அமெரிக்காவில் ஒலிக்கும் தமிழ்நாட்டு ஜாஸ்!

தனி மனிதனின் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது இசை. மனித குலத்தின் வரலாற்றில் இசைக்கும் முக்கிய இடமுண்டு. மனிதனை இசைய வைக்கும் சக்தி படைத்த இசையில் பல்வேறு பிரிவுகள்.
அமெரிக்காவில் ஒலிக்கும் தமிழ்நாட்டு ஜாஸ்!

தனி மனிதனின் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது இசை. மனித குலத்தின் வரலாற்றில் இசைக்கும் முக்கிய இடமுண்டு. மனிதனை இசைய வைக்கும் சக்தி படைத்த இசையில் பல்வேறு பிரிவுகள். அதில் ஒன்றுதான் சுதந்திர வேட்கையை பிரதிபலிக்கும் ஜாஸ் இசை. சுதந்திரமான இசை ஓட்டம்தான் ஜாஸின் அடிப்படைத் தத்துவம்.
 இசைக் குழுவில் இருக்கும் அனைவரும் தனித்தனியே தனது திறமையைக் காட்டுவதும், இந்த குழப்பமான இசை அமைப்பில் தோன்றும் வித்தியாசமான இசையே ஜாஸின் முக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது. பியானோ, ட்ரம்பெட், டிரம்ஸ், சாக்ஸபோன், க்ளாரினேட், கிதார் ஆகியவை ஜாஸ் இசைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய இசைக் கருவிகள். அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க - அமெரிக்கர் சமூகத்தினரிடையே கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான அமெரிக்க இசை வடிவம்தான் ஜாஸ். ஆப்பிரிக்க, ஐரோப்பிய இசை மரபுகளின் கலப்பில் உருவான இந்த இசை தமிழ்த் திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 ஜாஸ் இசையில் சிறு வயது முதலே அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட தமிழகத்தை பூர்வீகமாகவும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான சாரு சூரி முதன் முதலாக இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டு சாதனை படைக்க உள்ளார். இவரது தந்தை ராஜா ஐயர் சூர்யநாராயணன் கோவையில் வசித்து வருகிறார். சூர்யநாராயணனின் குடும்பம் ராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்டது. இவரது தந்தை எம்.ராஜா ஐயர், ராஜா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், முன்னாள் எம்.எல்.சி.யுமாவார்.
 சாரு சூரி சிறுமியாக இருந்தபோதே இசை மீது நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். 3 வயது முதல் பியானோ வாசிக்கத் தொடங்கிய இவர், சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் கடந்த 1992-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் முதல் மாணவியாகத் தேறினார். இதையடுத்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முழு உதவித் தொகையுடன் பி.எஸ். படிப்பை முடித்தார். பிறகு மன்ஹாட்டன் இசைப் பள்ளியில் எம்.எஸ். முடித்துள்ளார்.
 தற்போது கிரடிட் சுஸþ வங்கியில் பணியாற்றி வரும் இவர், அமெரிக்காவைச் சேர்ந்த விமான பைலட்டும், டிரம்போன் இசைக் கலைஞருமான மேத்யூ மின்னுக்கியை திருமணம் செய்து கொண்டு நியூ ஜெர்ஸியில் வசித்து வருகிறார்.
 பியானோ வாசிப்பில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சாரு, ஹன்னம் கிளார்க் விருதைப் பெற்றுள்ளதுடன், தலைசிறந்த பியானோ கலைஞருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் சீசில் கோசின் ஷீல்டு விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். ஜே.ப்ரýங்கா, ஜாய் ஓ பிரையன், கிரிஸ்பியன் போர்தம் என்ற மூன்று இசைக் கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு ஜாஸ் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சாரு சூரி. தனது முதல் ஜாஸ் இசை ஆல்பமான லாலிபாப்ஸ் ஃபார் பிரேக் பாஸ்ட்-டை வரும் நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட உள்ளார்.
 இது தொடர்பாக சாரு சூரி கூறும்போது, எனது முதல் இசை ஆல்பத்துக்கு காரணம் எனது 6 வயது குழந்தை எரிகா-தான். குழந்தைகள் எப்போதும் எதிலும் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை. அவர்கள் சுதந்திரமானவர்கள். ஒருநாள் காலை உணவுக்கு எனக்கு லாலிபாப்ஸ் கொடுக்க முடியுமா அம்மா என்று கேட்டாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவளது கண்களில் நான் கண்டேன். அவளின் எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை இசையில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். இதற்காகவே எனது முதல் இசை ஆல்பத்தை எனது குழுவினருடன் இணைந்து தயாரித்துள்ளேன் என்கிறார்.
 இசைக் கலைஞர் என்ற அடையாளத்தைத் தாண்டி, தி நியூ யார்க் டைம்ஸ், ஆர்க்கிடெக்சுரல் டைஜெஸ்ட் போன்ற பிரபல பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் பயணக் கட்டுரை ஆர்வலராகவும், இதழாளராகவும் அறியப்படுகிறார் சாரு சூரி.
 - க.தங்கராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com