சமையல்! சமையல்!

ரவை சோமாஸ், மில்க்மெய்ட் அவல் பாயசம்,  ஜீரா வெள்ளைப் பணியாரம், இனிப்பு சீடை  

கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷல் சமையல்!
ரவை சோமாஸ் 

தேவையான பொருட்கள்: ரவை - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ,
பொட்டுக் கடலை - கால் கிலோ, தேங்காய் - 2, ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு, நெய் - சிறிதளவு, நல்லெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை : பொட்டுக் கடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வறுத்துக் கொண்டு, அதில் அரைத்த பொட்டுக் கடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கிளறி பூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும். ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமûஸ போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூப்பரான ரவை சோமாஸ் ரெடி. 

மில்க்மெய்ட் அவல் பாயசம்

தேவையான பொருட்கள்:
அவல் - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி - 10 கிராம், ஏலக்காய் - 4, காய்ந்த திராட்சை - 10 கிராம், நெய் - 50 கிராம், மில்க் மெய்ட் - 2 தேக்கரண்டி.
செய்முறை: பாலை காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய், சர்க்கரை சிறிது சேர்த்து மிக்ஸி
யில் அரைத்துத் தூள் செய்து வைத்து கொள்ளவும். நெய் விட்டு லேசாக சூடானதும் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலேயே அவலை லேசாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 
அவல் ஊறியதும், வாய் அகன்ற பாத்திரத்தில் அவலைப் போட்டு வேக வைக்கவும். அவல் வெந்த பிறகு சர்க்கரை, பால், மில்க்மெய்ட், ஏலக்காய் தூள் அனைத்தும் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்க்கவும். சுவையான மில்க்மெய்ட் அவல் பாயசம் தயார்.

ஜீரா வெள்ளைப் பணியாரம் 

தேவையான பொருட்கள் : 
பச்சரிசி - ஒரு கிண்ணம்,வெள்ளை உளுந்தம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி, உப்பு - ஒரு தேக்கரண்டி, பால் - கால் கிண்ணம், சீனி - ஒன்றரை தேக்கரண்டி. 
செய்முறை : அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூழ்கும் அளவு தண்ணீரில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஊற வைக்கவும். அரிசி உளுந்து ஊறியதும், அதனுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு மிருதுவாக இருக்கும். 
தற்போது, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய்யில் நேரடியாக ஊற்றவும். ஊற்றும்போது எண்ணெய் மேலே தெறிக்காதது போல் எச்சரிக்கையாக ஊற்றவும். மாவை ஊற்றியதும் எண்ணெய்யில் பொரிந்து அது பணியாரம்போல் உப்பி வரும். இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும். சிவக்க விடக்கூடாது. இப்போது சுவையான வெள்ளைப் பணியாரம் தயார். இந்த பணியாரத்தை சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து வைத்தால் ஜீரா வெள்ளைப் பணியாரம் தயார். ஜீரா பிடிக்காவிட்டால் தேங்காய்ப் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். 

இனிப்பு சீடை

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -1 கிண்ணம், வறுத்த உளுந்து மாவு-1 மேஜைக்கரண்டி, வெல்லம் - அரை கிண்ணம்,தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி, எள்ளு-1 தேக்கரண்டி, ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
மாவு தயாரிக்க: பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விடவும், சுத்தமான துணியில் உலர்த்தவும். தண்ணீர் முற்றிலும் உலர்ந்ததும் (அரை ஈரப்பதம் ) மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர், சல்லடையில் சலித்துக்கொள்ளவும். 
செய்முறை: அரைத்து சலித்த மாவுடன், அரைத்த மாவில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் உளுந்தமாவு, தேங்காய், எள்ளு மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பொறிக்க தயாராக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்துமிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சுவையான இனிப்பு சீடை தயார்.
குறிப்பு: மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும், இல்லையேல் வெல்லம் சேர்த்தமையால் எளிதில் வெளிப்புறம் கருகி விடும் உள்புறம் வேகாமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com