Enable Javscript for better performance
சுறுசுறுப்பாக்கும் சுருக்கு பைகள்!- Dinamani

சுடச்சுட

  
  LATHIKAA

   

  அன்றைய பாட்டிமார்களிடம் பேரன் பேத்திகள் "மிட்டாய் வாங்கணும்.. காசு கொடு.." என்று கேட்கும் போது பாட்டி இடுப்பில் சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பையை எடுத்து விரித்து சில்லறைகளை "இந்தா கண்ணு' என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருவார். அந்தத் தலைமுறை பாட்டியுடன் சுருக்குப் பையும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அந்த சுருக்குப் பைக்கு மறுவாழ்வு தந்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார் லதிகா சக்கரவர்த்தி. இவரின் வயது எண்பத்தொன்பது. வெறும் சுருக்குப் பைதானே என்று தைத்துப் போடாமல் கலை அழகு மிளிர பல வண்ணங்களில் தயாரித்து அசத்தி வருகிறார் லதிகா. இந்த முதுமையிலும் தையல் வேலைகளை லதிகாவே செய்கிறார். "வயது வெறும் எண் மட்டுமே, உங்களுக்குத் பிடித்த வேலையை மன மகிழ்ச்சியுடன் செய்யும் போது முதுமை போய் இளமை வந்துவிடும்'' என்கிறார் லதிகா அவர் மேலும் கூறுவதாவது:
   "எல்லாம் முகநூல் செய்யும் அற்புதம்தான். "லதிகாஸ் பேக்ஸ்' என்று முகநூல் பக்கம் ஆரம்பித்து மூன்று மாதம்தான் ஆகிறது. ஓமன், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து "சுருக்குப் பைகள் தேவை' என்று ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திகைத்துப் போய்விட்டேன். இத்தனை ஆர்டர்களை நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் இருந்தாலும் சுருக்குப் பைகளின் தயாரிப்பை ஆர்டர்களுக்குத் தக்கவாறு தயாரிக்கிறேன். உடலும் மனதும் ஒத்துழைக்கிறது. காரணம், எனது சுருக்குப் பைகள் தனித்துவத்துடன் மிக அழகாக இருக்கும். அதை வாடிக்கையாளர்கள் சரியாக அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் விற்பனையாகும் சுருக்குப் பைகளுக்கு விலை ஐநூறு முதல் ஆயிரத்தி ஐநூறு வரை வரும்.
   எனது சொந்த மாநிலம் அசாம். அங்கே துர்பியில் பிறந்தேன். படிப்பு நிறைவானதும் மத்திய அரசு அதிகாரியாக இருந்த கிருஷ்ணா லால் சக்கரவர்த்தி என்பவருக்கு மனைவியானேன். கணவருக்கு மாறுதல் அடிக்கடி கிடைக்கும். அதனால் அவருடன் இந்தியாவின் பல பாகங்களில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புதிய சூழலில் பல புதிய நட்புகள் பூத்தன. பலவகை கலாச்சாரங்கள் அறிமுகமாயின. பல்வேறு டிசைன்களில் உடைகள், துணிமணிகள், சேலைகள் பரிச்சயமாயின. அவற்றின் அழகு, நேர்த்தி என்னைத் தையலின் பக்கம் அழைத்துச் சென்றது. தையல் வேலையை வீட்டில் குழந்தைகளுக்காக ஆரம்பித்தேன். நாளடைவில் குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கத் தொடங்கினேன். பொம்மைகளுக்கு ஆடைகள் தயாரிக்கணுமே, அவற்றையும் தைக்க ஆரம்பித்தேன். தையல் எனது மூச்சாக மாறியது.
   கணவர் இறந்ததும் மகனுடன் தங்கினேன். அங்கும் தையல் வேலையைத் தொடர்ந்தேன். சில ஆண்டுகள் இப்படியே ஓடியது. திடீரென்று சுருக்குப் பைகளைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. உடனே தொடங்கவும் செய்தேன். "இனி உடுக்க வேண்டாம்' என்று ஒதுக்கும் சேலைகள், குர்த்திகள் சுருக்குப் பைகளாக மாறின. தொடக்கத்தில் சுருக்குப் பைகளை நட்பு வட்டத்தில் விநியோகித்தேன். மறந்து போன சுருக்குப் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
   எனக்காக முகநூல் பக்கத்தைத் தொடங்கியது எனது பேரன்தான். சுருக்குப் பைகளை பேரன் படம் பிடித்து "லத்திகாஸ் பேக்ஸ்' என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, அவற்றைப் பார்த்தவர்கள் பைகளை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டினார்கள். அதைக் கண்டு என்னை உற்சாகம் பிடித்துக் கொண்டது. சுறுசுறுப்பானேன். சுருக்குப் பைகளை அதிக அளவில் தயாரித்து வருகிறேன்'' என்கிறார் லதிகா சக்கரவர்த்தி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai