Enable Javscript for better performance
பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!- Dinamani

சுடச்சுட

  

  பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!

  By DIN  |   Published on : 14th August 2019 11:38 AM  |   அ+அ அ-   |    |  

  mm2

  குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், இரட்டைக் குழந்தைகள், உடல் எடை குறைவான குழந்தைகள், நோயுடன் பிறந்த குழந்தைகளுக்குப் பாலூட்டுவது மிகவும் சவாலான செயல் என்பதால் பிரசவிக்கும் தாய்மார்கள், செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர்கள், அனுபவம் பெற்ற குடும்பப் பெண்கள் போன்றோரின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் உடனுக்குடன் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.
  தாய்க்கு ஏதேனும் நாட்பட்ட நோய்கள், ஆறு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் தரித்தல், பிறவிக் குறைபாடுகளால் குழந்தையால் பால் குடிக்க இயலாமை, பால் சுரப்பு நின்றுபோதல், குழந்தைக்குத் தாயில்லாத நிலை, தாய் ஏதேனும் கதிரியக்க சிகிச்சை பெறுதல் போன்ற நிலைகளில் மட்டுமே, தாய்ப்பால் ஊட்டுவது தவிர்க்கப்படுவதாக இருக்கவேண்டும். அந்தநேரங்களில் தகுந்த மாற்று முறைகளை மருத்துவரின் ஆலோசனையின்படி கடைப்பிடிக்கலாம். 
  பாலூட்டும் தாய்க்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR)பரிந்துரைத்துள்ளவாறு அனைத்து சத்துகளும் கிடைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 420 கிராம் தானியங்கள், 100 கிராம் பருப்புகள், 100 கிராம் கீரைகள், 75 கிராம் காய்கள், 75 கிராம் கிழங்குகள், 110 கிராம் பழங்கள், 1000 மி.லி. பால், 55 கிராம் எண்ணெய் பொருட்கள், 100 கிராம் மாமிசம் மற்றும் 50 கிராம் இனிப்புப்பொருட்கள் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 
  பால் சுரப்பதற்கும், பூண்டு உண்பதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென பெரும்பாலான ஆய்வு முடிவுகள் கொடுக்கப்பட்டாலும், பூண்டிலுள்ள சுவையும் மணமும், குழந்தையைத் தூண்டி நன்றாகப் பால் குடிப்பதற்கு உதவி செய்கின்றன என்று மட்டும் கூறப்படுகிறது. அதனுடன் சுறா மற்றும் திருக்கை மீன், முட்டை, எள், கொண்டைக்கடலை, பால் போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உண்பதால், புரதச்சத்து சரியான அளவில் கிடைப்பதுடன், பாலிலுள்ள பிற சத்துகளும் போதுமானதாக இருக்கின்றன. 
  பால் சுரப்பதற்கு தண்ணீர் மிக முக்கியமான சத்தாகும். வெந்நீராக மட்டும் நீரை குடிக்காமல், பழச்சாறு, சூப், ரசம், தானிய கஞ்சிகள், பருப்பு கடைந்த தண்ணீர், சாதம் வடித்த நீர் ஆகியவற்றை தினந்தோறும் அருந்தலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, எண்ணெய் சேர்த்த ஊறுகாய் வகைகள், சோடாமாவு மற்றும் வேதிப்பொருட்கள் சேர்த்து பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், அதிக இனிப்புள்ள உணவுகள், அதிக புளிப்புள்ள உணவுகள் ஆகியவற்றை உண்ணக்கூடாது.
  குழந்தை பால் குடிக்கத் துவங்கியவுடன், முதல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு சுரக்கும் பால் (Fore Milk) மேலும் பசியைத் தூண்டுவதுடன், அடுத்து கிடைக்கும் பாலே (Hind Milk) குழந்தையின் பசியை முழுவதும் தணித்து திருப்திப்படுத்துகிறது. எனவே, கூடுமானவரையில் பாலூட்டும் தாய்மார்கள் புடவை அணிவது, எந்த இடத்திலும் நிதானமாகவும், முழுமையாகவும் குழந்தைக்குப் பாலூட்டும் வசதியை அளிக்கிறது. அசவுகரியமான உடையில் அல்லது இடத்தில் அவசரகதியில் குழந்தைக்குப் பாலூட்டும் நிலை ஏற்படும்போது, குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்காததுடன், உடலளவிலும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தாய்க்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், அருகிலிருப்பவர்களின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடுவதையும் தவிர்க்கலாம். 
  குழந்தைக்குப் பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை முறையாகக் இருப்பதுடன், தாய்க்கும் சேய்க்கும் இடையேயான அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கிறது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எவ்வித சிக்கலும் இல்லாமல் கிடைக்கக்கூடிய தூய்மையான அன்புணவும், அமுதுணவுமான தாய்ப்பால் ஒவ்வொரு பிறந்த குழந்தையின் பிறப்புரிமை. அதை சற்றும் குறைவில்லாமல் அரவணைப்புடன் கொடுத்து, தானும் மகிழ்ந்து, குழந்தையையும் மகிழ்வித்து, திருப்தியடைய வைப்பது ஒவ்வொரு தாயின் பிறவிக் கடமையுடன் முக்கிய பொறுப்புமாகும். 

  ப. வண்டார்குழலி இராஜசேகர், 
  உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
  அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai