வாள் சண்டை: ஒலிம்பிக்கில் சாதிப்பேன்!

ஃபென்சிங் எனப்படும் வாள் சண்டையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை பவானி தேவி.
வாள் சண்டை: ஒலிம்பிக்கில் சாதிப்பேன்!

ஃபென்சிங் எனப்படும் வாள் சண்டையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை பவானி தேவி.
 கடந்த 1458-ஆம் ஆண்டே வாள்சண்டை போட்டிக்கான வரலாறு தொடங்கி விடுகிறது. ஸ்பெயின் இந்த விளையாட்டை மேலும் பரவச் செய்தது. 1896 ஒலிம்பிக்கில் முதன்முதலில் இடம் பெற்ற விளையாட்டுகளில் ஒன்று வாள் சண்டையாகும். இதில் ஃபாயில், எப்பி, சாப்ரே என்ற மூன்று வகையான பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக புள்ளியைப் பெற வேண்டும் என்றால் எதிராளியின் மீது வாளைக் கொண்டு தொட வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும்.
 இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வாள்சண்டை விளையாட்டில் சிறந்து விளங்குபவை ஆகும்.
 இடுப்பு, கை, கழுத்து, தோள், கழுத்துக்கு கீழான பகுதிகளை தொடலாம். இரு வாள் சண்டை வீரர்கள் மோதும் போது, ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் வாளினால் தொட்டால், தாக்குதலை நடத்திய வீரருக்கு புள்ளி தரப்படுகிறது.
 வாள் சண்டை வீரர்கள் காயமடையாமல் இருக்க பாதுகாப்பு கவசம், கையுறைகள், முகமூடி, கால்சட்டை, போன்றவை அணிந்திருக்க வேண்டும்.
 பவானி தேவி அதிரடி வளர்ச்சி:
 சென்னையைச் சேர்ந்த பவானி தேவி கடந்த 1993-இல் பிறந்தவர். 2004-இல் தனது 11 வயதின்போது வாள் சண்டையைத் தேர்வு செய்து, தீவிர பயிற்சி பெறத் தொடங்கினார். துருக்கியில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற அவர், தாமதமாக சென்றதற்கு கருப்பு அட்டை காண்பிக்கப்பட்டார்.
 பெற்ற வெற்றிகள்:
 2009 -இல் மலேசியாவில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம், 2010-இல் பிலிப்பைன்ஸ் கேடட் போட்டி, தாய்லாந்து போட்டியில் வெண்கலம், 2012 -இல் காமன்வெல்த் போட்டி ஜெர்ஸியில் தங்கம், இத்தாலி டுஸ்கானி கோப்பையில் தங்கம், 2014 - இல் ஆசிய சாம்பியன் போட்டியில் தங்கம், 2017-இல் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் 2018-இல் சாப்ரே பிரிவில் உலகக் கோப்பை வெள்ளி வென்றிருந்தார்.
 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தீவிரம்:
 வரும் 2020-இல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. கடந்த 2016 -இல் ஒலிம்பிக்கை தவற விட்ட பவானி தேவி, 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
 உலகக் கோப்பையில் சாதனை:
 ருமேனிய தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் உலக ஃ பென்சிங் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். தனிநபர் சாப்ரே பிரிவில் ருமேனியாவின் பியானகா பாஸ்குவிடம் தோல்வியடைந்தாலும், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது பவானிக்கு.
 14-15 என்ற ஒரே புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டார். தற்போது, 2019 உலகக் கோப்பையில் தொடக்கத்தில் துனிசியா, கனடா நாட்டு வீராங்கனைகளை வென்றார். உலக தரவரிசையில் 67-ஆம் இடத்தில் இருந்து தற்போது 44-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார் பவானி.
 2020 ஒலிம்பிக் போட்டி தகுதி பெற முனைப்பு:
 அடுத்து வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளேன் எனத் தெரிவித்த பவானி மேலும் கூறியதாவது:
 "6-ஆம் வகுப்பு பயிலும் போதே எனக்கு ஃபென்சிங்கில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி பெற்றேன். தற்போது இத்தாலியில் பயிற்சி பெற்று வருகின்றேன். தமிழக அரசும் தேவையான நிதியுதவியை வழங்கி வருகிறது.
 உலக சாம்பியன் போட்டியோடு இந்த சீசன் முடிந்தது. வரும் செப்டம்பர் மாதம் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. இதற்காக புது தில்லியில் 15 நாள்கள் தீவிர பயிற்சி நடைபெறுகிறது. 2020 ஒலிம்பிக் போட்டிக்காக திறமையுடன், உடல் தகுதியையும் மேம்படுத்த பாடுபட்டு வருகிறேன்.
 நான் சர்வதேச அளவில் பெற்ற வெற்றிகள் அடிப்படையில் ஃபென்சிங் தொடர்பாக இந்தியாவில் விழிப்புணர்வு மெதுவாக ஏற்பட்டு வருகிறது. எனினும் விரைவில் இது மேலும் விரிவடையும் என நம்புகிறேன். ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் வரை விளையாட்டு உபகரணங்களுக்கு செலவாகிறது'' என்றார் பவானி.

- சுஜித்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com