கல்விக்காகவே வாழ்ந்தவர்!

பள்ளியில் குறும்பு செய்தாலோ, பாடம் சரியாகப் படிக்கவில்லை என்றாலோ மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்கும் சூழலில், "அப்படி தண்டிப்பது சிலுவையில் அறைவது போன்றது!'
கல்விக்காகவே வாழ்ந்தவர்!

பள்ளியில் குறும்பு செய்தாலோ, பாடம் சரியாகப் படிக்கவில்லை என்றாலோ மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்கும் சூழலில், "அப்படி தண்டிப்பது சிலுவையில் அறைவது போன்றது!' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? "குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான்!' என்று சொன்னவர், சகோதரி சுப்புலட்சுமி தொடங்கிய சாரதா வித்யாலயாவில் தலைமை ஆசிரியையாகச் சேர்ந்து பின்னர் தாளாளராகவும், செயலராகவும் பணியாற்றிய மூதாட்டி கோகிலா காளஹஸ்தி என்பவர்தான் அவர்.
 பின்னர் சாரதா வித்யாலயா ராமகிருஷ்ணா மடத்தின் கீழ் வந்தது. இளம் விதவைகளும், ஆதரவற்ற பெண்களுக்கும் ஒரு புகலிடமாகக் கருதும் அளவுக்கு செயல்பட்டார் கோகிலா காளஹஸ்தி. காரணம் அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருந்தன. சகோதரி சுப்புலட்சுமி, பெண்கள் மையம் தொடங்கியபோது அதை ஏற்று நடத்த கோகிலாவை அழைத்தார்.
 இவர் குறைந்தபட்சம் கண்டிப்பது என்பது "நீயா உண்மையில் இப்படிச் செய்தாய்? உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை'' என்பதுதான். அது போதும், மாணவனின் மனம் திருந்த, என்று சொல்லியிருக்கிறார். தவறு செய்யும் மாணவனின் பின்னணியை புரிந்துகொண்டு, அவனிடம் உள்ள குறைகளைக் களையும் உத்தியைத் தெரிந்து வைத்திருந்தார் கோகிலா.
 புகழ வேண்டுமானால் மாணவரை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் புகழுவார். கண்டிப்பதாக இருந்தால், தனியே கூப்பிட்டுச் சொல்லுவார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் மரணம் அடையும் வரை தம் மாணவர்களிடம் அவர் தொடர்பு வைத்திருந்தார். மேடம் மான்டிசோரி அம்மையாரிடமே குழந்தைகள் மனோதத்துவத்தைக் கற்றுக்கொண்டவர். பன்னிரண்டு வயதிலேயே பகவத் கீதையை முழுதும் படித்து அறிந்தவர். சமூக சேவையில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
 ஒரு நாள் இவரைக் காண இரண்டு மாணவர்கள் தயங்கித் தயங்கி இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். "என்ன வேணும்?'' என்று விசாரித்தார். "உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்!'' என்று வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார்களாம்.
 சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காளஹஸ்தியை தம் 30-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாகவே மதித்தவர் கோகிலா. கோகிலா காளஹஸ்தியின் 118-ஆவது பிறந்தநாள் அக்.19-ஆம் நாள்.
 - சித்தார்த்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com