Enable Javscript for better performance
இந்தியாவின் சூப்பர் அம்மா!- Dinamani

சுடச்சுட

  
  SUSHMA-SWARAJ

  "செவ்வாய் கிரகத்தில் இந்தியர் யாராவது சிக்கிக் கொண்டாலும் இந்தியாவின் உதவி அவரை வந்து சேரும்' என்று சுஷ்மா ஸ்வராஜ் ஒருமுறை டிவீட் செய்திருந்தார். அப்படி டிவீட் செய்ததுடன் நிற்காமல் "உதவி தேவை' என்று சுஷ்மா ஸ்வராஜிடம் வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டவும் செய்தார். 
  அதனால்தான் அமெரிக்காவின் பிரபல நாளிதழான "வாஷிங்டன் போஸ்ட்' சுஷ்மாவை "இந்தியாவின் சூப்பர் அம்மா' என்று அடைமொழி கொடுத்து பாராட்டியது. 
  சுஷ்மா ஸ்வராஜ் பல "முதல்களுக்கு' சொந்தக்காரர். இருபத்தைந்து வயதில் ஹரியானாவில் ஜனதா கட்சி சார்பில் அமைச்சராகி, பதினொரு தேர்தல்களைச் சந்தித்து.. டில்லி அரசின் முதல் பெண் முதல்வராகவும் சுஷ்மா முத்திரை பதித்தார். 
  வழக்கறிஞர். உணர்ச்சி கொப்பளிக்கப் பேசும் பேச்சாளர். ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1984-இல் பிஜேபியில் இணைந்தார். வெளி விவகாரத் துறை அமைச்சர் என்ற நிலையையும் தாண்டி "மனிதாபிமானத்துடன்' அவர் செயல்பட்டார். 
  ஈராக்கில் "ஐஎஸ்' தீவிரவாதிகள் நாற்பத்தாறு இந்திய செவிலியர்களை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்ற செய்தி இந்தியாவில் பேரிடியாக இறங்கியது. இந்த செவிலியர்களில் பெரும்பாலானவர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள வர்களில் பல இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். 
  அன்றைக்கு கேரளத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சாண்டி வெளி விவகார அமைச்சர் சுஷ்மாவிடம் செவிலியர்களை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். "ஐ எஸ்' தீவிரவாதிகளிடமிருந்து பணயக் கைதிகளை அதுவும் பெண்களை விடுவிப்பது சாதாரண விஷயமில்லை. சுஷ்மா துரிதமாக செயல்பட்டு செவிலியர்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்தார். 
  ஈரானில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக்கப்பட்ட 168 இந்தியர்களையும் சுஷ்மா தலையிட்டு இந்தியா கொண்டு வந்து சேர்த்தார். சவூதி அரேபியாவில் 2016-இல் வேலை இல்லாது போனதினால், உணவு வாங்க பணம் இல்லாமல் சுமார் பத்தாயிரம் இந்தியத் தொழிலாளிகள் பட்டினி கிடக்கிறார்கள் என்று தெரியவந்ததும் சுஷ்மா உடனடியாகத் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். 
  அதிநவீன வசதிகள் கொண்ட "எய்ம்ஸ்' மருத்துவமனை வேண்டும் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் கனவு. இன்றைக்கும் "எய்ம்ஸ்' மருத்துவமனை இல்லாத இந்திய மாநிலங்கள் அநேகம். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா வெறும் வாக்குறுதி அளித்து இழுத்தடிக்காமல், ஒன்றல்ல இரண்டல்ல... ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை பல மாநிலங்களில் உருவாக்கினார். 
  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை பொறுப்பையும் ஏற்றிருந்த சுஷ்மா திரைப்படத்துறைக்கு "தொழில்துறை (INDUSTRY) அந்தஸ்தை வழங்கியவர். இந்த அந்தஸ்து கிடைத்ததினால் மட்டுமே, வங்கிக் கடன் போன்ற சலுகைகள் திரைப்படத் துறையினருக்கு கிடைக்க ஆரம்பித்தன. இதர தொழில்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகளும் கிடைத்தன. இதர தொழில்களில் ஈடுபட்டிருந்த பெரிய வியாபார முதலாளிகளும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
  "இந்திய உளவாளி' என்று குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷன் ஜாதவின் வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியாவின் சார்பாக வாதிட்டவர் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே. வாதிக்க கட்டணமாக ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொள்வதாக முன்வந்திருந்தார். வழக்கு வெற்றிகரமாக இந்தியாவின் தரப்பில் முடிந்தாலும் அந்த "ஒரு ரூபாய்' கட்டணம் ஹரிஷ் சால்வேக்கு தரப்படவில்லை. 
  தான் இறப்பதற்கு முந்தைய நாளன்று ஹரிஷ் சுஷ்மாவிடம் நலம் விசாரித்திருக்கிறார். "உங்களுக்குத் தர வேண்டிய ஒரு ரூபாயைத் தர முடியாமல் போய்விட்டது. நாளை என்னை சந்தித்து அதை வாங்கிக் கொள்ளுங்கள்' என்றாராம். 
  ஆனால் அன்று இரவே சுஷ்மா இயங்குவதை நிறுத்திக் கொண்டார். ஹரிஷ் சால்வேக்கு அந்த "ஒரு ரூபாய்' விரைவில் இந்திய அரசிடமிருந்து கிடைத்துவிடும். ஆனால், அதை சுஷ்மாவிடமிருந்து பெறுவது போலாகுமா என்பதுதான் ஹரிஷின் மனக் குறை.
  ஹமீத் அன்சாரி, மும்பையைச் சேர்ந்த கணினி பொறியாளர். ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பெண்ணுடன் நட்பாகி.. அவரைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் சென்ற போது, கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையானதும் அன்சாரியிடம் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வரமுடியவில்லை. அன்சாரியின் தாயார் சுஷ்மாவிடம் முறையிட அவரது நீண்ட முயற்சிக்குப் பிறகு அன்சாரி இந்தியா வந்து சேர்ந்தார்.

  "இந்தியா வந்ததும் உடன் சுஷ்மாஜியை எனது அம்மாவுடன் சென்று சந்தித்தேன். என்னைக் கடிந்து கொள்வார் என்று பயந்து கொண்டிருந்தேன். அவரோ என்னைக் கட்டிப்பிடித்து "நடந்ததை மறந்து புதிதாக வாழ்க்கையைத் தொடங்கு' என்றார். எனக்கு அப்போது அவர் இன்னொரு தாயாகத் தெரிந்தார். அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை..' என்று மருகுகிறார் அன்சாரி. 
  கீதா. கேட்கும், பேசும் சக்தியில்லாதவர். ஏழு வயது சிறுமியாக இருக்கும்போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஓடும் "சம்ஜோத்தா' விரைவு வண்டியில் பெற்றோருடன் கீதா பயணித்திருக்கிறாள். பெற்றோர் வழியில் இறங்க... கீதா கடைசி நிறுத்தமான பாகிஸ்தானில் லாகூர் சென்றடைய... தனியே நிற்கும் கீதாவைக் கண்ட லாகூர் ரயில் போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். இது நடந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. 
  கீதாவும் பாகிஸ்தானில் வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள். கீதாவைக் குறித்து சுஷ்மாவுக்குத் தெரிய வந்ததும் 2015-இல், கீதாவை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். கீதாவின் பெற்றோரை கண்டு பிடிக்க ஆன மட்டும் முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை இயலவில்லை. "சரி.. கீதாவுக்கு 27 வயதாகிறது.. திருமணம் செய்து வைக்கலாம்.' என்று சுஷ்மா முயற்சித்தாலும் பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. 
  கீதா தற்சமயம் இந்தோரில் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கிறார். "கீதாவின் பெற்றோர் கிடைக்காவிட்டாலும் கீதாவை மீண்டும் பாகிஸ்தான் அனுப்ப மாட்டோம். கீதா இந்தியாவின் மகள். இந்திய அரசு கீதாவைக் கவனித்துக் கொள்ளும்' என்று உறுதி தந்த சுஷ்மா கீதாவின் பொறுப்பாளராக இருந்தார். அந்த பொறுப்பாளர் இப்போது இல்லை என்பதை அறிந்து கீதா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். 
  தன்வி சேத் தனது கணவர் அனஸ் சித்திக்கியுடன் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். "நீங்கள் இந்துப் பெண்... கணவரோ இஸ்லாமியர். அவரை இந்துவாகச் சொல்லுங்கள். அப்போதுதான் அவருக்கு பாஸ்போர்ட் தரமுடியும்' என்று சொல்ல.. விஷயம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. தன்வி டிவிட்டர் மூலம் சுஷ்மாவுக்கு தகவல் அனுப்ப... சுஷ்மா உடன் தலையிட்டு தன்வியின் கணவருக்கு பாஸ்போர்ட் வழங்கச் செய்தார். 
  பாகிஸ்தானிலிருந்து சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அநேகர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விசா கிடைக்காமல் சுஷ்மாவை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு விசா பெற்றிருக்கின்றனர். மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். 
  சுருக்கமாகச் சொன்னால் சுஷ்மா நாடு, மதம், அரசு சட்டதிட்டங்களையும் தாண்டி உதவி என்று வந்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்த உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரராக இருந்தார். இனி அநேகருக்கு அம்மாவாக நினைவில் வாழ்வார்.
  - பிஸ்மி பரிணாமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai