பலாத்காரம், வன்கொடுமை அந்த நாளில் இல்லை!

சூரியனை ஒரு குடத்தில் அடைத்து வைக்க இயலாது என்பார்கள். அதுபோல மனித ஆற்றலையும் அடக்கி வைத்தல் இயலாது.  ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது வெளிப்பட்டே தீரும்.
பலாத்காரம், வன்கொடுமை அந்த நாளில் இல்லை!


சூரியனை ஒரு குடத்தில் அடைத்து வைக்க இயலாது என்பார்கள். அதுபோல மனித ஆற்றலையும் அடக்கி வைத்தல் இயலாது.  ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது வெளிப்பட்டே தீரும்.  பெண் என்பவளை ஆற்றலின் வடிவமாக இந்தியா போற்றுகிறது. துடிப்புமிக்க பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன் நிற்கிறார்கள். எத்தகைய குடும்பங்களில் பிறந்த போதிலும் அவர்களது ஆற்றல் வெளிப்பட்டு விடுகிறது.  நம் தேசத்திற்கும்  உலகத்திற்கும் அவை பெருமை சேர்க்கின்றன. அப்படிப் பெருமைமிக்க பெண்ணாக வலம் வருபவர் தான் இந்திய மகளிர் கிரிக்கெட்  அணியில் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பெற்ற  சுமதி ஐயர்.  விளையாட்டு வீராங்கனைகள் அதிகம் பேர் இருந்த போதிலும் கிரிக்கெட் விளையாட்டைப் பொருத்தவரை ஒரு பெண் அம்பயராக இந்தியாவில் முதன்முதலில் தன்னை நிரூபித்தவர் இவர்.  1975 முதல் 27 ஆண்டுகள் கிரிக்கெட் வீராங்கனையாகத் திகழ்ந்த சுமதி ஐயர் இன்றுவரை அம்பயராக தனது சேவையை அவரை வளர்த்தெடுத்த இந்த துறைக்கு அளித்து வருகிறார்.  62 வயதிலும் சுறுசுறுப்பு குறையாமல் ஆர்வமும் துடிப்பும் மிக்க இளம் பெண் போலவே உரையாடுவதிலும், செயலாற்றுவதிலும் முன் நிற்கும் சுமதி ஐயர் அவரது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:


உங்களுடைய சிறுவயது அனுபவங்களைச் சொல்லுங்களேன்?

சிறுவயதில் பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தேன் என்பதுதான் என் வாழ்க்கையில் மிக பசுமையான எல்லாவற்றுக்கும் காரணமான ஒன்றாக அமைந்தது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மா, அத்தை, மாமி, மாமா, சித்தி என்று எல்லா உறவுகளும் ஒரே வீட்டில் இருந்தோம்.  அவர்களுடைய குழந்தைகள் அனைவரும் ஒன்றாகவே விளையாடினோம். ஒரே பள்ளிக் கூடத்தில் ஒன்றாகவே பள்ளிக்குச் சென்றோம். வீடு ஒரு பள்ளிக்கூடம் போல அமைந்திருந்தது. மிக எளிதாக வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் எல்லாவற்றையும் அன்றாட வாழ்க்கையைக் கற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

உங்கள் பெற்றோர் பற்றி? 

ரொம்பவும் கன்சர்வேடிவ் குடும்பம்தான்.  எங்கள் தாத்தா சம்ஸ்கிருத பண்டிதர். சம்ஸ்கிருதத்தில் இலக்கண நூல் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் எங்களை சுற்றிலும் உட்கார வைத்துக் கொண்டு ஸ்லோகங்களை சொல்லித் தருவார் எப்படி சொல்ல வேண்டும் என்று திருத்துவார். ஒழுங்குமுறை அவரிடம் கற்றுக் கொண்டது தான். எங்களை வளர்க்க அம்மா செய்த தியாகங்களை சொல்லி முடியாது. பெரிய கூட்டுக் குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்து எங்களுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தது அம்மாதான். கன்சர்வேட்டிவ் ஆன குடும்பம் பெண் குழந்தைகள் பாவாடை  தாவணி போட்டுக் கொண்டு கோலம் போடுவது, ஸ்லோகம் சொல்வது அடுக்களையில் உதவி செய்வது என்று இருந்த குடும்பத்தில் என்னுடைய விருப்பங்களுக்கு மரியாதை தந்து அப்பா உற்சாகப்படுத்தி என்னை விளையாட்டுத் துறைக்கு அனுமதித்தார்.

முதன் முதலில் நீங்கள் விளையாடத் தொடங்கியது பற்றி சொல்லுங்களேன்?

முதன் முதலில் களத்தில் விளையாடியது என்பதற்கு முன்னால் ஒரு சிறிய வரலாறு இதற்கு உண்டு. சிறு வயதில் கூட்டுக் குடும்பத்தில் ஆண் குழந்தைகளும்,  பெண் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து விளையாடினோம். மயிலாப்பூரில் எங்கள் தெருவில் மாங்காய் மரம் ஏறி மாங்காய் அடிப்பதில் இருந்து ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து பட்டம் விடுவது, கோலி ஆடுவது, பம்பரம் விடுவது என்று எல்லா விளையாட்டுகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. கிரிக்கெட் மிகப் பிடித்த மான மனதுக்கு நெருக்கமான விளையாட்டாக இருந்தது. நான் அற்புதமாக விளையாடுவேன். அதனால் என்வீட்டில் என்னுடைய சகோதரிகள் நான் நன்றாக ஆண்பிள்ளைகளை மிஞ்சி ஜெயிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார்கள். இதையெல்லாம் பார்த்த என்னுடைய குடும்பத்தார் இந்தத் துறையில் நல்ல பயிற்சி பெறவேண்டும் என்று பின்னர்தான் என்னைப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இதிலே என்னுடைய அப்பாவைத் தான் நான் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன் அந்த நாளில் அவர் என் விருப்பங்களுக்கு அவ்வளவு மதிப்பளித்தார்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்த போதும்,  மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் படித்த போதும் நான் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியை மட்டும் விடவே இல்லை. சட்டக் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்நாட்டுக்காக விளையாடவும் தொடங்கியிருந்தேன்.  1975 -இல் தான் முதல் முறையாக களம் இறங்கினேன். அதனால் எனக்கு அந்த நாளில் நல்ல பெயரும் புகழும் வந்திருந்தது.

கிரிக்கெட்டில் உங்களுக்குக் கிடைத்த பயிற்சி பற்றி சொல்லுங்கள்?

அப்போதெல்லாம் பயிற்சி என்பது மிகுந்த பொருட்செலவில் செய்யவேண்டியதாக இருக்கவில்லை. ஆர்வம் இருந்தால் போதும் பயிற்சியாளர்கள் உற்சாகமாக நமக்குப் பயிற்சி தருவார்கள். இந்த சென்னையில் அப்போது நான் விளையாடாத விளையாட்டு மைதானங்களே இல்லை. எல்லா இடங்களிலும் பயிற்சியாளர்கள் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். அதன் விதிமுறைகளை, நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். குரு என்று சொல்லும்பொழுது நான் ஒருவரைக் குறிப்பிட முடியாது ஏனென்றால் அத்தனை விளையாட்டு மைதானங்களிலும் நடக்கும் பயிற்சிகளுக்கு நான் சைக்கிளிலேயே அந்த காலத்தில் சென்று வருவேன். எல்லாருமே என்னிடம் மிகுந்த அன்போடு எனக்குப் பயிற்றுவித்தார்கள். காந்தி நகர் கிளப்பில் தான் முதல் முறையாக நான் கிரிக்கெட் விளையாட்டை முனைப்போடு எடுத்துக் கொண்டு பயிற்சிக்காக சென்றேன்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய விளையாட்டில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள்?

இப்போதெல்லாம் பெண் குழந்தைகள் மிகுந்த அளவில் பல துறைகளிலும் தங்கள் ஆற்றலைக் காட்ட முன் வருகிறார்கள். ஆனால் இப்பொழுது கேள்விப்படும் பலாத்காரம், வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் இவை எதையுமே நான் என்னுடைய இளம் வயதில் சந்தித்ததில்லை. ,ஆண்களோடு தான் விளையாடினோம்,  ஆண்கள்தான் பயிற்சியாளர்களாக இருந்தார்கள். எல்லாரும் மிகுந்த உற்சாகத்தோடு உற்சாகப்படுத்தினார்கள் தவிர இப்படியான அனுபவங்கள் எங்களுக்குத் துளியும் அந்த  நாட்களில்  இருந்ததில்லை. இன்றைய பெண் குழந்தைகளுக்கு நிகழும் அவலங்களைக் கேட்கும்போது மனம் வெதும்புகிறது.  ஆனால் நிலைமை இப்படி மாறியது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அம்பயர் ஆகும் எண்ணம் தோன்றியது பற்றி சொல்லுங்கள்?

பி.கே.தர்மலிங்கம் தான் எனக்கு புத்தகங்கள் வாங்கித் தந்து கிரிக்கெட்டின் விதிமுறைகளையும் கற்றுத் தந்து பயிற்சியும் கொடுத்தார். 1977-ஆம் ஆண்டிலேயே நான் அம்பயர் ஆக வேண்டும் என முனைப்பு காட்டினேன். தேர்வு எழுதினேன். கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கான விதிமுறைகளை முழுமையாக கற்றுக்கொள்ள அப்போது உண்டான ஆர்வம் தான் இன்றுவரை என்னை இந்தத் துறையில் நிறுத்தி வைத்துள்ளது. 2019 -இல் சமீபத்தில்கூட சர்வதேசப் போட்டிகளில் அம்பயராக இருந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் விளையாட்டு சார்ந்த கேள்விகளைக் கேட்டுக் கேட்டு எங்கள் பயிற்சியாளர்கள் அவற்றிற்கு பொறுமையாக விளக்கம் தந்து என்னுடைய அம்பயர் கனவை நனவாக்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்களுடைய பணி பற்றி?

விளையாட்டுத் துறை சார்ந்ததற்காக எனக்கு 1981-இல் கனரா வங்கியில் வேலை கிடைத்தது.  அதிலும் நான் சிறந்து விளங்கினேன். விளையாட்டுத் துறையில் எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்த ஒழுக்கம் வேலையை சீரான முறையில் செய்வது வங்கிப் பணியிலும் எனக்குக் கை கொடுத்தன. இதனால் அங்கும் நல்ல பெயர் கிடைத்தது. பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்ந்த பெண்களுக்கு நான் ஆலோசனைகளை வழங்கிவரும் பொறுப்பிலும் இருந்திருக்கிறேன்.

சிறுவயதிலேயே உங்களுக்குக் கிடைத்த புகழை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்தக் காலத்தில் வீடியோ கவரேஜ் கிடையாது.  நாங்கள் விளையாடியது பற்றிய செய்தி வரும் போது சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும். அதுவே எங்களுக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு புகழ் தந்தது. விளையாட்டு என்பதில் வர்த்தகமோ, அது தொழில் என்ற எண்ணமோ கிடையாது. மனதில் ஆர்வம்  மட்டுமே இருந்தது. மாநிலத்திற்காக விளையாடுகிறோம், இந்தியாவிற்காக விளையாடுகிறோம் என்ற உற்சாகமும் ஆர்வமும் மட்டுமே இருந்தது.

விளையாட்டு சார்ந்த உங்களுடைய பயணம் விளையாட்டு அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்?

அந்த நாட்களில் மேட்ச் அறிவிக்கப்பட்டு விடும்.  ஆனால் நமக்கு ஸ்பான்சர்கள் இருக்க மாட்டார்கள். பெற்றோர் தான் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.  அதே நேரத்தில் எங்கள் குழுவில் யாராவது ஒருவரின் பெற்றோரை நாங்கள் மேனேஜர் போல வைத்துக்கொண்டு அவரிடம் எல்லாப் பொறுப்புகளையும் தந்து விளையாடுவதற்காக அழைத்துச் செல்வோம். மேனேஜர்கள் இல்லை, ஸ்பான்சர்கள் இல்லை, வீடியோ கவரேஜ் இல்லை ஆனால் ஒவ்வொரு முறையும் ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த போதும் குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல மகிழ்ச்சியாக பயணித்த அனுபவங்கள் இன்றைக்கும் மனதில் இனிப்பாக நிறைந்திருக்கின்றன. எத்தனையோ முறை கைகளில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.  ஆனாலும் மேட்சுகளில் விடாமல் விளையாடித் தீர்ப்பது என்ற உத்வேகம் குறைந்ததே இல்லை.

1975- இல் தான் முதல் முறையாக களம் இறங்கினேன் .1981- இல் தான் முதல் முதலாக இந்திய அணியின் சார்பில் சர்வதேச போட்டியில் பங்கேற்றேன். ஏறத்தாழ 27 ஆண்டுகள் நான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் விளையாடி இருக்கிறேன். தமிழ்நாடு அணிக்கும் தென்னிந்திய அணிக்கும் தலைமை ஏற்று இருக்கிறேன். பேஸ்பால் விளையாடுவதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.  தமிழ்நாடு பேஸ்பால் அணிக்குத் தலைமையேற்று விளையாடியிருக்கிறேன்.

அம்பயராக உங்கள் பணியை எப்போது தொடங்கினீர்கள். இந்தத் துறையில் நீங்கள் வகித்த பொறுப்புகள்? 

1977-இல்  இக்பால்தான் என்னை முதல் முதலாக அம்பயராக அழைத்து வாய்ப்பு தந்தவர்.  அது ஆண்களுக்கான போட்டி. அங்கு தொடங்கிய பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1973 -இல் தொடங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பரிணாம வளர்ச்சி பற்றி?

சாந்தா ரங்கசாமி எங்கள் குழுவினர் எல்லாரையும் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் மூதாதையர்களாக தற்போது கூறுகிறார்கள்.  பிசிசிஐ,  இந்திய மகளிர் அணியை எடுத்துக் கொண்டது வரை எங்களுக்கு என்று ஸ்பான்சர்கள் யாரும் இருந்ததில்லை. தற்போது நிலைமை அப்படி இல்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இந்திய மகளிர் அணிக்கு நல்ல வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டிருக்கிறது.  2006-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிக நல்ல வளர்ச்சியை  கண்டிருக்கிறது. அணியினர் தேர்வு முதல் அவர்களுக்கான பயணம், பயிற்சி என்று எல்லாவற்றிலும் மேம்பட்ட சேவை வழங்கப்படுகிறது. பொருளாதார நிலை பற்றிய கவலையின்றி வீராங்கனைகள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கான தரமான நிலை இப்போது தோன்றியிருக்கிறது.  பல பெற்றோர்,  தங்கள் பெண்களை இந்தத் துறைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். பிசிசிஐ அவர்களை அடையாளம் காண்பதற்கு மெனக்கெடுகிறது. மகளிர் விளையாட்டுப் போட்டிகளும் உலகம் முழுவதும் தற்போது எடுத்துச் செல்கிறது. 

உங்கள் வெற்றிக்கான காரணம் என்று எதைச் சொல்வீர்கள்?

முதலில் மனதில் இருக்கும் துடிப்புமிக்க நேர்மறை சிந்தனை. அது நம்மை உறங்கவிடாது இயங்கிக் கொண்டே  இருக்க வைக்கும்.  அடுத்தது, எனக்கு எதையும் ஏற்றுக்கொள்ளும் அரவணைத்துக் கொள்ளும் விட்டுக் கொடுக்கும் இயல்புகளைக் கற்றுத்தந்த என்னுடைய கூட்டுக் குடும்பம் இந்த இரண்டும் தான் என்னுடைய வெற்றிக்கான காரணங்கள் என்று நான் கருதுகிறேன். பெண்களைப் பொருத்தவரை பிறந்த இடம்,  புகுந்த இடம் இரண்டிலும் நல்ல இயல்போடு நாம் இருக்கும் வரை நமக்கான ஆதரவும் தொடர்ந்து இருக்கும். இது என்னுடைய நம்பிக்கை. அதனால்தான் என்னால் வாழ்வில் வெற்றி பெற முடிந்தது.

படம்:  சாய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com