இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!

மேற்கு வங்காளம் நாடியா மாவட்டம் ரணாகத் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் 4. கி.மீ. தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வந்து நடைமேடையில் உள்ள பயணிகள் இருக்கையொன்றில் அமர்ந்து
இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!

மேற்கு வங்காளம் நாடியா மாவட்டம் ரணாகத் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் 4. கி.மீ. தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வந்து நடைமேடையில் உள்ள பயணிகள் இருக்கையொன்றில் அமர்ந்து தன்னுடைய இனிமையான குரலில் பழைய இந்திப் படப் பாடல்களை பாடத் தொடங்கினார் 59 வயதாகும் ரானுமரியா மண்டல். அன்றைய தினம் தன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அங்கு வந்த ஆதிந்ரா சக்ரபர்த்தி என்ற பயணி, மண்டலை சுற்றி கூடியிருந்த கூட்டத்தில் ஒருவராக நின்று பார்த்தபோது மண்டலின் இனிமையான குரல் அவரை மிகவும் கவர்ந்தது. தன்னுடைய மொபைலில் இரண்டு நிமிடம் அவரையும், அவரது பாடலையும் பதிவு செய்த ஆதிந்ரா. அதை தன்னுடைய முகநூலில் பதிவேற்றினார்.

அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த இரண்டு நிமிட வீடியோ லட்சக் கணக்கானவர்கள் கவனத்தை கவர்ந்து வைரலாகியது. ஆதிந்ராவுக்கு ஏகப்பட்ட போன் கால்கள், இசைக்குழுவினர், வங்காள திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி தொலைகாட்சியில் ரியாலிடி ஷோ நடத்தும் இயக்குநர் ஒருவர் விமான டிக்கெட் எடுத்து அனுப்புவதாகவும் மண்டலுக்கு பாட வாய்ப்பளிக்க முன்வந்தனர். திரைப்படங்களில் பின்னணி பாட வந்த வாய்ப்புகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் மண்டல். தொலைக்காட்சி, தயாரிப்பாளர்கள் இவரது தோற்றத்தை மாற்றி நிகழ்ச்சிகளில் பாட வைத்தனர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இசையமைப்பில் இவர் பாடிய பாடல் மேலும் இவரை பிரபலமாக்கியது. சில நாட்களிலேயே இவரது வாழ்க்கை திசை மாறத் தொடங்கியது.

உண்மையில் ஆதிந்ராவுக்கு முன்பே, கடந்த ஆண்டு அக்டோபரில் மண்டலின் குரலினிமையை கேட்ட அவரது வீட்டிற்கு அருகிலிருந்த தபன்தாஸ் என்பவர் அவரது குரலை பதிவு செய்து முதன்முதலாக சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, அவ்வளவாக மக்கள் கவனத்தை கவரவில்லை. எல்லாவற்றுக்கும் நேரம் வர வேண்டுமல்லவா?

தன்னுடைய 20-ஆவது வயதிலேயே உள்ளூர் இசைக் குழுவொன்றில் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய மண்டலை "ரானு பாபி' என்று அன்போடு அழைப்பார்களாம்.

ஆனால் இவரது குடும்பத்தினர், இவர் ஊர் ஊராகச் சென்று பாடுவதை விரும்பவில்லை. இதனால் இசைக் குழுவிலிருந்து விலக வேண்டியதாயிற்று. திருமணமானவுடன் கணவர் மும்பையில் நடிகர் ஃபெரோஸ்கான் வீட்டில் வேலை பார்த்து வந்ததால் இவரும் மும்பை செல்ல வேண்டியதாயிற்று. ஃபெரோஸ்கான் வீட்டில் இவரும் வேலை பார்த்ததால் சரளமாக இந்தியும், ஆங்கிலமும் பேச கற்றுக் கொண்டாராம். மீண்டும் மேற்கு வங்காளத்திற்கே திரும்பியவர். குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது மகள், கணவர் விலகி செல்ல, இவர் வேறு வழியின்றி ரயில் நிலையத்தில் பாட்டுபாடி கிடைத்த வருவாயில் காலங்கழித்து வந்தார்.

விதி தற்போது மண்டலுக்கு புதிய பாதையை காட்டியிருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதில் கவனமாக இருக்கிறாராம்.

பத்தாண்டுகளுக்கு முன் பிரிந்து போன மகளும் இப்போது இவருடன் சேர்ந்துள்ளார். தன்னுடைய இனிமையான குரலால் மீண்டும் இரண்டாவது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் மண்டல்.
 -அ.குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com