சமையல்... சமையல்!

ஜவ்வரிசி சுண்டல், பயறு சுண்டல், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், காராமணி இனிப்பு சுண்டல், சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை: 
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
பாசிபருப்பு - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
எண்ணெய் - 1தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பாசி பருப்பையும் நன்கு ஊற வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். பின்னர், பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் சேர்க்கவும். அத்துடன் ஊற வைத்த பாசிப்பருப்பு, ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். பின்னர், அத்துடன் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறவும். பின்னர், எலுமிச்சைச் சாறு விட்டு கிளறி இறக்கவும். சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார். 

பயறு சுண்டல் 

தேவையானவை :
பச்சைப் பயறு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
பெருங்காயம் - 1சிட்டிகை
கறிவேப்பிலை- சிறது
செய்முறை: பச்சைப் பயறை இரவில் ஊற வைத்து காலையில் காட்டன் துணியில் முடிந்து வைத்துவிட்டால் மாலை அதில் முளை வந்திருக்கும். அதனை குக்கரில் போட்டு 2 விசில் விட்டு எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த பயறு, உப்பு சேர்த்து கிளறவும். பின்னர், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்துமிகுந்த பயறு சுண்டல் தயார். 

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

தேவையானவை:
காய்ந்த பட்டாணி - ஒரு கிண்ணம்
பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று 
தாளிக்க:
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - சிறிது
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் , இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார். 

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:
காராமணி - ஒரு கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
செய்முறை: காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, காராமணியைச் சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

தேவையானவை:
வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ûஸ முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறினால், சத்துமிக்க சோயா பீன்ஸ் மசாலா சுண்டல் ரெடி.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com