முதல் அடியை தைரியமாக எடுத்து வையுங்கள்!- கேன்டிடா லூயிஸ்

பெங்களூரை சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) பெங்களூரிலிருந்து சிட்னி வரை தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் 28 ஆயிரம் கி.மீ. தூர பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார்
முதல் அடியை தைரியமாக எடுத்து வையுங்கள்!- கேன்டிடா லூயிஸ்

பெங்களூரை சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) பெங்களூரிலிருந்து சிட்னி வரை தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் 28 ஆயிரம் கி.மீ. தூர பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார். ஏற்கெனவே இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயணத்தை துவங்கியது குறித்த தகவல் மகளிர்மணியில் வெளியாகியுள்ளது.
இப்போது தன் கனவு பயணத்தை முடித்து பெங்களூரு திரும்பியுள்ளார்.
இது அவரது முதல் சாதனையல்ல. ஹூப்ளியை சேர்ந்த கேன்டிடா, மூன்று ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் தான் பார்த்து வந்த நிதி நிறுவன வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக இந்தியா முழுவதும் சுற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் 2015-16 -ஆம் ஆண்டுகளில் 22 மாநிலங்களில் சுமார் 57 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்துள்ளார். 
அப்போது முதல் முழுநேர மோட்டார் சைக்கிள் பயண டிசைனர் மற்றும் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார்.
இதுவரை பைக்கிங் குருப் பயணங்களாக 34 முறை இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளிலேயே 5 கண்டங்களில் 14 நாடுகளில் பயணம் செய்துள்ளார். கேடலிஸ்ட் டிராவலர் 2017 சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேன்டிடா, "டூ குட் ஆஸ் யூ கோ' என்ற தனியார் நெட்வொர்க் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் டிராவலர் வாலண்டியர்ஸ் மூன்று பேருடன் இவரை கம்போடியா காடுகளுக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு லேப்டாப் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பயிற்சி அளிக்க வைத்தது.
அதன் பின்னரே பெங்களுரிலிருந்து சிட்னி வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் கேன்டிடாவுக்கு தோன்றியதாம். 
"பெண்களின் சக்தியை வெளிப்படுத்த அவர்களுக்கு கல்வி அளிக்கவும். பொருளாதார ரீதியில் பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுடைய உரிமைகளை உணர்த்தவும் பயணமே சிறந்தது என்று கருதினேன். ஏனெனில் பயணத்தின் மூலம் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கவும். கலாசாரம், கருத்துகளை அறியமுடியும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் டோமினர் என்ற பைக்கில் பயணத்தை துவக்கினேன், இந்த ஆண்டு ஜூன்மாதம் பத்து மாத பயணத்தை முடித்து பெங்களுரூக்கு திரும்பியுள்ளேன். இந்த பயணத்தை மேற்கொள்ள "சேஞ்ச் யுவர் வோர்ல்ட்' என்ற அமைப்பு பொருளுதவி செய்தது.

அலாஸ்காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அலிஸ்டர் பார்லாண்ட் (24) என்ற ஆஸ்திரேலியர் விபத்தில் மரணமடைந்தார். ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவரது நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தினேன். முதலில் திட்டமிட்டபடி பெங்களூரிலிருந்து கிளம்பி, அடுத்த இரு தினங்களிலேயே என் திட்டத்தை மாற்றி மனதுக்கு பிடித்த இடங்களில் சில நாட்கள் தங்கி பின்னர் பயணத்தை தொடர்ந்து இந்தியா திரும்பியுள்ளேன்.
என்னுடைய கனவு பயணத்தை தடங்கலின்றி முடித்தது மனதுக்கு நிறைவை கொடுத்துள்ளது. முதல் ஏழு மாதங்கள் இந்தியாவுக்குள்ளேயே பயணம் செய்தபோது, பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சூழ்நிலையை எப்படி கையாள்வது பயணத்தின்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி போன்றவற்றை உணர்த்த வாய்ப்பு கிடைத்தது. எதுவும் தெரியவில்லையே என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. முதல் அடியை தைரியமாக எடுத்து வையுங்கள். மற்றவை தானாகவே உங்களை பின் தொடர்ந்து வரும் என்று பெண்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்'' என்றார் கேன்டிடா லூயிஸ்
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com