சுடச்சுட

  
  im13

  தங்கராசுவுக்கு பிஞ்சையிலே  மிளகாய் பழம் கனிந்து கிடப்பதும், சோளக்கருது  விளைந்து  பிஞ்சை நிறைய வந்து குவியும் குருவிகளிடம் படாதபாடு படுவதையும்,  இன்னும் வேலைக்கு  ஆட்கள்  கிடைக்காமல் பயிர்கள்  விளைந்து அப்படி அப்படியே  கிடப்பதும்  வானத்தில் அவ்வப்போது கருமேகங்கள் கூடினால்  இவனுக்கு வயிற்றில்  பயமும், பதட்டமும்  கலைந்த குளவிக்கூடாய்  அலைந்து கொண்டிருப்பதையும்  இவர்களிடம் எப்படி சொல்வது..

  ஒரு மழை பெய்தால்  போதும். ஆயிரக் கணக்கில் லாபம் தரும் எல்லாப் பொருளும் நாசமாகிவிடும்.  செடியில்  பழுத்து மினுங்கும் மிளகாய்  பழங்கள் எல்லாம் பெய்யும் மழைக்கு  அப்படியே  காம்பு கழண்டு தன்னுள்ளிருக்கும் விதைகளை  உதிர்த்து வெறும் பழமாக  நிலங்களில் அழுகல்  வாசனையை வாங்கிக் கொண்டு கிடக்கும்.  சோளக்கருது  தட்டையிலேயே  மறுமுளைப்பாக முளைக்க  ஆரம்பித்துவிடும்.  நிலக்கடலையும்  அப்படித்தான் மண்ணுக்குள்ளேயே  இன்னொரு  கடலையாக  முளைத்துவிடும். 

  ""என்ன மாப்பிள்ள நானு  அடுப்பு வேலயப் போட்டுட்டு உங்க முன்னால ஒருமணி நேரமா  நிக்கிறேன்.  நீங்க எந்த பதிலும்  சொல்லாம  இருந்தா  என்ன அர்த்தம்?''

  ""இல்ல அத்தெ,  என்னப் பொறுத்துக்கோங்க ஒரு நிமிசம் கூட  இதுக்கு மேல இங்க என்னால இருக்க முடியாது.  காட்டு வேலயெல்லாம்  அப்படி, அப்படியே  கிடக்கும்.''

  ""அதுக்குத்தான் உங்க அம்மாவும்,  தம்பியும் இருக்காங்கள்ல'' என்று அபிராமி சொல்ல, வெறுத்துப்போனான் தங்கராசு.

  இனி இவர்களிடம்  பேசி  பிரயோசனமில்லை என்று  நினைத்தவன்  உடனே புறப்பட்டுவிட்டான்.

  அபிராமி  பதறிபோனாள்.  ""மாப்பிள்ள, மாப்பிள்ள நான்  சொல்ல,   சொல்லப் புறப்பட்டு போனீங்கன்னா  எனக்கு என்ன மதிப்பு  இருக்கு நீங்க இருந்துதான் போகணும்''.

  ""இல்லத்த  என்ன கட்டாயப்படுத்தாதீக. நானு போயே  ஆகணும்''  என்றவன்  வாசற்படி வந்துவிட்டான்.

  அபிராமிக்கு  வேறு வழி தெரியவில்லை, ""சரி  மாப்பிள்ள  போறதுன்னு  முடிவு பண்ணிட்டீங்க. இனி உங்களைத் தடுக்க முடியாது.  காலை சாப்பாட்டை சாப்பிட்டாவது போங்க'' என்றாள்.  அவள் குரல்  கெஞ்சியது.

  இனியும் மறுத்தால் நன்றாக  இருக்காது என்று வேண்டா வெறுப்பாய் சாப்பிட உட்கார்ந்தான். அவனுக்கு சாப்பாடு வைக்க கௌசிகா  வரவில்லை. கலங்கிய விழிகளோடு அவள் அறைக்குள் உட்கார்ந்திருக்க, அபிராமி தான் பரிமாறினாள்.

  இடியாப்பம், பூரி, வடை- குருமா, தேங்காய்ப் பால் என்று  வித, விதமாய் பலகாரங்களை எடுத்து வைக்க தங்கராசு  திங்க முடியாமல் திண்டாடினான்.

