இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-22

"முன்பெல்லாம் என்னுடைய "சணல் பை' தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக விற்பனை பொருள்காட்சியில் கலந்து கொள்வேன்.
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-22

"முன்பெல்லாம் என்னுடைய "சணல் பை' தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக விற்பனை பொருள்காட்சியில் கலந்து கொள்வேன். ஒருமுறை நடைபெற்ற பொருள்காட்சியில், எனது பக்கத்து ஸ்டாலில் ஒரு வயதான பெண்மணி துடைப்பம் விற்பனை செய்தார். நன்கு பழகிய பின், அவரைப் பற்றி அறிந்தேன். அவரது மகன் திருமணத்திற்கு பின்னர், இவரையும் (கணவர் இல்லை) இவரது மாற்றுத் திறனாளியான மகளையும் விட்டுவிட்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அது சமயம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக துடைப்பம் செய்யும் பயிற்சி எடுத்துக் கொண்டனர் இருவரும். தொழில் செய்வதற்கான சிறிதளவு மூலதனமும் தொண்டு நிறுவனம் அளிக்க, தாயும், மகளும் துடைப்பம் செய்து விற்பனை செய்வதை முழு நேர தொழிலாக செய்தனர். விற்பனையும் நன்றாக இருந்ததால் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அதோடு மட்டுமல்லாது தனது மகனுடைய குழந்தைகளுக்கும் செலவு செய்யும் அளவிற்கு அவர்கள் வருமானம் ஈட்ட தொடங்கிவிட்டனர். அவர்கள் செய்து விற்பனை செய்யும் துடைப்பம் தரமானதாகவும், விலை குறைவாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருந்ததால் அவர்களுக்கு தனியார் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் என நிறைய வாடிக்கையாளர்கள் உருவாகினர். தற்போது அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக மாறி நல்ல வருமானமும் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தவாரம் துடைப்பம் தயார் செய்வதைப் பற்றி பார்ப்போம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
 "ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில், மலையடிவாரங்களில் விளையும் பூந்துடைப்பக் குச்சிகளை அறுத்து வந்து நன்கு காய வைத்து அதிலுள்ள முட்களைத் தட்டி சுத்தம் ஒரு கைப்பிடி அளவுள்ள துடைப்பம் தயார் செய்து 25 பைசாவிற்கு விற்பார்கள். பின்னர், காலத்துக்கேற்ப துடைப்பமும் மாறிவிட்டது.
 தற்போதுள்ள துடைப்பம் தயார் செய்ய முதலீடு என்று பார்த்தால் ரூ.10,000/- செலவு பிடிக்கும். இதை செய்வதற்கு இயந்திரம் தேவையில்லை. கைகளில் செய்யக் கூடிய சுலபமான தொழில். மேலும், இதற்கு தேவையான மூலப் பொருள்கள் குச்சி (டைகர் கிராஸ்) கம்பி, பிளாஸ்டிக் ஓயர், கட்டர் (அ) கத்தி, பிளாஸ்டிக் பைப் ஆகியவையாகும். இந்த மூலப் பொருள்கள் அனைத்தும் சென்னை பாரிமுனையில் மொத்த விலைக்கடைகளில் கிடைக்கும். இந்த துடைப்ப புல் ஒரு கட்டு ரூ. 100 முதல் விற்கப்படுகிறது இதில் 15-20 துடைப்பம் செய்யலாம். அங்கேயே இதற்கு தேவைப்படும் மற்ற பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த துடைப்பத்திற்கான புற்கள் அசாம், திரிபுரா, மேகாலயா போன்ற இடங்களில் விளைகிறது. பார்ப்பதற்கு மூங்கில் மரம் போல் தோற்றம் அளிக்கும். அடர்த்தியாக வளரும்.
 துடைப்பம் தயார் செய்ய ஒரு நாள் பயிற்சி எடுத்தாலே போதுமானது. சிலருக்கு பார்க்கவோ, கேட்கவோ செய்தாலும் ஐடியா வந்துவிடும். குச்சிகளில் பெரியதாக உள்ளதை முதலில் எடுக்கவும். சிறிய குச்சிகளை உள்ளே வைத்து உருட்டிக் கொள்ளவும். பிறகு கம்பியை வைத்து இறுக்கி கட்டவும். உங்களுக்கு இதன் பின்னல் தெரிந்தால் ஒயர் கொண்டும் பின்னலாம். பின்னர் கம்பியை வைத்து முறுக்கி விட்டால் போதும். மற்றொரு வகை குச்சிகளை தேவையான அளவு எடுத்து பின் கம்பியை வைத்து கட்டி விடவும். ஒயர் கொண்டு சுற்றி விடவும். பின்னர், இதற்கென உள்ள பிளாஸ்டிக்கினால் ஆன கைப்பிடி பைப் வைத்து இறுக்கமாக சொருகினால் துடைப்பம் தயார்.
 இதே போன்றுதான் விசிறி மாடல் துடைப்பமும் தயார் செய்ய வேண்டும். இதை பெரியது, சிறியது என சைஸ் வாரியாக செய்யலாம். இதை தனியே விற்பனை செய்யாமல் மொத்தமாக கடைகளுக்கு சப்ளை செய்யலாம். இதற்கான தேவைகள் எப்போதும் உண்டு. வீட்டில் உள்ள பெண்கள் பலர் சேர்ந்து செய்தால் முதலீடு குறைந்துவிடும். பெரிய உழைப்பும் இருக்காது. டென்ஷன் இல்லாமல் செய்யக் கூடியது. நல்ல லாபமும் கிடைக்கும். துடைப்பம் செய்யும் தொழில் தானே என குறைத்து மதிப்பிட வேண்டாம். உண்மை, நேர்மை, தரம் இருந்தால் வெற்றி நிச்சயம்.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com