சுடச்சுட

  
  BRINDAVANAM

  "அம்மா'' என்ற மகனின் குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் சங்கரி.
   அவள் கண்கள் சிவந்து கண்ணீரின் ஈரம் மினுமினுப்பில் கலங்கியிருந்தன. தொட்டால் பொட்டென்று உடைந்து போய் விடுவாள் போலிருந்த தங்கராசுவிற்கு.
   அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன், "என்னம்மா இப்படி உக்காந்திருக்கே இந்நேரத்துக்கு நீ பிஞ்சைக்குப் போயிருப்பேன்னுல்ல நெனச்சேன். என்னம்மா, மேலுக்கு சேட்டமில்லையா (காய்ச்சலா)?'' என்று கேட்டுக் கொண்டே அவள் கைகளைப் பிடித்தான்.
   மகனின் பாசத்தில் தன் நெஞ்சு நனைத்து நின்றாள் சங்கரி. அவன் தோளில் தன் சுமையை இறக்கி வைத்துவிட்டு மகனின் தோள்மீது சாய்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனாலும், பாவம் எம்புள்ள நானே மலச்சிப் போயி நின்னா அவன் என்ன செய்வான் என்று எண்ணியவளாக,
   "அது ஒன்னுமில்ல இன்னைக்கு காலையில நம்ம வீட்டுக்கு உன் மாமா, அத்தையின்னு நாலுபேரு விருந்தாளிக வந்திருந்தாக அவுகள வழியனுப்பிட்டு திரும்பயல எப்படியோ ஏறுக்கு, மாறா கால வச்சிட்டேன் போலிருக்கு, அந்தமான இடுப்பு சுளுக்கிக்கிடுச்சி'' என்று சொல்லி முடிக்குமுன்பே,
   "அய்யய்யோ.. எங்கம்மா இடுப்பப் பாப்போம்'' என்று பரபரத்தான் தங்கராசு.
   "அதெல்லாம் ஒண்ணுமில்ல , ஆண்டத்தக்கா வந்து சுளுக்கெடுத்து துணிப்பத்து போட்டுவிட்டு இன்னைக்குப் பொழுது காட்டுக்குப் போயிராதனுட்டுப் போனா, இன்னைக்குப் பிஞ்சயில நடுவ வேற அதேன் உன் தங்கச்சி நாத்தங்கல்லுக்கும், பிஞ்சைக்குமா பரிதவிப்பாளே, நானு இப்படி புடிச்சுவச்ச புள்ளயாரு கணக்கா உக்காந்திருக்கமேன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டு இருக்கு. அது போவட்டும். நீ உரமெல்லாம் வாங்கிட்டு வந்துட்டயா? எம்புட்டுக்கு வாங்குனே'' என்று சங்கரி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
   "இரும்மா நானு பிஞ்சையில போயி நடுவ எம்புட்டுத் தூரம் ஓடி இருக்குன்னுப் பாத்துட்டு வாரேன்'' என்றவன், அவள், "தங்கராசு, தங்கராசு'' என்று கூப்பிடுவதையும் கேட்காமல் பிஞ்சைக்கு ஓடினான்.
   தன் புருஷன் டவுனிலிருந்து வந்ததையும், தன் அம்மாவிடம் பேசியதையெல்லாம் தன் அறையிலிருந்த வாறே கேட்டுக் கொண்டிருந்த கௌசிகா, அவன் தன்னை வந்துப் பார்க்காமல் அப்படியே பிஞ்சைக்குப் போனதை நினைத்துக் கொதித்தாள்.
   "இங்கே தாலி கட்டுனப் பொண்டாட்டி ஒருத்தி இருக்காளே, அவளப் போயிபாத்து சாப்பிட்டாளா, என்னன்னு கேட்டுட்டுப் போற எண்ணம் கூட அவருக்கு இல்லயே ஒரு அநாத மாதிரியில்ல ஒரு பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாம இங்க நானு அடஞ்சிக்கிடக்கேன். அதை ஒரு நிமிஷமாவது நினைத்துப் பாத்தாரா அவரு' என்று நினைத்தவள் இந்த மாதிரி மனுசனுக்கு அவரு, என்ன அவரு வேண்டிக்கிடக்கு அவுன்னு சொன்னாளே அந்த ஆளுக்குப் போதும் என்று தனக்குள்ளாகவே பொருமிக் கொண்டிருந்தாள் கௌசிகா.
   அப்போது, தன் அறைக்குள் நுழைந்த தங்கராசு திகைத்துப் போனான். எப்போதும் இவன் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் கௌசிகா சுவரைப் பார்த்தவாறு படுத்திருந்தாள். ஒரு வேளை உறங்கி விட்டாளோ என்று நினைத்தவனுக்கு மனசுக்குள் குறு, குறுவென்று குற்ற உணர்வாக இருந்தது.
   இன்று காலையிலிருந்து அவன் அவளைப் பார்க்கவே இல்லை என்ற நினைப்பு வர கௌசிகாவின் மீது இரக்கமாக இருந்தது. அதேசமயம் அவள் மீது கோபமாகவும் இருந்தது. கல்யாணமாகி ஆறுமாதமாகப் போகிறது. இது வரையில் இவள் இந்த அறையைவிட்டு வெளியே வரவுமில்லை. யாரிடமும் மனம்விட்டுப் பழகவுமில்லை. போறப்போக்கைப் பார்த்தால் இந்த அறைக்குள்ளேயே அவள் வாழ்க்கை முடிந்து விடுமோ? என்று பயந்தான்.
   கல்யாணமாகி வந்த புதுசில் அம்மாவும், கமலாவும் இவளிடம் எவ்வளவோ பழக முயன்றார்கள். அம்மாவாவது வயதானவள் விட்டுவிடலாம். ஆனால் கமலா கிட்டத் தட்ட இவள் வயசு தானே இவள் இந்த வீட்டுக்குப் புதுப்பெண்ணாய் வந்தபோது, "மதினி, மதினி'' என்று இவளையே சுற்றி, சுற்றி வந்தாளே. அவள் அப்படி கூப்பிடும்போது கௌசிகா முகத்தைச் சுளித்ததோடு.
   "இந்தா பாரு கமலம் நீ மதினின்னு கூப்பிடறதே விட்டுரு, இனிமே என்ன அண்ணின்னு கூப்பி, அப்படி கூப்பிட பிடிக்காட்டா பேசாம இரு'' என்றாள் இதைக் கேட்டதும் கமலம் முகம் வாடியது.
   "எங்க ஊருல அண்ணன் பொண்டாட்டிய மதினின்னுதேன் கூப்பிடுவாக'' என்று சொல்லி முடிக்கு முன்பே,
   "உங்க ஊருப் பழக்கத்த உன் கூடவே வச்சிக் கோ'' என்றாள் முகத்தில் அடித்தைப் போல.
   தங்கராசுவிற்கு, கௌசிகாவை நினைக்கையில் மலைப்பாயிருந்தது.
   ஏதோ கொஞ்ச நாள் அதுவும் பட்டணத்தில் வளர்ந்த பெண், அதுவும் புதுபொண்ணு அப்படி, இப்படிதான் இருப்பாள் போக, போக சரியாகிவிடும். பிறகு நாலு வேலையும் கற்றுக் கொள்வாள். அம்மாவிற்கும், தங்கைக்கும் வீட்டுவேலையில் உதவியாக இருப்பாள் என்றுதான் தங்கராசு நினைத்திருந்தான். ஆனால், அவளோ அந்த சிறிய வீட்டில் இவர்களுக்காக ஒதுக்கிய அறையிலிருந்து இன்று வரை வெளியே வரவே இல்லை. அந்த குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கவுமில்லை. இவனை மட்டுமே நாடினாள். தன் விருப்பு, வெறுப்பு கோபம், தாபங்களை இவனிடம் மட்டுமே காட்டினாள்.
   தன் அம்மாவிடமும், தங்கையிடமும் ஒரு நாளாவது ஆசையா பேச மாட்டாளா? என்று தவியாய் தவித்தான். ஆனால், அப்படியொரு நல்ல விஷயம் இவன் வீட்டில் நடக்கவே இல்லை. நாம் கல்யாணமுடிந்து அடுத்த வீட்டுக்கு வந்திருக்கிறோம். நமக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன என்று கௌசிகா உணரவே இல்லை. எப்போது இவள் திருந்துவாள் என்று தங்கராசு நினைக்காத நாளில்லை.
   இதோ இப்போது கூட டவுனில் அலைந்ததிலும், வீட்டிலும் சாப்பிடாதது அவனுக்கு வயிறு ஏகமாய் பசித்தது. ஆனால், கௌசிகா நினைப்போடுதான் வந்தான். அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது, டவுனிலிருந்து வீட்டுக்கு வந்தும் அவளைப் பார்க்காமல் போய்விட்டோமே என்று அது அவனுக்கு சங்கடமாயிருந்தது.
   சரி, பிஞ்சையில் நடுவ வேலை எப்படி நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்து, கௌசிகாவோடு ஒன்றாக உட் கார்ந்து சாப்பிடலாம் என்ற நினைப்போடுதான் போனான். ஆனால், இவன் போனபோது நடுவ வேலை முடிகிற தருவாயில் இருந்ததால், தம்பிக்கும், தங்கைக்கும் உதவியாக, கூட இறங்கி வேலை பார்க்க வேண்டியதாயிற்று. அதேசமயம், இரண்டு நாளைக்கு இந்த வேலை இழுத்து அடிக்கும் என்று நினைத்தவனுக்கு வேலை முடிந்ததில் ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அதனால், தம்பியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
   கௌசிகாவோடு சாப்பிடுவோம் என்று ஆசையோடு தன் அறைக்குள் நுழைந்தான். ஆனால், அவள் இவனை கண்டுக் கொள்ளாமல், சுவரை பார்த்தபடி படுத்திருந்ததோடு, கௌசிகா தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டு வரும் போதெல்லாம் கொண்டு வந்திருந்த அலங்காரப் பொருள்களையும், பொம்மைகளையும் கீழே தள்ளி உடைத்து வைத்திருந்தாள்.
   அந்த அலங்காரப் பொருள்கள் சுக்கு நூறாக உடைந்து அறையெங்கும் இறைந்துக் கிடந்தன.
   தங்கராசுவிற்கு அதிர்ச்சியாயிருந்தது. எல்லாமே விலை உயர்ந்த பொருள்கள்தான். விலை கிடக்கட்டும். இவ்வளவு அழகானப் பொம்மைகளை உடைக்க யாருக்காவது மனசு வருமா?
   அப்படி உடைப்பதென்றால் அவர்களுக்கு கிறுக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். ஒருவேளை தனிமையில் இருந்து, இருந்து இவளுக்கும் கிறுக்குப் பிடித்துவிட்டதோ என்று நினைத்தவன்.
   "என்ன கௌசி, நீ ஆசை, ஆசையாய் வாங்கிட்டு வந்தப் பொம்மயவெல்லாம் இப்படி உடைச்சி வச்சிருக்கே'' என்று கேட்க,
   அழுகை முகத்தோடும், அலங்கோலமாகவும் உட்கார்ந்திருந்த கௌசிகா, அவனை ஒரு பார்வைப் பார்த்தாள். அந்தப் பார்வை இத்தனை நாளும் அவள் பார்க்கும் கோபப் பார்வையாக இல்லை. ரொம்ப உக்கிரமாக இருந்தது. தனக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து இப்படியொரு கௌசிகாவை அவன் பார்த்ததே யில்லை.
   - தொடரும்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai