வலிதான் பதக்கம் பெற உந்துகோலாக அமைந்தது!

சென்ற (2014) ஆசிய போட்டிகளைவிட இரண்டு தங்கப் பதக்கங்கள், பதினொன்று வெள்ளிப் பதக்கங்கள் அதிகம் பெற்று இந்தியா தர வரிசையில் அதே எட்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வலிதான் பதக்கம் பெற உந்துகோலாக அமைந்தது!

சென்ற (2014) ஆசிய போட்டிகளைவிட இரண்டு தங்கப் பதக்கங்கள், பதினொன்று வெள்ளிப் பதக்கங்கள் அதிகம் பெற்று இந்தியா தர வரிசையில் அதே எட்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெண்கள் ஹாக்கி போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் இந்தியா ஏழாம் இடத்தைப் பிடிக்கலாம்.
இந்திய அணிக்கு இத்தனை பதக்கங்களைக் கொண்டு வந்ததில் பெண் வீராங்கனைகளுக்கு அதிகப் பங்குண்டு. மூன்று தங்கப் பதக்கங்களை வினேஷ் பொகாட், ராஹி சார்னோபத், ஸ்வப்னா பர்மன் கொண்டுவர, 400 மீ. தொடர் ஓட்டத்தில் நான்கு பெண் வீராங்கனைகள் ஓடி தங்கம் பெற்றுள்ளனர். இந்தத் தொடர் ஓட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆசிய போட்டிகளில் பெண்கள் அணி வென்று வருகிறது.
இந்திய பெண் வீராங்கனைகளில் நல்ல வசதி படைத்த குடும்பங்களிலிருந்து வருகிற பெண்களும் இருக்கிறார்கள். வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களிலிருந்தும் வீராங்கனைகள் தோன்றுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்வப்னா பர்மன், ஹிமா தாஸ், பி.யு . சித்ரா, தீபா கர்மாகர் என்று பட்டியல் தொடர்கிறது.
மிகச் சாதாரண குடும்பங்களிலிருந்து வரும் பெண் வீராங்கனைகள் தொடக்கத்தில் சந்திக்கும் சவால்கள் பல. முதல் கட்டத்தில், வறுமை. விளையாட்டிற்குத் தேவையான காலணிகள், வேறு உபகரணங்கள் வாங்க முடியாது. ஊட்ட உணவு கனவில் மட்டும். பணம் இல்லாததால், கிராமத்திலிருந்து நகருக்குச் சென்று பயிற்சியாளரிடம் பயிற்சியும் பெற முடியாது. இதையும் தாண்டி விளையாட்டு தேர்வுகளுக்குச் சென்றால், "இதெல்லாம் உன்னால் முடியாது' என்ற நிராகரிப்புகள். ஒரு வழியாக திறமையிருந்தும் பளிச்சென்று காட்டி பல கணிப்பாளர்களின் கவனத்தைக் கவரும் போது... சிலருக்கு கதவுகள் திறக்கின்றன. பிறகு வருவது எதிர்பாரா அனுபவங்கள். அதையும் தாண்டி அரசு உதவிகளுடன் பயிற்சிகள் பெறும் போது பல கட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அரசு உதவிகள், வசதிகள், சத்தான உணவு வகைகள் வீராங்கனைகளை முழுமையாக அடையாது. இப்படி பல வகை தடைகளை இடையூறுகளை மீறித்தான் விளையாட்டு அரங்கில் சாதிக்க வேண்டியுள்ளது.
ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியிருக்கும் முதல் இந்திய பெண் வீராங்கனை ஸ்வப்னா பர்மனின் இரண்டு பாதங்களிலும் தலா ஆறு விரல்கள்.
ஸ்வப்னா பிறந்த போது "ஒரு பாதத்தில் ஆறு விரல் இருந்தாலே அதிர்ஷ்டம். இரண்டு பாதத்தில் தலா ஆறு விரல்களுடன் பிறந்திருக்கிறாள். அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டப் போகிறது' என்றார்கள்.
அது நடக்கவே இல்லை என்பதுதான் நிஜம்.
ஹெப்டத்லான் விளையாட்டில் ஏழு போட்டிகள் நடக்கும். 100 மீ. தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், இருநூறு மீட்டர் ஓட்டம், நீளத் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீ ஓட்டம் என்று ஏழு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கேற்ற உடல் வலுவும், அசாதாரண மன உறுதியும் இருந்தால்தான் ஹெப்டத்லான் போட்டியில் பளிச்சிட முடியும். போட்டிகள் ஏழு என்றாலும், தரப்படும் பதக்கம் என்னவோ ஒன்றுதான்.
