தக்கலை முதல் சுவீடன் வரை..!

"இந்திய மக்கள் நேரில் பார்க்க அவர்களது முன்னிலையில் நான் இறகு ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
தக்கலை முதல் சுவீடன் வரை..!

"இந்திய மக்கள் நேரில் பார்க்க அவர்களது முன்னிலையில் நான் இறகு ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும். அது எனது லட்சியங்களில் ஒன்று'' என்று அஸ்வதி சொல்வதில் காரணம் இல்லாமல் இல்லை. அஸ்வதி வாழ்வது சுவீடன் நாட்டில். பதினெட்டு வயதாகும் அஸ்வதி கன்யாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். சுவீடன் நாட்டிற்காக இறகுப் பந்தாட்டம் ஆடி வருபவர்.
 அண்மையில் அர்ஜென்டினா நாட்டில் போனஸ் அயர்ஸ் நகரில் அண்மையில் நடந்து முடிந்த இளையோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கங்களை பெற்ற பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளம் வீராங்கனையின் பெயர் இடம் பெற்றிருந்தது. அவர்தான் அஸ்வதி. ஆனால் அஸ்வதி இந்தியாவின் சார்பில் விளையாடவில்லை. பதக்கம் பெறவில்லை. சுவீடன் நாட்டின் சார்பில் இறகுப் பந்தாட்டம் ஆடி வருபவர்.
 "நாங்கள் தக்கலையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெங்களூரில் வசித்து வந்தோம். 2009-இல் சுவீடனில் குடியேறினோம். தூரம் அதிகமானாலும், இந்திய இறகுப் பந்தாட்ட ரசிகர்கள் எனக்கு மறக்காமல் வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டு காலத்தில் சுவீடனில் இறகுப் பந்தாட்டத்தில் பல வெற்றிகளை சந்தித்து வருகிறேன். 2015-இல் பதினைந்து வயதிற்கு கீழ் பிரிவில் சுவீடன் சாம்பியனானேன். இப்போது குறைந்த வயதில் சுவீடன் தேசிய சாம்பியனாகவும் வந்திருக்கிறேன். "2008 -இல் பெங்களூரில் வசித்த போதுதான் இறகுப் பந்தாட்டம் ஆடக் கற்றுக் கொண்டேன். அப்பா வினோத் நன்றாக இறகுப் பந்தாட்டம் ஆடுவார். அவரது ஆட்டத்தைப் பார்த்து நானும் விளையாட ஆரம்பித்தேன். அப்பா கணினித் துறையில் பணிபுரிந்து வந்தார். வேலை காரணமாக அவர் சுவீடன் செல்ல வேண்டி வந்தது. அவருடன் நாங்களும் சென்றோம். அங்கே இறகுப் பந்தாட்ட கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினேன். அங்கே விளையாட்டிற்கு ஆதரவும் வசதிகளும் ஏராளம். எனது திறமையைக் கண்டு தேசிய குழுவிற்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எனது ஆட்டத்தை சுவீடன் ஒலிம்பிக்ஸ் குழுவும் பார்த்துள்ளது.
 இந்தோனேஷியாவைச் சேர்ந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றேன். படிப்பும் முக்கியம் என்பதால் பயிற்சிகளும் போட்டிகளும் படிப்பைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறேன். கோடை விடுமுறைக் காலங்களில் இந்தியா வருவேன் பயிற்சிக்காக. பிரகாஷ் படுகோன் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தேன். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பயிற்சிக்காக தாய்லாந்து சென்று வந்தேன். சுவீடன் நாட்டில் கிடைக்கும் பயிற்சியைவிட ஆசிய நாடுகளில் தரப்படும் பயிற்சி வித்தியாசமானது. எல்லாவகை பயிற்சிகளையும் பெற வேண்டும் என்பதால் பல நாடுகள் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
 இளையோருக்கான ஒலிம்பிக்சில் ஆண்-பெண் அணியில் விளையாடியதற்காக தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. எனது அடுத்த இலக்கு 2020 -இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ்தான். சர்வதேச அளவில் முதல் எழுபது வீராங்கனைகளில் ஒருவராக வந்தால் மட்டுமே ஒலிம்பிக்சில் பங்கு பெறத் தகுதி பெற முடியும். அந்த எழுபது பேர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற முனைப்பில் எந்தெந்த ஆட்டங்களில் ஆட வேண்டும் என்று கணித்து வைத்துள்ளேன்'' என்கிறார் அஸ்வதி..
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com