பன்னாட்டு நிதியத்தில் முதல் இந்திய பெண்மணி!

"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று சொல்வதுண்டு. அது கீதா கோபிநாத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறது. International  Monetary  Fund (IMF ) என்று அழைக்கப்படும்
பன்னாட்டு நிதியத்தில் முதல் இந்திய பெண்மணி!

"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று சொல்வதுண்டு. அது கீதா கோபிநாத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறது. International  Monetary  Fund (IMF ) என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் பெற்றுள்ளார். ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகக் நியமிக்கப்படும் வரை பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துவந்தார். ரகுராம் ராஜனுக்குப் பிறகு, இந்த பதவியில் அமரும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத். பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துவரும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்டின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய பொறுப்பினை, கீதா புத்தாண்டின் முதல் நாளில் ( 2019 ஜனவரி ஒன்று) பொறுப்பேற்க உள்ளார்.
பினராயி விஜயன் கேரளா முதல்வராக 2016 -இல் பொறுப்பேற்றுக் கொண்டதும் கீதா கோபிநாத்தை கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்தார். தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை ஆதரிக்கும், கீதா கோபிநாத்தை "கம்யூனிச அரசின் நிதியாலோசகராக எப்படி நியமிக்கலாம்' என்ற சர்ச்சையும் உடன் கேரளத்தில் அரசுக்குள், கட்சிக்குள் , எழுந்தன. "இந்தப் பதவி கெüரவப் பதவி. கேரளத்தின் மகளான கீதாவின் பொருளாதார புலமைக்கு ஒரு அங்கீகாரம். இந்தப் பதவிக்கு சம்பளம் ஏதும் இல்லை. தவிர... கேரள அரசின் தினசரி நிதி நடவடிக்கைகளில் கீதாவின் ஆலோசனை ஏதும் கேட்டுப் பெறும் அவசியம் இருக்காது' என்று சமாதானங்கள் சொல்லப்பட்டதால் எதிர்ப்புகள் விலகிப் போயின. ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், 
ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் கீதா உறுப்பினர். 
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் கீதா, சர்வதேச தரத்தில் வெளிவரும் பொருளாதார இதழ் ஒன்றின் இணை ஆசிரியராகவும் இருப்பதுடன், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவைதான் கீதாவை சர்வதேச அரங்கில் பொருளாதார வல்லுநராக கட்டமைப்பு செய்துள்ளன.
வேளாண்மையில் ஈடுபட்டு, மைசூரில் "உழவர்களின் நண்பன்' என்ற அமைப்பிற்குப் பொறுப்பாளராக இருக்கும் டி.வி. கோபிநாத் தனது இரண்டாவது மகளான கீதா குறித்து மனம் திறக்கிறார்: 
""கீதாவுக்கு கிடைத்திருக்கும் பெருமைகள் அனைத்தும் கீதாவின் கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள். எங்களுக்கு பூர்வீகம் கேரளம் என்றாலும், கீதா பிறந்தது கொல்கத்தாவில். ஒன்பதாண்டு வாசத்திற்குப் பிறகு கொல்கத்தாவிலிருந்து மைசூருக்கு குடியேறினோம். பிறகு சில ஆண்டுகள் டில்லியில் வாசம். கீதாவின் பள்ளிப்படிப்பு மைசூரில்தான் நடந்தது. ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதற்காக டில்லி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் படிக்க வைத்தேன். புதுமுக வகுப்புவரை அறிவியல் பாடங்கள் படித்த கீதா, கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். பொருளாதாரத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு. டில்லி ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம். பிறகு அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம். டில்லியில் உடன் படித்த இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இக்பால் 1996 -இல் இந்தியாவில் ஐஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்தவர். தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அமெரிக்காவில் நிதியம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கீதா- இக்பால் தம்பதிக்கு ரோஹில் என்ற மகன். பதினைந்து வயதாகிறது.
