Enable Javscript for better performance
டிரெண்டாகும் சேலைகள்!- Dinamani

சுடச்சுட

  

  டிரெண்டாகும் சேலைகள்!

  Published on : 21st August 2019 10:24 AM  |   அ+அ அ-   |    |  

  coorg

  சமூக வலைதளங்களில் "சேலை ட்விட்டர்' எனப்படும் ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகியுள்ளது. இதில் இணையும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான சேலையை அணிந்து எடுக்கும் புகைப்படங்களை இதில் பதிவு செய்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பல பிரபலங்கள், நடிகைகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களின் மனைவிகள் என பலர் விருப்பமான சேலை அணிந்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
   இன்றையப் பெண்கள் காலத்திற்கேற்ப பலவித ஆடைகளை வித்தியாசமாக அணிந்தாலும், இந்தியப் பெண்களை பொருத்த வரை சேலை ஒரு தேசிய ஆடையாகவே கருதப்படுகிறது.
   பண்டைய காலத்திலேயே சேலை பெண்கள் பயன்பாட்டில் இருந்ததற்கு ஆதாரமாக "காந்தாரா சிற்பங்கள்' உள்ளன. ஆண்களும் பெண்களும் நீளமான துணிகளை உடலைச் சுற்றி போர்த்தி இடுப்பில் கயிறு கட்டியிருப்பதும், பெண்கள் நீளமான துணியை தோளுக்கு பின்புறம் இழுத்து வயிற்றுப் பகுதியை சுற்றி, இன்றைய பெண்கள் கட்டுவது போல் செருகியிருப்பது பல சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த நீளமான துணியை உடலை போர்த்தியபடி அணியும் வழக்கம் கிரேக்கர்களிடமிருந்து பரவியதை சிந்து சமவெளிநாகரிகம் மூலம் அறியலாம்.
   பண்டைய சமஸ்கிருத இலக்கியங்களில் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "காதம்பரி', "சிலப்பதிகாரத்தில்' கண்ணகி சேலை உடுத்தியிருந்ததையும், "மகாபாரதத்தில்' திரௌபதியை கௌரவர்கள் மானபங்கம் செய்ய முயற்சித்தபோது கிருஷ்ணபகவான் தொடர்ந்து சேலையை முடிவில்லாமல் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

  இன்று வண்ணமயமாக விதவிதமான வடிவங்களில் பெண்களுக்கான ஆடைகள் தயாரிக்கப்பட்டாலும், பாரம்பரிய ஆறு கெஜ சேலையை பெண்கள் உடுத்தும்போது அழகு கூடுதலாகிறது என்பதை மறுக்க இயலாது. அலுவலகம், பார்ட்டிகள், சாதாரணமாக வீட்டில் இருக்கும்போது உடுத்துவதற்கான சேலைகள் விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன.
   இந்தியாவைத் தவிர நேபாளம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் சேலை உடுத்தும் வழக்கம் உள்ளது. மகாராஷ்டிராவில் பெண்கள் 8 கெஜ சேலைகளை கட்டுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
   கேரளாவில் சேலை அணிவதை "முண்டு' என்று குறிப்பிடுகின்றனர். குஜராத்திகள் "சீதா பல்லா' என்று மடிப்பை பின்புறமாக செருகுவார்கள். குடகு மாவட்டத்தில் "உல்டா பல்லா' என்று மார்பின் மீது அணிந்து தலைப்பை பின்புறமாக இழுத்து முன் பக்கம் செருகி பின் குத்துவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் வெவ்வேறு மாதிரியாக சேலைகளை உடுத்தினாலும், சேலையின் மதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
   இந்திராகாந்தி திருமணத்தின்போது காந்திஜி தன் கையால் ராட்டையில் நூல்நூற்று காதி புடவை ஒன்றை உருவாக்கி பரிசாக அளித்தாராம்.
   தற்போது சேலைகள் பனராஸ், காஞ்சிபுரம், மைசூர் பட்டு, போச்சம்பள்ளி, கைத்தறி சேலைகள், ஷிபான் சேலைகள், லினன் வித் ட்விஸ்ட் சேலைகள், வேட்டி ஸ்டைல், கீலுக்ஸ் மாடர்ன் சேலை, ராப்பிஸ் சேலை, காக்டைல் சேலை, பருத்தியுடன் இணைந்த பட்டுச் சேலை என சேலை உற்பத்தியில் பல மாறுதல்கள் தோன்றியுள்ளன. அவரவர் விருப்பத்திற்கேற்ப சேலையுடனே ரவிக்கையும் கிடைக்கிறது சேலையை உடுத்த அதிக நேரமாகிறது என்று கூறுபவர்கள் வசதிக்காக 30 விநாடிகளில் சேலையை அணியும் வகையில் மடிப்புடன் கூடிய சேலைகளும் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன.

  நெசவுத் தொழிலில் நம்முடைய நெசவாளர்கள் தங்கள் திறமைகளை காட்டி காலத்திற்கேற்ப பலவித டிசைன்களில் சேலைகளை தயாரிக்கின்றனர். இப்படி தயாரிக்கப்படும் சேலைகளை காலத்திற்கேற்ப பெண்கள் அழகுடன் வித்தியாசமாக அணிவது எப்படி என்பதை விளக்க ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் நடத்தும் ஆடை வடிவமைப்பாளர்களும் அதிகரித்துள்ளனர். புடவைகள் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.
   - பூர்ணிமா
   

  kattana sevai