உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்!
By DIN | Published On : 04th April 2019 01:30 PM | Last Updated : 04th April 2019 01:30 PM | அ+அ அ- |

வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
நானும், என் மனைவியும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறோம். இதனால் என் மகளை கூட எனக்கு காட்ட மறுக்கிறார் என் மனைவி, நான் என் மகளை காண என்ன செய்யலாம்?
- சு.கதிரேசன், காட்பாடி.
கருத்து வேறுபாடால் பிரிந்திருந்தாலும், உங்கள் மகளை நீங்கள் காண எல்லா உரிமையும் உள்ளது. எனவே, நீங்கள் நீதிமன்றம் மூலம் அணுகவும்.
எந்த மனைவிக்கும் சரி, கணவனுக்கும் சரி, குழந்தைகளை பெற்றோரிடத்தில் இருந்து பிரிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. மனைவியாக இருந்தாலும், கணவனாக இருந்தாலும் குழந்தைகளைப் பார்க்க "விசிட்டிங் ரைட்ஸ்' என்று இருக்கிறது. எனவே, நல்ல வக்கீல் மூலம் நீதிமன்றத்தை அணுகி உங்களுக்கான விசிட்டிங் ரைட்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், அதற்கு முன்பு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை வைத்து மனைவியின் குடும்பத்துடன் பேசி பாருங்கள். அது உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், பிறகு நீதிமன்றத்தை நாடுங்கள். அவர்கள் காண்பிக்கவில்லை என்பதற்காக மகளை பார்க்காமல் இருந்துவீடாதீர்கள், என்ன இருந்தாலும் நீங்கள், உங்கள் மகளுக்கு தந்தை. அந்தக் கடமையை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்.
என் கணவர் ஏற்கெனவே மணமானவர், அதனை மறைத்து என்னை மணந்துள்ளார். அதற்கான ஆவணங்களை நான் பார்த்துவிட்டேன். இனி இந்த திருமண வாழ்வு நீடிக்குமா? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
- உ. காமாட்சி, சென்னை.
முதலில் உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு நாட்கள் ஆகின்றது. குழந்தைகள் உள்ளனரா? என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இது பிரச்னைக்குரிய விஷயம்தான். உங்கள் கணவர், உங்களை ஏமாற்றி திருமண செய்திருக்கிறார். எனவே, இந்தத் திருமண வாழ்க்கை நீடிக்குமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது.
உங்களை ஏமாற்றி திருமணம் செய்திருந்தாலும், தற்போது உங்களுக்கு ஏற்றவராக, உங்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால், மேலும், அவரில்லாமல், உங்களால் வாழ முடியாது என்று உங்களுக்குத் தோன்றினால் இந்த திருமண வாழ்க்கை நீடிக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றினவர், ஏமாற்றினவர் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தால் இந்தத் திருமண வாழ்க்கை நீடிக்காது. அதனால் உங்களுடைய இந்த வாழ்க்கை நீடிப்பதும், நீடிக்காததும், நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும், உங்கள் கணவரின் வாதத்தையும் பொருத்ததுதான். ஆகவே, நன்கு பலமுறை யோசனை செய்து, பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுங்கள்.
சந்திப்பு: ஸ்ரீதேவி