ராணுவத்தில் சேர்ந்த  இந்திய  அழகி ..!

இந்தியாவில்  அழகிப் போட்டிகளுக்கு குறைவில்லை.  நகர அளவில், மாநில அளவில், தேசிய  அளவில் பல அழகிப் போட்டிகள் ஆண்டுதோறும்  நடந்து வருகின்றன. அழகிகளைத் தேர்ந்தெடுக்கின்றன.
ராணுவத்தில் சேர்ந்த  இந்திய  அழகி ..!

இந்தியாவில்  அழகிப் போட்டிகளுக்கு குறைவில்லை.  நகர அளவில், மாநில அளவில், தேசிய  அளவில் பல அழகிப் போட்டிகள் ஆண்டுதோறும்  நடந்து வருகின்றன. அழகிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. கிரீடங்கள், பட்டங்கள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. இப்படி அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் அழகிகள், திரைப்படம், சின்னத்திரையில், விளம்பரப்படங்களில், அல்லது மாடல் உலகில் பெரும்பாலும் கால் பதிக்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள்.  சிலர்  சில காலம்  பொழுதுபோக்கு துறைகளில்  மின்னி பிறகு மறைந்துவிடுகிறார்கள்.  

இந்த வழக்கமான பாதையிலிருந்து விலகி புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பவர் கரிமா யாதவ்.  அழகையும்,  வீரத்தையும்  சரிவிகித கலவையில் சேர்த்திருப்பவர்.  ஆம்..! அழகியாக  தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாட்டிற்காக  தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். இந்திய ராணுவத்தில் போராளியாக  கரிமா  தன்னை  இணைத்துக் கொண்டிருக்கிறார்.   "அழகு என்பது தோற்றப் பொலிவிலும் இருக்கிறது. சிந்தித்து எடுக்கும் தீர்மானத்திலும் இருக்கிறது' என்று  கரிமா  நிரூபித்திருக்கிறார்.   விளைவு..?  கரிமா பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

""அம்மா  சிங்கிள்  மதர்.  தாயின்  அரவணைப்பில் மட்டும்  வளர்ந்த நான் சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்தேன்.  அம்மா என்னை வளர்க்க  மிகவும் பாடுபட்டார்.  சோதனைகளை  அம்மா  மன  உறுதியுடன்  நேரிட்டார்.

அம்மாவின் உழைப்பிற்கு  கெளரவம் சேர்க்க வேண்டும்.  அவரைப் பெருமை படுத்த வேண்டும்  என்பது எனது லட்சியமாக இருந்தது. பிறகு பொருளாதாரம் படிக்க டில்லி வந்தேன்.   பட்டப் படிப்பு முடிந்ததும் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு   ஐ.ஏ.எஸ்  தேர்வுக்காக என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினாலும் வெற்றி பெற முடியவில்லை. அந்த சமயத்தில்தான் "இந்தியாவின் அழகிய முகம்  2017' போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாக வந்தேன். இந்தப் போட்டி 2017 நவம்பரில் நடந்தது. அடுத்த ஆண்டு இறுதிப் போட்டி இத்தாலியில் நடக்கும் என்று சொல்லப்பட்டது.    

இத்தாலியில் நடக்க இருக்கும் இறுதி அழகிப் போட்டியில் கலந்து கொள்வதா.. நாட்டின் பாதுகாப்பு படை ஒன்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதுவதா... என்று எனக்குள் தர்க்கம் நடந்தது. கடைசியில் நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று முடிவு செய்தேன். தேர்வினைச் சிறப்பாக எழுதி முதல் முயற்சியில் வெற்றி பெற்றேன். 

சென்னை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் பயிற்சிகள் கடினமாக இருந்தன. சென்னை வெப்பநிலை  எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் அழகியாக இருந்தாலும், உடல்  திடமாக இருக்கவில்லை. அதனால் கடினமான  உடல்   பயிற்சிகளுக்கு  மேனி ஒத்துழைக்கவில்லை.  பயிற்சியைப் பாதியில் விட  மனமில்லை. உடலை வருத்தி சவாலாக அமைந்த பயிற்சிகளில் தொடர்ந்தேன். வெற்றியும் பெற்றேன். எனது உடலும் கடினமான பயிற்சிகளுக்குத் தயாராகிவிட்டது. ராணுவத்தில் சேர விளையாட்டில் சிறப்பாக இருக்க வேண்டும். உடல் திடமாக இருக்க வேண்டும்  என்று சொல்வதெல்லாம் பேச்சுக்குத்தான். ராணுவ  நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று  தேர்வு ஆகிவிட்டால் நமது சாதாரண  உடலையும் பயிற்சிகளால் அசாதாரணமாக்கிவிடலாம். நமது பலவீனங்களை  அடையாளம் கண்டு பயிற்சி மூலம் பலமாக மாற்றிக் கொள்ளலாம்.  அதற்கு நானே உதாரணம்'' என்கிறார் தனது அம்மாவுக்கும். இதர அழகிகளுக்கும் பெருமை சேர்த்திருக்கும் லேஃப்டினண்ட்  கரிமா யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com