ஸதியின் சாதனை!

ஆசிரிய சமூகத்தில்  "நல்லாசிரியர்'  விருது  வழங்கிவரும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு  தமிழகத்திலிருந்து  ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸதியின் சாதனை!

ஆசிரிய சமூகத்தில்  "நல்லாசிரியர்'  விருது  வழங்கிவரும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர்  ஐந்து - ஆசிரியர் தினத்தன்று  டில்லியில் இந்த விருதினைப் பெற்று வந்திருக்கிறார் ஆர். ஸதி. இவர் கோவையை அடுத்த  மதுக்கரை ஒன்றியத்தில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஸதியால் பள்ளியின் தரம் மட்டும் உயரவில்லை. பேரூரான மலுமிச்சம்பட்டியே புரட்சிகரமான  மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தேசிய அளவில்  நல்லாசிரியர் விருது ஸதிக்கு கிடைப்பதற்கு  இதுவும் ஒரு காரணம். தனது கல்விப் பயணம் குறித்து   ஸதி  மனம் திறக்கிறார்:

""எனது சொந்த  ஊர்  கோத்தனூர்.  அப்பா கல்வித் துறையில் பணியாற்றியவர். 1995-இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். சரித்திரத்தில் முதுநிலைப் பட்டத்துடன், தமிழ் இலக்கியத்தில் இளநிலை பட்டப்படிப்பை  முடித்துள்ளேன். கணவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்சமயம் வங்கியில் பணி புரிகிறார். மகள் பிரஷிதா. பொறியியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு மாணவி. மகன் பிரஜ்வின் ஒன்பதாம் வகுப்பில்.   நடுவில்  இடமாற்றங்கள் வந்தன.  2009 -ஆம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்தது.  ஏன்   "ஸதி'  என்று  பெயர் வைத்தார்கள் என்று  சிலர் கேட்பார்கள்.  பார்வதியின் இன்னொரு பெயர்தான் "ஸதி'  என்று விளக்கம் தருவேன்.   

மலுமிச்சம்பட்டி தலைமை ஆசிரியராக 2012 -இல்  பொறுப்பு எடுத்துக் கொண்ட போது, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பெற்றோர்களை அவர்களது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.  பள்ளியில் கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. இருந்தவகைகளும் மோசமான நிலையில் இருந்தன. முதலில் அதை சீர்  செய்ய வேண்டுமென்றார்கள். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதி உதவி கேட்க, ஒரு லட்சம் கிடைத்தது. கழிப்பறைகளை புதுப்பிக்க அந்தத் தொகை போதுமானதாக இல்லை. கூடுதல் உதவி பெற ஊருக்கு அருகில் செயல்படும் "எல் அண்ட் டி' நிறுவனத்திடம் பள்ளியின் நிலைமை குறித்து விளக்கினோம். 

எங்களது அணுகு முறையினால்  "எல் அண்ட் டி' நிறுவனம்   எங்கள்  பள்ளியை தத்து எடுத்துக் கொண்டது. அது பள்ளிக்கு திருப்புமுனையாக அமைந்தது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. வசதிகள் பெருகியது. தரையில் சலவைக் கற்கள் பதிக்கப்பட்டன. ஸ்மார்ட் அறை ரெடியானது. அடிப்படை  ஆங்கிலம், கணக்கு கற்பிக்க இரண்டு சிறப்பு ஆசிரியர்களையும் "எல் அண்ட் டி' நிறுவனம் பணியில் அமர்த்தியது. இன்னொரு தனியார் நிறுவனமான "மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்' கணினி பயிற்சி வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. 

பள்ளியில் "டேப்லெட்'  பயன்பாட்டுடன்  சரியான ஆங்கில உச்சரிப்பை சிறப்பாசிரியர்கள் சொல்லித் தரத் தொடங்கியதிலிருந்து ஒரு புதிய திசை நோக்கி பயணம் ஆரம்பித்தது.  அதனால் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் வந்திருக்கிறது.  "விகேசி' நிறுவனம்  ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி ஆண்டு துவக்கத்தில் காலணிகள், டை, ஐ.டி கார்டுகளை வழங்கினார்கள். இந்த உதவிகளால்  பின்தங்கியிருந்த  பள்ளிக்கும்,  அங்கு படிக்கும் மாணவர்களுக்கும்  பெருமளவு மாற்றம்  ஏற்பட்டது. இந்த மாற்றம் பள்ளி மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கையை விதைக்க... பள்ளிக்கு வராதவர்கள் கூட வருகை தர ஆரம்பித்தார்கள்.  அதனால் மாணவர்களின் எண்ணிக்கை  146  லிருந்து  270  ஆக உயர்ந்தது. 

இந்த பள்ளியின் சிறப்பம்சம் சுமார் 25 மாற்றுத் திறனாளிகள் படித்து வருவதுதான்.  வட மாநிலங்களிலிருந்து வேலை நிமித்தம் இங்கு வந்து தங்கியிருப்பவர்களின் குழந்தைகளும்  படிக்கிறார்கள்.  வசதியில்லாத  இந்தக் குழந்தைகளுக்கு  எங்களால் ஆன  உதவிகளை செய்துவருகிறோம்.

சுகாதாரப் பணியாளர்  ஒருவரையும் ஏற்பாடு செய்துள்ளோம்.  அதனால், பள்ளி வளாகம்,  கழிப்பறைகள் சுத்தமாக  இருக்கின்றன.   பள்ளியில்  முதன் முதலாகச் சேரும்  மாணவர்களுக்கு மாலை அணிவித்து  நாங்கள் செய்யும் வரவேற்பு காத்திருக்கிறது. விவசாயம், தோட்டம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் மாணவர்களைக் கொண்டு தோட்டம் அமைத்திருக்கிறோம்.

பெற்றோர்களை  மாணவர்களின் கல்வியில்,  கவனிப்பில் பங்கு பெற வேண்டும்  என்பதற்காக  ஒவ்வொரு வகுப்பிலும்  ஐந்து அன்னையர்கள் அடங்கிய  குழு ஒன்றினை   உருவாக்கினோம்.  பல  வேளைகளில் அவர்களுடன்  கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம்  செய்து கொள்கிறோம். வாசிப்பு அவசியம் என்பதற்காக  நாளிதழ்கள் பத்திரிகைகளை வாங்கி மாணவர்களை வாசிக்க  வைக்கிறோம்.  பாடங்களை நாடக பாணியில் நடத்துவதால் மாணவர்கள் வகுப்பில்  லயித்து ஐக்கியமாகிவிடுகிறார்கள். 

இந்தியாவில்  திறந்த வெளியை  இயற்கை  அழைப்புகளை  நிவர்த்தி செய்வதற்காகப்   பயன்படுத்துகிறார்கள்.   "குட்டி கமாண்டோ' என்ற பெயரில் குழு ஒன்றினை  அமைத்து   காலை மாலை வேளைகளில்  திறந்த வெளியில்  யாராவது அசுத்தம் செய்து கொண்டிருந்தால், உடனே  கையில் இருக்கும் விசிலை முழக்கி  சக மாணவர்களைக் கூட்டி ""இங்கே அசுத்தம் செய்யக் கூடாது. நோய் பரவும்.  பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துங்கள்'' என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறோம். 

வழக்கமான  கரும்பலகைகளை  மாற்றிவிட்டு  புதிதாக  பச்சை போர்டுகள்   பொருத்தப்பட்டன.  புரொஜக்டர், கணினி வழி பாடங்கள் செய்முறைகள் நடத்தப்படுகின்றன.  உள் அரங்கு, திடல்  விளையாட்டுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த வசதிகள்  நகர்ப்புற   பள்ளிகளில் இருக்கலாம். அவற்றினை  மலுமிச்சம்பட்டி தொடக்கப் பள்ளியில்  கொண்டு வந்துள்ளோம்  என்பது  ஒரு சாதனைதான். 

இந்தப் பள்ளி  கொண்டு வந்த மாற்றங்கள்,  இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட  ஆட்சியர்   மாணவர்கள் பலருக்கு  விருது வழங்கி பாராட்டினார்.  2016-இல்  கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது  எங்கள் பள்ளிக்கு   வழங்கப்பட்டது.  2017-இல் தமிழகத்தில் சிறந்த பள்ளிக்கான  "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'  எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. விருதுகளின் அடுத்த கட்டமாக  "நல்லாசிரியர்'  விருது வாங்கச் சென்றிருந்த  போது பிரதமர் மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது''  என்கிறார் ஸதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com