சமையல்... சமையல்!

முத்தானிய இனிப்பு தோசை, அவல் கேசரி, மீல்மேக்கர் மஞ்சூரியன், வாழைக்காய் கோஃப்தா

முத்தானிய இனிப்பு தோசை

தேவையானவை: 
பச்சரிசி - 150 கிராம்
தினை - 150 கிராம்
உளுந்து - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
முந்திரி பருப்பு விழுது - 3 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: அரிசி, தினை, உளுந்து மூன்றையும் கலந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், பொடித்த வெல்லம், முந்திரி பருப்பு விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். தவாவை அடுப்பில் வைத்து, நன்கு காய்ந்ததும், மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுக்கவும். இரு பக்கமும் நன்கு வேகும்படி எண்ணெய்யைச் சுற்றி ஊற்றவும். முத்தானிய இனிப்பு தோசை தயார். சுவையும், சத்தும் மிக்கது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

அவல் கேசரி

தேவையானவை: 
அவல் - 300 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரி பருப்பு - 12
உலர் திராட்சை - மூன்று தேக்கரண்டி
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை: முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். வாணலியில் ஒன்றிரண்டாக பொடித்த அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பையும் உலர் திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து, அத்துடன் அவல், போதிய அளவு தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். கால் பதம் வெந்ததும், சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி கொடுக்க வேண்டும். கேசரிப் பவுடரை சிறிது நீரில் கரைத்து ஊற்றவும். நெய்யை இடையிடையே சேர்த்து வேகவிடவும். கலவை நன்கு வெந்து கேசரிப் பதம் வந்ததும், ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். ஒரு தட்டில் பரவலாக வைத்து, ஆறினதும் விரும்பிய அளவில் துண்டுகளாக இடவும். அவல் கேசரி தயார். சூப்பர் சுவையும் சத்தும் மிக்கது இந்த கேசரி. 
- சி.பாலா, இராமவர்மபுரம். 

மீல்மேக்கர் மஞ்சூரியன்

தேவையான பொருள்கள் .
மீல் மேக்கர் - 1 கிண்ணம்
கார்ன் மாவு - 3 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
நறுக்கிய குடை மிளகாய் - 1
நறுக்கிய வெங்காயம் - 1 
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி 
பொடியாக நறுக்கிய பூண்டு 
- 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
மிளகுத் தூள் 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போட்டு உப்புச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், சாதாரண தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிழிந்த மீல் மேக்கர் அதனுடன் 2 தேக்கரண்டி சோள மாவு, அரிசி மாவு சிறிது உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைக்கவும். பின்னர், எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். அடுத்து, 1 டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி சோளமாவு கலந்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி, இஞ்சி பூண்டு சேர்த்து, வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும். அதில் சில்லி, சோயா சாஸ், மீதமுள்ள மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் ஊற்றி கலந்து விடவும். ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்போது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும். சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

வாழைக்காய் கோஃப்தா

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1
உருளைக் கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - அரை தேக்கரண்டி 
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி 
ஆமெசூர்(மாங்காய்) பவுடர் - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பிரெட் தூள் - கால் கிண்ணம் 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
கிரேவிக்கு:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி - 2 
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 10
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை: தக்காளி, வெங்காயம், கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கையும் வேகவைத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்து எடுத்த வாழைக்காயையும், உருளைக்கிழங்கையும் தோல் உரித்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்து வைத்துக்கொள்ளவும். மசித்தவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், தனியாத் தூள், ஆமெசூர் பவுடர், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாகப் பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும். முந்திரியைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள். அதனுடன் தக்காளியைச் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். கிரேவி கெட்டியாக வந்ததும் அதன் மேல் வெண்ணெய், கொத்துமல்லி சேர்த்தால் கோஃப்தாவுக்கான கிரேவி தயார். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்றாக ஊறியதும் பரிமாறவும். சூப்பரான வாழைக்காய் கோஃப்தா ரெடி. 
- எஸ்.சரோஜா, திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com