Enable Javscript for better performance
நடிகையாக விரும்பி தேசிய விருது பெற்ற இயக்குநர்!- Dinamani

சுடச்சுட

    

    நடிகையாக விரும்பி தேசிய விருது பெற்ற இயக்குநர்!

    Published on : 11th April 2019 09:44 AM  |   அ+அ அ-   |    |  

    mm1

    நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் அசாம் மாநிலம் சாய் கோனிலிருந்து மும்பை சென்ற ரிமா தாஸுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. யாருமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. இதற்காக மனமுடைந்து போகவில்லை. உலக சினிமாக்களை பார்க்கத் தொடங்கினார். இது இவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எந்தவித முன் அனுபவமும் இன்றி துணிந்துதானே திரைப்படமொன்றை தயாரித்து, இயக்கி தேசிய விருது பெற்றது இவரது சாதனையாகும். 2018- ஆம் ஆண்டு இவரது "வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்' என்ற அசாமிய மொழிப்படம். ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் என்பதோடு, ரிமாதாஸை சர்வதேச அளவில் பிரபலமடையவும் செய்தது. நல்ல படங்களை இயக்குவதில் ஆண்- பெண் வேறுபாடோ, மொழியோ தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபித்த ரிமா தாஸ், பட தயாரிப்பில் இறங்கி வெற்றிப் பெற்றது எப்படி என்பதை இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
     "2020- ஆம் ஆண்டுக்குள் திரைப்படங்களை இயக்கி வழங்குவதில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது இனி தவிர்க்க முடியாததாகும்'' என்று பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அதன் இயக்குநர் டெய்ட்டர் கோஸ்லிக் கூறியது உண்மையாகி வருகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் பிரபலமானவர்களுடைய திரைப்படங்களுடன் என்னுடைய படமும் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளித்தது. இந்தப் புகழை அடைய நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் பெண்கள் பிறரை நம்புகிறார்களோ, இல்லையோ தங்கள் மீது முழு நம்பிக்கை வைப்பது அவசியமென்று கருதுகிறேன்.

     பள்ளியிலும், கல்லூரியிலும் நான் படித்தபோது ஒரு சிறந்த நடிகையாக வேண்டுமென்று மும்பை வந்து முயற்சித்தது தோல்வியில் முடிந்தது. என்னுடைய மொழி உச்சரிப்பு, நடிப்பு பள்ளி அனுபவமின்மை போன்றவைகளால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக நான் சோர்ந்துவிடவில்லை. நிறைய உலக சினிமாக்களை பார்க்கத் தொடங்கினேன். இது எனக்குள் ஒரு தனி உலகத்தை உருவாக்கியதோடு, மற்றவர்களின் தலையீடு இல்லாமல் என் கிராமத்து மக்களையே கதாபாத்திரங்களாக வைத்து திரைக்கதை அமைக்கும் முடிவுக்கு வந்தேன்.
     என்னுடைய உறவுக்காரப் பெண் மல்லிகா தாஸ் ஆதரவோடு, டிஎஸ்எல்ஆர் காமிராவுடன் "மேன் வித் த பைனாகுலர்' என்ற முதல் படத்தை தயாரித்து இயக்கினேன். நான் எடுக்கும்முறை வழக்கமான பாணியிலிருந்து மாறியிருப்பது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் அதை பொருட்படுத்தவில்லை. அடுத்து கிராமத்துப் பெண் ஒருத்தியின் கனவை மையப்படுத்தி எடுத்த "வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்' மற்றும் "புல் புல் கேன் சிங்' ஆகிய படங்களை பார்த்த பின்னரே மக்களுக்கு என் மீது நம்பிக்கை பிறந்தது.
     நான் ஒரு பெண், நான் பிறந்து, வளர்ந்த இடத்தைச் சுற்றி நடந்தவைகளையே வைத்து திரைக்கதைகளை அமைத்தேன். இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேனே தவிர அதையே பெரும் பிரச்னையாக பெண்கள் முகத்தில் பிரதிபலிக்க விரும்பவில்லை. பிரச்னைகளை இயற்கையாக வெளிப்படுத்தியதை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
     திரைப்படங்களை இயக்குவதற்காக நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற முடியவில்லையே என்று நான் வருத்தப்பட்டதில்லை. இன்னமும் எனக்கு முறைப்படி பயிற்சி இல்லையென்றாலும், காட்சிகளை எப்படி சொல்வது என்பதை புரிந்து கொண்டேன். பல்வேறு துறைகள் பொறுப்புகளை நானே ஏற்றுக் கொண்டது சுதந்திரமாக செயல்பட உதவியது. "வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்' மற்றும் "புல்புல் கேன் சிங்' ஆகிய படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்ததைப் பார்த்தபோதுதான், ஒரு பெண் தானாகவே ஒரு படத்தை உருவாக்க முடியுமென்பதை திரையுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது தெரிந்தது. இனி பெரிய நிறுவனங்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறேன். அப்போது உண்மையான பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரலாம்.
     "வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்' சிறந்த வேற்றுமொழி பட வரிசையில் ஆஸ்கர் விருது பெறவில்லை என்றாலும், இன்னும் சிறப்பாக படத்தை தயாரித்திருக்கலாமே என நினைக்க வைத்தது. நம்முடைய படங்கள் உலக அளவில் வர்த்தகம் செய்ய இன்னும் அவகாசம் தேவை. உலக நாடுகளிலிருந்து அனைத்து பிரிவிலும் வந்த மொத்தம் 87 படங்களை 5 ஆயிரம் உறுப்பினர்கள் பார்த்து முடிவெடுக்க நேரம் போதாது. என்னுடைய படத்தை புரோமோட் செய்ய கொடுத்த இரண்டு மாத காலம் போதவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் இந்திய படங்களுக்கு ஆதரவளிக்க முன் வர வேண்டும்'' என்றார் ரிமா தாஸ்.
     -அ.குமார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp