சுடச்சுட

  
  im26

   

  எம். ஜி. ஆருக்கு  பாடல்கள் மூலம் நிலையான  இடம் பிடித்து தந்தவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். "திருடாதே.. பாப்பா திருடாதே..", "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..' போன்ற பாடல்களை   உதாரணமாகச்  சொல்லலாம்..

  ஐந்து ஆண்டுகளில் சுமார் 250 திரைப்படப் பாடல்களை எழுதி புகழின் உச்சத்திற்குச் சென்று திடீரென்று  தனது 29 வயதில் உதிர்ந்து போனவர் பட்டுக்கோட்டையார்.

  பட்டுக்கோட்டையார்  என்று அழைக்கப்பட்டாலும், அவரது சொந்த  ஊர் பட்டுக்கோட்டையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்  "சங்கம் படைத்தான் காடு' (பேச்சு வழக்கில் செங்கப்படுத்தான்காடு) ஐந்து   ஏக்கர் தென்னை, மா, எலுமிச்சை வளர்ந்து நிற்கும்  தோப்பில்,  வசித்து  வந்த பட்டுக்கோட்டையாரின் துணைவியார் கெளரவம்மாள் அண்மையில் காலமானார்.  திருமணமாகி  இரண்டே இரண்டு ஆண்டுகள்  கவிஞருடன் சென்னையில்  வாழ்க்கை நடத்தினார். கவிஞரின்   மறைவுக்குப்  பின் கெளரவம்மாள் ஆறு  மாதக் குழந்தையான   மகன் குமாரவேலுவுடன் செங்கப்படுத்தான்காடு வந்து  விட்டார்.  

  பட்டுக்கோட்டையார்  இல்லத்தைப் பார்க்க சென்றிருந்தபோது  கவிஞரின் துணைவியாருடன்  சில மணி நேரம் பேசும் வாய்ப்பு  கிடைத்தது.  அப்போது அவர்,  பகிர்ந்து  கொண்டவை: 

  கவிஞர்  பாட்டு எழுத சான்ஸ்   கேட்டு  சேலம்  மாடர்ன் தியேட்டர்ஸில்  காத்து கிடந்த  காலம் .  அப்போது இசை அமைப்பாளர்  எம். எஸ். விஸ்வநாதன் எதிர்பார்த்த  மாதிரியான பாடல் வரிகள்  கிடைக்காததால்,  இரண்டு நாள் ஆகியும், பாடல் உருவாகவில்லை.  அந்த சமயத்தில் மேலாளர், "இந்தப் பல்லவியைப் பாருங்க... பிடித்திருந்தா பயன்படுத்திக்கோங்க... பிடிக்கலைன்னா  தூக்கி எரிஞ்சிடுங்க..' என்று  சொல்ல, "சரி.. கொடுங்க... பார்க்கலாம்'  என்று அந்தப் பல்லவியை வாசித்த  விஸ்வநாதன்  அதிர்ந்து போய்விட்டார். 

  "எங்கே அந்தப் பாடலாசிரியர்... உடனே  கூட்டிவாங்க'  என்று பரபரத்தார்.  

  அந்தப் பல்லவி இதுதான்:

  "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்..

  குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம்..

  தட்டுக்கெட்ட  மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்..

  சட்டப்படி பார்க்கப் போனா  எட்டடிதான் சொந்தம்..' 

  இந்தப் பாட்டு "பாசவலை' படத்தில் இடம் பெற்று கவிஞர் சினிமாவில் அறிமுகமானார். 

  "ஏன்யா .. எல்லாரும்  ஆறடின்னுதான்  எழுதுவாங்க... நீர் ஏன் எட்டடின்னு எழுதினீர்.  அது என்ன  புதுக் கணக்கு..' என்று விஸ்வநாதன் கேட்டாராம். 

  "என்னை  மாதிரி ஆளுகளுக்கு எட்டடி வேணுமில்லே..' என்று கவிஞர் பதில் சொன்னாராம்.   ஆமா... கவிஞர்  நல்ல  உயரம்..   

  பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்கும் ஆத்திக்கோட்டைதான் என் சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கவிஞரோடு எனது வீட்டிற்கு வந்திருந்தார். கவிஞரோ, "அண்ணனுக்குப் பெண்  பார்க்கப் போகிறோம்' என்ற நினைப்பில் வந்திருந்தாராம்.  

  என்னைப் பெண் பார்த்துவிட்டு அவுங்க கிளம்பிப் போனாங்க, ஊர் திரும்பும்போது, வழியில் " பொண்ணு எப்படி இருக்கு?' என்று  கவிஞரது அண்ணன் கேட்க, "லட்சணமா இருக்கு' என்று கவிஞர் சொல்ல, "அந்தப் பொண்ணு உனக்குதான் பாத்திருக்கு' என்று அண்ணன் சொல்ல.. 

  கவிஞருக்கு  ஆச்சரியம்.. ஆனந்தம்..  அந்த சந்தோஷத்தில் அவருக்குத் தோன்றியதுதான்  "ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ' என்ற பாடல். 

  கெளரவம்மாள் நாணத்துடன்  சொன்னது நினைவுக்கு வருகிறது. 

  "பட்டுக்கோட்டையாருடன் எனது திருமணம் சென்னையில் நடந்தது. திருமணத்திற்கு தலைமை  தாங்கியவர்  கவிஞரின் குருவான,  பாரதிதாசன். மேடையில், "இன்னாரின் புதல்வி கெளரவம்மாளை திருமணம் செய்து கொள்ள சம்மதம்' என்று கவிஞரை திருமணத்திற்கு வந்தவர்கள் கேட்குமாறு சொல்லச் சொன்னார். கவிஞரும்  சொன்னார். பாரதிதாசன் என்னிடமும் , "இன்னாரின் மகன் கல்யாணசுந்தரத்தை திருமணம் செய்து   கொள்ள சம்மதம்'  என்று  சொல்லச் சொன்னார்.   "மேடையில் கணவரின் பெயரை எப்படி  உறக்கச் சொல்வது'  என்று வெட்கப்பட்டு நான்  வாய் திறக்கவில்லை. 

  "வாய் திறந்து சொன்னாத்தான் திருமணம்' என்று பாரதிதாசன் திட்டவட்டமாகச் சொல்ல...வேறுவழியின்றி  நானும் அவர் சொன்னதைத் திருப்பி  சொல்லிவைத்தேன்.

  கல்யாணமான புதுசிலே  பட்டுக்கோட்டையார்  ரொம்ப  பிசி. பாட்டெழுத கவிஞரை அழைக்க  காலையிலேயே கார் வந்துவிடும்.  காலையில்  கிளம்பிப் போனால்  இரவு  ரொம்பத் தாமதமாக வருவார்.  சில சந்தர்ப்பங்களில் நான் அசந்து தூங்கி விடுவேன்.  கவிஞர்  கோபமாக  ஏதாவது  திட்டுவார்.  

  அவர் அண்ணன், "அது சின்னப் பொண்ணுடா..  திட்டாதே.. அது எத்தனை நேரம் உனக்காக கண் விழிச்சிருக்கும்' என்பார். அதுக்கு..."சின்னப் பொண்ணாம் சின்னப் பொண்ணு... சின்னப் பொண்ணை ஏன் எனக்கு கட்டி வச்சீங்க... கொட்டங்கச்சியைக் கையிலே   கொடுங்க ... விளையாடிகிட்டு இருக்கட்டும்'  என்று கவிஞர்  கோபத்துடன் அண்ணனிடம் சொன்னார். அன்றிலிருந்து என்னை அவர்  "சின்னப் பொண்ணு'ன்னுதான் அழைப்பார்.

  “தம்பிக்கு கல்யாணம் செய்து  வைத்த பிறகுதான்,  கவிஞரின் அண்ணன் திருமணம் செய்து கொண்டார்.  அவர் மனைவிக்கு  வளைகாப்பு வைபவம் வந்தது.  

  அந்த சமயம் "கல்யாண பரிசு' படத்துக்கு  வளைகாப்பு பத்தி ஒரு பாடல் எழுதணும்...  "வளைகாப்பு பத்தி  ஏதாச்சும்  எழுதிவை' என்று கவிஞர்   என்னிடம் சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். 

  "சொன்ன மாதிரி செய்யலன்னா கோபப்படுவார்' என்ற பயத்தில், "அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு'ன்னு   ரெண்டு வரி எழுதி வச்சேன்.  அதைப் பார்த்ததும்  கவிஞருக்கு பரம  சந்தோசம்.

  "பரவாயில்லையே... நல்லா எழுதி இருக்கியே'  என்றவர் அதையே பல்லவியாக வைத்து, "அக்காளுக்கு வளைகாப்பு.. அத்தான் மொகத்துல புன்சிரிப்பு..' என்று மாற்றி எழுதினார். அந்தப் பாடலுக்குக் கிடைத்த ஊதியத்தையும் என்னிடமே தந்துவிட்டார்.

  தீபாவளி நாளில்  ரேடியோவிலும்,  இப்போது டிவி சானல்களிலும் தவறாது இடம் பெறும் பாடல் கவிஞர் எழுதிய, "உன்னைக் கண்டு நான் ஆட,  என்னைக் கண்டு நீ  ஆட..  உல்லாசம்  பொங்கும் இந்தத் தீபாவளி'  எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.  அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அவர் நினைவில் கண்கள்  குளமாகும்.  தீபாவளி பண்டிகையின் போது  அவருடன்  இருந்த இரண்டு  தீபாவளி நாட்கள்  நினைவுக்கு வரும்... மூன்றாவது  தீபாவளிக்கு அவரில்லையே..   

  கவிஞர்  உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது எம்.ஜி.ஆர்.  செலவுகளை ஏற்றுக் கொண்டார்.  சிகிச்சை பலனின்றி  கவிஞர் காலமானதும் ஆறுமாத  மகனுடன் செங்கப்படுத்தான்காடு வந்துவிட்டேன். மகனை வளர்க்க  யாரிடத்தும் பண உதவி கேட்கவில்லை. கவிஞரின்  வயல், தோப்பில் வரும் சொற்ப வருமானம் வைத்து மகனைப் படிக்க வைத்தேன். மகன் முதுகலைப் பட்டம்  தேர்வு பெற்றதும்... யாரோ  எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்ல அவர்தான்  அரசாங்க வேலை போட்டுக் கொடுத்தார். பின்னாளில்  கவிஞரின் பாடல்களை நூல்களை அரசுடைமையாக்கி  கலைஞர் கருணாநிதி பத்து லட்சம் அளித்தார்'' என்று, கெளரவம்மாள் சொன்னது நேற்று சொன்னதுபோல   இருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai