Enable Javscript for better performance
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!- Dinamani

சுடச்சுட

  
  gowri

  கர்நாடக மாநிலத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் மைசூரில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மணல் சிற்ப மியூசியம் ஒன்றை, கர்நாடகாவின் ஒரே பெண் மணல் சிற்ப கலைஞரான எம்.என்.கௌரி அமைத்துள்ளார்.
   இந்தியாவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் மணல் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. கடற்கரை பகுதிகளில் மணல் சிற்பங்கள் அமைப்பது ஒரு சவாலான விஷயமாகும். பலமான அலைகள் அல்லது வேகமான காற்றினால் அவை பாதிக்கப்படுவதுண்டு. கடற்கரை மணல் எதுவுமில்லாத அயல் நாடுகளிலும், இந்தியாவிலும் மணல் சிற்ப கலைஞர்கள் உருவாக்கும் சிற்பங்கள் பற்றிய தகவல்களை இன்டர் நெட் மற்றும் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்ட கௌரி, தானும் மணல் சிற்ப கலைஞராக வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்தார். இதற்காக 2014-ஆம் ஆண்டு மைசூர் சாமுண்டி மலைப்பாதை பகுதியில் 13 ஆயிரம் சதுர அடி நிலத்தை குத்தகைக்கு எடுத்து, 16 வகையான தீம்களில் எட்டுமாத காலத்தில் 150-க்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களை உருவாக்கினார்.
   இதற்காக 115 டிரக் லோடு மணலை வரவழைத்து நிலத்தில் கொட்டி இந்த சிலைகளை அமைத்துள்ளார். இதன்மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரே பெண் மணல் சிற்ப கலைஞர் என்ற சிறப்பை கௌரி பெற்றுள்ளார்.
   குழந்தை பருவத்தில் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட கௌரி, பின்னர் ஓவியக் கலையில் மாஸ்டர் டிகிரி பெற்று, 2011-ஆம் ஆண்டு முதன்முதலாக தானாகவே "சுத்தூர்' என்ற ஊரில் சிவபெருமான் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கினார். அனைவரது பாராட்டும் இவருக்கு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொடுத்ததால் தொடர்ந்து மணல் சிற்பங்களை உருவாக்க தீர்மானித்தார். மணல் சிற்பங்களை உருவாக்குவது எப்படி? கெளரியிடம் கேட்டோம்:
   "என்னுடைய தந்தை நஞ்சுண்ட சுவாமி. உலோக தகடுகள் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வந்ததால், என்னை மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் இரண்டாம் ஆண்டிலேயே என்ஜினியரிங் படிப்பை நிறுத்திவிட்டு அனிமேஷன் படிக்கத் தொடங்கினேன். கம்ப்யூட்டர் மூலம் சிற்பங்களை உருவாக்குவதில் உயிரோட்டம் இல்லை என்று கருதி, கைகளால் சிற்பங்களை உருவாக்குவதுதான் சிறப்பு என கருதி முதன் முதலாக சிவ பெருமான் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கினேன். என்னுடைய முயற்சிக்கு முதலில் ஆதரவளிக்க மறுத்த என் தந்தை, என்னுடைய முயற்சியில் உருவான சிவபெருமான் சிற்பத்தை பார்த்து ஆதரவளிக்க முன்வந்தார். தொடர்ந்து மணல் சிற்ப மியூசியம் ஒன்றை அமைக்க வேண்டுமென திட்டமிட்டேன். இதற்கு உதவ என் அம்மாவும், சகோதரியும் முன் வந்தனர். நிலத்தை குத்தகைக்கு எடுக்க வங்கி மூலம் ரூ.20 லட்சம் கடனுதவி பெற்றேன். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வித்தியாசமான தீம்களில் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினேன்.

  இந்த மணல் சிற்பங்களை உருவாக்க ஒரு குறிப்பிட்ட உயரம் மணலைக் கொட்டி, தேவையான அளவு தண்ணீரை கலந்து கெட்டியாக்கிய பின்னரே சிற்பங்களை உருவாக்கமுடியும். உருவங்களை அமைக்கும் பணியை மேலிருந்து துவங்க வேண்டும். ஏதாவது குறை இருப்பது தெரிந்தால் மீண்டும் மேலே ஏறி சீர்படுத்த முடியாதல்லவா கட்டட வேலைகளில் பயன்படுத்தும் சிறு கருவிகளை கொண்டு சிற்பங்களை உருவாக்குகிறேன்.
   சிற்பங்கள் மீது தண்ணீர் படாமல் பாதுகாக்க உலோக தகடுகளை கூரையாக அமைத்திருக்கிறோம். மழைநீர் புகாமல் இருக்க சுற்றிலும் மழைநீர் கால்வாய் அமைத்திருப்பதோடு, பூச்சிகள், எலிகள் போன்றவை மணலை அரிக்காமல் இருக்க வாரந்தோறும் கண்காணிக்கிறோம். பழுது ஏற்பட்டால் சீரமைக்கிறேன். கூடவே பூச்சிக் கொல்லி திரவத்தை தெளித்து பிரஷ் செய்கிறோம். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளும் செய்துள்ளோம். பார்த்தவர்கள் பாராட்டும்போது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தம்முடைய நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இதுபோன்ற மணல் சிற்ப மியூசியம் அமைக்கும் திட்டமும் உள்ளது'' என்று கூறும் கௌரி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் இவரது மணல் சிற்ப மியூசியமும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.


   - பூர்ணிமா
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai