SONOLOGIST) டாஸில் ஈவன்ட்ஸ் நடத்திய போட்டிகளில் "மிஸர்ஸ் இந்தியா வேர்ல்டு 2018' என்ற
1 லட்சம் மாணவிகளை சந்திப்பதே இலக்கு!

சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் டாக்டர் அனிதா பரமசிவன் கதிரியக்க சிகிச்சை நிபுணர் (SONOLOGIST) டாஸில் ஈவன்ட்ஸ் நடத்திய போட்டிகளில் "மிஸர்ஸ் இந்தியா வேர்ல்டு 2018' என்ற அழகுப் போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், "மிஸர்ஸ் டேலண்டட் இந்தியா வேர்ல்டு 2018'}க்கான போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதை தவிர, தமிழகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை: 
"மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் "பிங்க்த்தான்' அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 10 பேரை பிரசாரத்துக்கான தூதுவராக தேர்ந்தெடுத்தனர். அதில் கதிரியக்க மருத்துவர் என்ற வகையில் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அது முதல் இன்று வரை பெண்கள் பயிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால், நான் அறிந்த வரை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த விழிப்புணர்வு நிகழச்சிகளை வித்தியாசமான முறையில் நடத்த ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக, மாநாடு, கருத்தரங்கம், பிரத்யேக நிகழ்வுகளின் மூலம் இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதற்கு, ரோட்டரி கிளப் ஆப் சென்னை கே.கே. நகர் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகின்றன.
மேலும், சென்னை, அரக்கோணம், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான பல நகரங்களுக்கும் சென்று அங்குள்ள பல அரசு மற்றும் தனியார் பெண்கள் கல்லூரிகளிலும், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எங்கள் குழு நடத்தவுள்ளது.
பொதுவாக, மார்பக புற்றுநோயை பொருத்தவரையில் பெரியளவில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிலும் ஆரம்பநிலையில் இந்நோயினை கண்டறிந்துவிட்டால் மிக எளிதாக குணப்படுத்திவிடலாம். எனவே, இந்த கல்வியாண்டுக்குள் 1 லட்சம் மாணவிகளை சந்தித்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது இலக்கு. 
மார்பக புற்றுநோயை பொருத்தவரை, 35 வயதை கடந்துவிட்ட ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுக்கு ஒரு முறையேனும் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதை தவிர அவ்வபோது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
அதுபோன்று அவர்களது குடும்பத்தில் யாராவது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டாயமாக அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே வருமுன் காப்பதற்கான ஒரே வழி'' என்றார் டாக்டர் அனிதா பரமசிவன்.
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com