அதிர்ஷ்டம் என்று சொல்லப்பட்ட அந்த இரண்டு ஆறாவது விரல்கள்தான் ஸ்வப்னாவிற்கு தடையாக இருந்தன. பாதத்தின் ஆறு விரல்களுக்கு அழுத்தம் வராமல் இடம் தரும் விஷேச காலணி வாங்க ஸ்வப்னாவிற்கு வசதியில்லை. அப்பா பர்மன் ரிக்ஷா ஓட்டிப் பிழைத்து வந்தவர். அவரைப் பக்கவாதம் தாக்க படுக்கையில் வீழ்ந்தார். அம்மா தேயிலைத் தோட்டத் தொழிலாளி. அவர் சம்பாத்யத்தில்தான் குடும்பம் பட்டினியிலிருந்து தப்பி வருகிறது. அப்பா ரிக்ஷா ஓட்டும் போது மகளுக்கு வாங்கித் தந்த காலணியை போட்டிகள் நடக்கும் போது மட்டும் ஸ்வப்னா பயன்படுத்தி வந்தார். பயிற்சிகளின் போது ஐந்து விரல்களுக்குப் பொருத்தமாக இருக்கும் காலணியை அணிந்து ஓடுவார், தாண்டுவார், குதிப்பார். பயிற்சியின் போது அந்த ஆறாவது விரல்கள் காலனியில் இடம் இல்லாமல் ஏனைய விரல்களுடன் இறுக்கப் படுவதால் பெரும்வலி ஏற்படும். நடக்கும் போது ஏற்படும் வலி, ஓடும்போது விண் விண் என்று தெறிக்கும். உயிர் போகிற வலியைப் பொறுத்துக் கொண்டு ஸ்வப்னா தங்கத்தைத் துரத்தியிருக்கிறார். அப்பா வாங்கித் தந்த பழைய காலணியை அணிந்து தனக்குப் பதக்கத்தையும் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அந்த இரண்டு ஆறாவது விரல்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கலாம். "அவற்றை அதிர்ஷ்டம் என்று சொல்லி வளர்த்தார்கள்.. போகப் போக அவை எனது அடையாளமாகிவிட்டன... அதனால் அவற்றை அகற்ற மனம் வரவில்லை'' என்கிறார் ஸ்வப்னா பர்மன்.
கால்கள் தந்த அதீத வலி வேதனைகளுடன் தீவிர பல்வலியும் ஸ்வப்னாவை ஒரு வழி செய்துவிட்டது. போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பல்வலி ஸ்வப்னாவை இம்சிக்கத் தொடங்கிவிட்டது. பல்வலி தலையில் சம்மட்டி அடிப்பதை போன்ற வலி அதிர்வுகளை ஏற்படுத்த நடக்கவே தள்ளாடினார். பல்வலியை உணராமல் இருக்க மருந்து மாத்திரைகள் ஏதும் உட்கொள்ளவில்லை. மருந்து உட்கொண்டால் மருத்துவப் பரிசோதனையில் முடிவுகள் மருந்துகளின் வீரியத்தால் ஏடாகூடமாக அமைந்து விட்டால், போட்டியில் பங்கெடுக்க முடியாதே என்ற பயம் ஸ்வப்னாவை " மருந்து மாத்திரை வேண்டாம்.. வலியையைப் பொறுத்துக் கொள்ளலாம்' என்ற முடிவுக்குத் தள்ளியது. பல்வலியால் ஸ்வப்னாவிற்குச் சரியாக சாப்பிடவும் இயலவில்லை. வலது தாடையும் வீங்கி விட்டது. தங்கக் கனவு தவிடு பொடியாகிவிடக் கூடாது என்பதற்காக பல், கால்கள் தந்த வலிகளின் கூட்டணியை எதிர் கொண்டார். இந்திய தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று, அதிகப் புள்ளிகள் பெற்று ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் முதல் தங்க மங்கையாக சாதனை படைத்துள்ளார்.
ஸ்வப்னாவின் இந்த மகத்தான சாதனைக்குப் பின் மேற்கு வங்க அரசு பத்து லட்சம் பரிசும் அரசு வேலையும் தருவதாக அறிவித்துள்ளது. ஸ்வப்னாவின் சிரமங்களை அறிந்து கொண்ட சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஆறு ஜோடி பிரத்யேக காலணிகளை பரிசாக வழங்க அமெரிக்காவின் "நைக்' காலணி நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்றாலும், ஸ்வப்னாவின் வெற்றியும் அதற்குப் பின்னால் அவர் அனுபவித்த வலியும்தான் இந்த உதவிகள் வர காரணங்களாக அமைந்துள்ளன.
"வலிதான் பதக்கம் பெற உந்துகோலாக அமைந்தது' என்று ஸ்வப்னா ரத்தினச் சுருக்கமாகச் சொன்னதில் எத்தனை ரணங்கள் மறைந்துள்ளன என்பதை உணர முடியும்.
கூலித் தொழிலாளிகளான பெற்றோருக்கு மகளாய் பிறந்த பி.யு. சித்ரா சரித்திரத்தில் முதுநிலைப் பட்டதாரி. இதுவரை அரசு வேலை எதுவும் தரப்படவில்லை. உலக சாம்பியன் போட்டியில் 1500 மீ. ஓட்டப் போட்டியில் தூரத்தைக் கடக்க சுமார் நான்கு நிமிடங்கள் பன்னிரண்டு விநாடிகள் எடுத்து சாதனை புரிந்த சித்ரா, ஆசிய போட்டியில் அதே தூரத்தைக் கடக்க சுமார் நான்கு நிமிடங்கள் பதின்மூன்று விநாடிகள் எடுத்துக் கொண்டதால் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
போட்டியாளர்களின் திறமைகள் அதிகரிப்பதால் விளைந்த மாற்றம் இது. சித்ரா புதிய சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்ப்பு நீர்க் குமிழியாக உடைந்தது.
சித்ரா போல் ஹிமா தாஸும் புதிய சாதனை நிகழ்த்துவார் என்ற எதிரிபார்ப்பும் பலிக்கவில்லை. ஆனால் அவர் ஆசிய விளையாட்டிற்கு முன்னதாகப் படைத்த சாதனை பல விளம்பர வாய்ப்புகளை அளித்துள்ளது. சாதாரண குடும்பத்திலிலிருந்து வந்த சிந்து இன்று தனது திறமையால் நூறு கோடிக்கும் மேலாக சம்பாதித்துள்ளார். பதட்டத்தால் பின்தங்கியவர்கள் ஹிமா, சித்ரா உள்ளிட்ட வீரர்கள் அனைவருக்கும் பதட்டம் , மன அழுத்தத்தைக் கையாளும் பயிற்சி வெகு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது .
தட்டு எறிவதில் சாதனை படைப்பார் என்று கணிக்கப்பட்ட சீமா புனியா தனக்கு கிடைத்த வெண்கலப் பதக்கத்துடன் வழங்கப்பட்ட பரிசுத்தொகையான ஐம்பதாயிரத்துடன் தந்த பங்காக ஒரு லட்சம் சேர்த்து கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த டூட்டி சந்த்யிடம் ஆண்மைத்தனம் உள்ளதாக புகார் எழுந்து, இறுதியில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பெண்களுக்கான ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 100, 200 மீ ஓட்டப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்த ஒடிசா அரசிடம் மூன்று கோடி பரிசாகப் பெறப் போகிறார்.
பரமபதத்தில் மேலே போய் கீழே வருவது போன்று அல்லாடியவர் கைத் துப்பாக்கி வீராங்கனை ராஹி சர்னோபத். சற்றும் தடுமாறாமல் நின்று விளையாடி 25 மீ கைத் துப்பாக்கி சுடுவதில் தங்கப் பதக்கம் வென்றவர். மிகவும் எதிர்பார்க்கப் பட்ட மனு பாகெர் குறைந்த புள்ளிகள் எடுத்ததால் விளையாட முடியாமல் போக... கை கொடுத்தவர் ராஹி.
வெள்ளிப் பதக்கங்கள் பெற்றிருக்கும் பின்கி பலோரா, அபூர்வி சந்தேலா, நீனா வரகில், சுதா சிங் குறிப்பிடத்தக்கவர்கள்.
கபடியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வாங்க... பெண்கள் அணி வெள்ளி பெற்றது ஆறுதலான விஷயம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி இறுதிச் சுற்றில் ஆடுவது ஆனந்தத்தையே தருகிறது.
பொருளாதார பாதுகாப்புடன், வாய்ப்பு வசதிகள் கிடைத்தால் இந்திய வீராங்கனைகள் புதிய சாதனைகள் படைப்பார்கள்..!
- ஏ.வல்லபி








 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com