பள்ளியில் ஓட்டத்தில் கீதாவுக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால், ஓட்டத்தில் சாதனை புரிவது தன்னால் முடியாத விஷயம் என்று சரியாகத் தீர்மானித்த கீதா படிப்பில் முழு கவனத்தை குவித்தவர். தான் இந்தியக் கல்வி
முறையின் தயாரிப்பு என்று கீதா பெருமை கொள்பவர்'' என்கிறார் கோபிநாத் . 
"இந்தியாவின் முதல் நிதி, நாணயம், பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் ஏற்பட்டது 1991-இல். அப்போது பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தேன். அந்தப் பிரச்னைதான் என்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்தது. தொடர்ந்து முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு போகவும் வைத்தது'' என்கிறார் கீதா.
சர்வதேச அளவில் பிரபலமான கல்வி நிறுவனங்களில் பெண்கள் பேராசிரியர்களாகப் போதுமான அளவில் செயல்படுகிறார்களா என்ற கேள்விக்கு கீதாவின் பதில் என்ன தெரியுமா? 
"சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. நான் பணி புரியும் ஹார்வர்ட் கல்வி நிறுவனத்தில் கூட சுமார் நாற்பது கல்வித் துறைகள் இருக்கின்றன. அதில் மூன்று பெண்கள்மட்டும்தான் உயர் பதவியில் உள்ளனர். அந்த மூன்று பேரில் நானும் ஒருத்தி. குடும்ப சுமை பெண்களைப் பலவகைகளில் தடுக்கிறது. அதனால்தான் பல முன்னணிப் பதவிகளுக்குப் பெண்கள் வர முடிவதில்லை. குடும்பம் பெண்களுக்கு ஒரு சவால்தான். நல்லவேளை, என்னைப் பலப்படுத்தவும், எனக்கு உதவி செய்யவும் கணவர் இருக்கிறார். 
"நோபல் விருதுபெற்ற அமர்த்யா சென்னுக்குப் பிறகு ஹார்வர்ட் பொருளாதாரத் துறையில் இரண்டாவதாகப் பணி புரியும் வாய்ப்பு உங்களுக்கு மட்டும்தானே கிடைத்திருக்கிறது' என்று பலர் பாராட்டுகிறார்கள். அதில் ஒரு திருத்தம் உள்ளது. அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண் நான்தான். ஆனால் இரண்டாவது இந்தியர் அல்ல. ஏற்கெனவே இரண்டு இந்திய ஆண் பேராசிரியர்களுக்கு அது மாதிரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்ன.. அவர்கள் இந்தியர்கள் என்றாலும் முழுக்க முழுக்க படித்தது அமெரிக்காவில். நான் அமர்த்யா சென்னைப் போல ஒரு இந்தியக் கல்விமுறையின் தயாரிப்பு.. இங்கு படித்துவிட்டு ஹார்வர்ட் சென்றவள். அது அத்தனை எளிதல்ல. இந்தியாவில் பொதுவாக ஒரு எண்ணம் உள்ளது. குழந்தைகள் வளரும்போது பெற்றோர், உறவினர் கண் முன் நிற்பது "பொறியியல் படிக்க அனுப்பலாமா... இல்லை .. டாக்டருக்கு படிக்க வைக்கலாமா..' என்றுதான். பொருளாதாரம் படிக்கச்சொல்லத் தோன்றுவதில்லை... ஆனால் என் அப்பா என்னை பொருளாதாரம் படிக்கச் சொன்னார். அப்பா என்னை ஐஏஎஸ் அதிகாரியாக்க விரும்பினார். நான் அரசு நிர்வாகத்தில் அக்கறை காட்டாமல், பொருளாதாரத் தத்துவங்களுடன் நெருங்கிய தோழமை கொண்டுவிட்டேன்' என்கிறார் கீதா. 
சர்வதேச அரங்கில் 45 வயதுக்கு கீழ் மிகச்சிறந்த இருபத்தைந்து பொருளாதார நிபுணர்களில் ஒருவராக 2014-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதா, அந்த இருபத்திநான்கு பேரையும் முந்திக் கொண்டு நாற்பத்தாறாம் வயதில் பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக உயர்ந்திருக்கிறார் என்பதே ஒரு இமாலய சாதனைதான்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com