  அவனுக்கு இந்தமாதிரி  பலகாரங்கள் எல்லாம் சாப்பிட்டு  பழக்கமில்லை. "கரும்பு தின்பவனுக்கு கரும்பு ருசி,  வேம்பு  தின்கிறவனுக்கு  வேம்பு ருசி' என்று அவனுக்கு  இவைகளைத் திங்கவும் பிடிக்கவில்லை.  இந்நேரத்துக்கு  வட்டில் நிறைய சோளக்கஞ்சியை வைத்து நிறைய மோர்விட்டு கரைத்து குடித்தால்தான்  அவனுக்குப் பிடிக்கும்.  வயிறு நிறையவும்  செய்யும்.  ஆனால், மாமியார்  வீட்டு பலகாரங்கள் எல்லாம் ருசிக்கவுமில்லை.  அவன்  ருசித்து சாப்பிடவுமில்லை.  ஏதோ பேருக்கு  சாப்பிட்டேன் என்று உட்கார்ந்த மாயத்தில் எழுந்து கையை கழுவி விட்டான்.


  அபிராமிக்கு  இதில்  வருத்தமென்றால்  சொல்ல முடியாது.  மாப்பிள்ளைக்காக அஞ்சு  மணிக்கு  அலாரம் வைத்து எழுந்து வித, விதமாய்   பலகாரம் செய்ய, அவரோ  எதையுமே  சாப்பிடவில்லை.  "வேஸ்ட், எல்லாம் வேஸ்ட்'  என்று மனதிற்குள்  குமைந்து கொண்டிருந்தாள்.

  ""சரி அத்தெ,  நான் வாரேன்'' என்று தங்கராசு மீண்டும் வாசலுக்கு நடக்க..

  அபிராமிக்கு அவனை நாலு அறை, அறைய வேண்டும் போலிருந்தது.

  கட்டின பொண்டாட்டிக்கிட்ட  ஒரு வார்த்த சொல்லிட்டுப் போகணுமின்னு தோணுதா இந்த மனுசனுக்கு  இங்கேயே  இப்படி நடந்துக்கிறார்.  ஊரில்  என் மகளை  எப்படி வைத்திருப்பார் என்று நினைத்தவளுக்கு  மனது பொங்கியது.

  ""என்ன மாப்பிள்ள  இது,  நீங்க  ஊருக்குப் போறேன்னு சொன்னதிலிருந்து ஒருவாய் காப்பிக் கூட  குடிக்காம  கௌசி  உட்கார்ந்திருக்கா அவகிட்ட  ஒரு வார்த்தை  சொல்லிட்டு போக மாட்டீங்களா?''  என்றாள் கொஞ்சம் கோபமாக..

  தங்கராசுவிற்கும்,  தன் பொண்டாட்டியைப் பார்த்துவிட்டுப் போகத்தான் ஆசை.  ஆனால்,  அவளைப் பார்த்தால்  அவள் அழுகை  நம்மைக் கட்டிப் போட்டுவிடும் என்று நினைத்தான்.  அதனால் தான் அவளைப் பார்க்காமல் புறப்பட்டான்.  ஆனால், மாமியாரின் கோபத்தையும் வாங்கிக் கொண்டு புறப்பட  அவன் தயாராக இல்லை.

  மெல்ல கௌசிகாவின்  அறைக்குள்  நுழைந்தான்.  வாடிய மாலையாக  கட்டிலில்  சுருண்டு கிடந்தாள் கௌசி.  அவள் உடம்பு குலுங்கிக் கொண்டிருக்க  தொண்டையிலிருந்து மெல்லிய  தேம்பும்  சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

  அவளைப் பார்த்த உடனே  தங்கராசுவிற்கு  நெஞ்சே  வெடித்துவிடும் போலிருந்தது.  அவளின் துணையும்,  அழகும் அவனுக்கு தேவையாயிருந்தது. இப்படியே  தன்னோடு வந்துவிட்டால்... அவனுக்குள்  சிறிய நம்பிக்கை பிறக்க..
  ""கௌசி நான் ஊருக்குப் போயிட்டு வாரேன்'' என்றான்.

  ""கௌசிகாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.  சரி இதுவும் ஒருவகைக்கு நல்லதுதான் பிரிவின் சுமையை அறியாமலே தான் போய்விடுவோம்  என்று நினைத்தவனுக்கு சொல்லிவிட்டு போவது சற்று ஆறுதலாக இருந்தது. 

  ""சரி கௌசி நீ  தூக்கத்திலிருக்க,  நானு போயிட்டு வாரேன்'' என்று  அவன்  சொன்னதுதான் தாமதம்.  

  அதற்குமேல் அவள் அவனை பேசவிடவில்லை. 

  இவ்வளவு நேரமும் உடம்பு குலுங்க  கட்டிலில்  மௌனமாய் படுத்திருந்தவள் குபீரென்று  எழுந்து தங்கராசுவின்  கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

  ""நீங்கள்  ஊருக்குப் போகக் கூடாது.  போகக்கூடாது''  என்று சொல்லிக் கொண்டே  அவன் கன்னத்தில மாறி, மாறி  முத்தமிட்டாள்.  அவன் தோளில் மாலையாய் சரிந்தாள். அவன் விரல்களோடு அவள் பின்னிய  விரல்களின் பிடி இறுகியது.

  தங்கராசு  அவளின்  காதல் பிடியில் சிக்கி திணறி, திண்டாடித்தான் போனான். எப்படி இவளை சமாதானப்படுத்தப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. சற்று முன்பு சீக்கிரம்  தன் ஊர் போய் சேர வேண்டுமென்று  நினைத்தவனின் நினைப்பெல்லாம்  கௌசிகாவின்  அன்புப்பிடியில்  சிக்கி காற்றுப்பட்டால் கரைந்து விடும்  கற்பூரம் போல் கரைய ஆரம்பித்தது.

  ஆனால், அம்மாவின்  நினைப்பும்,  காட்டில்  கிடக்கும்  வேலைகளும்  அவனை  சாட்டை  நுனிக்கொண்டு வீசியது.

  தங்கராசு, கௌசிகாவின் முகத்தை தன் கைகளில்  ஏந்தி அவள்  கண்ணீரைத் துடைத்தான். 

  ""இதோப் பார்  கௌசி.  இந்தமாதிரி அழுது,  அடம்பிடித்து  என்னை  ஊருக்குப் போகவிடாமல்  உன்னுடனே  வைத்துக் கொள்ளலாம்  என்று நினைக்காதே. நான் உன்னை மட்டுமல்ல,  உன் அன்பையும், தாண்டி போய்விடுவேன்.  அந்த நிலைக்கு என்னை ஆளாக்காதே.  எனக்கும்  உன்னைவிட்டு போவதற்கு கொஞ்சம்  கூட  மனசே இல்ல.  இதை உன் மீது  சத்தியமாக  சொல்கிறேன். ஆனாலும்  நான்  போய்த்தான்  ஆக வேண்டும்.  இப்போதும்  கூட  ஒன்னும் கெட்டுப் போகவில்லை.  எங்கள் ஊரிலிருக்கும் இரண்டொரு அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்வாய் என்று நினைத்தால்  நீ என்னுடன் புறப்பட்டுவா  நாம் நேற்று சேர்ந்து வந்தது போல்,  இன்று சேர்ந்தே   போவோம்.  என்ன  சொல்லுத?''  என்று  அவன் கேட்க  கௌசிகா பொருமினாள்.

  ""எனக்கு நீங்களும் முக்கியம்,  எனக்கான வசதியும்  முக்கியம்''

  "" அப்படின்னா என்னைப் போக விடு, போன உடனே  உனக்கு  வேண்டிய  வசதிகள  செஞ்சி முடிச்சிட்டு  உன்ன வந்து கூட்டிட்டு போறேன்''.

  ""இங்க இப்படித்தான் சொல்வீங்க,  ஆனா  அங்கே போனதுமே  என்னை மறந்திருவீங்க.  உங்களுக்கு காட்டு வேலதான் முக்கியம்.''

  "" நீ சொல்றத நானு ஒத்துக்கிறேன், எனக்கு காட்டு வேலதேன் முக்கியம்.  ஆனா அதேசமயம்  கட்டின  பொண்டாட்டிக்கு நானு செய்ய வேண்டிய  கடமையும் முக்கியம்.  உனக்கான  வேலைகளை  முடிச்சிட்டு  நிச்சயம்  நான் வந்து உன்னக் கூட்டிட்டுப் போறேன்'' என்றான்.

  ""அப்படின்னா,  இன்னைக்கு ஒரு நாள் மட்டும்  இருங்க'' என்ற கௌசிகா அவன் தோளில் கைப்போட்டவாறு கொஞ்சினாள்.

  ""ஒரு நிமிஷம்  கூட என்னால் இருக்க முடியாது'' என்ற தங்கராசு அவளை விலக்கிவிட்டு  விறு, விறுவென்று  பஸ் ஸ்டாண்ட் நோக்கி  நடக்கத் தொடங்கினான்..

  - தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai