வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம்! 

சென்ற இதழில் மூடாக்கு, மண்புழு உரமும் செடிகளுக்கு என்று தெரிந்துகொண்டோம். இனி இந்த இதழில் நாமே நமது வீட்டில் எவ்வாறு இயற்கை உரம் தயாரிப்பது என்று தெரிந்துகொள்வோம்.
 வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம்! 

தோட்டம் அமைக்கலாம் வாங்க...
சென்ற இதழில் மூடாக்கு, மண்புழு உரமும் செடிகளுக்கு என்று தெரிந்துகொண்டோம். இனி இந்த இதழில் நாமே நமது வீட்டில் எவ்வாறு இயற்கை உரம் தயாரிப்பது என்று தெரிந்துகொள்வோம்.
 ஒவ்வொரு நாளும் நமது வீட்டிலிருந்து வெளிவரும் கழிவுகள் அதாவது மொத்தமாக வீட்டுக் கழிவுகள் (குப்பைகள்) என்று பார்த்தால் அதில் 80 முதல் 90 விழுக்காடு சமையலறை கழிவுகளாக தான் இருக்கும். சராசரியாக நான்கு பேர் உள்ள குடும்பத்தில் நாளொன்றிற்கு 400 முதல் 500 கிராம் வரையிலான சமையலறைக் கழிவுகள் வெளிவருகிறது. சராசரியாக ஒருவர் உட்கொள்ளும் உணவில் 10 முதல் 30 சதவீதம் கழிவுகளாக வெளிவருகிறது. இந்த கழிவுகள் மண்ணுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய பொன்னான கழிவுகள். இந்த கழிவுகளை கொண்டு பலவகையான சத்து மிகுந்த உணவை நாமே வீட்டில் பெற்றுக்கொள்ளலாம்.
 வீட்டில் இருந்து வெளிவரும் கழிவுகள் பட்டியலை முதலில் பார்ப்போம். அதுயென்ன பட்டியல் என்கிறீர்களா.. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறி, கீரைகள் ஆகியவற்றின் தேவையில்லாத பாகங்கள் அதாவது சமைக்க பயன்படுத்தாத பாகங்கள் மற்றும் பழங்களின் தேவையில்லாத பாகங்களை பார்ப்போம். உதாரணத்திற்கு வெங்காயத்தில் இருக்கக்கூடிய வெளித்தோல் பூண்டு தோல், காய்கறிகளின் முனைகள் அதாவது வெண்டைக்காயின் இருமுனைகள், கத்திரிகையின் காம்பு, பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற காய்களின் மேல் தோல், விதைப்பகுதி, வாழைப்பூ மடல்கள், கீரைகளின் தண்டுகள் போன்றவைகளும் பழங்களில் வாழைப்பழத் தோல், பப்பாளிப் பழத்தோல், கொட்டைப் பகுதி, ஆரஞ்சு பழத்தோல், சக்கைகள், மாதுளம் தோல், தேங்காயின் குடுமி, நார் போன்றவைகளாகும்.
 இப்படி சேரும் சமையலறைக்கழிவுகள் மிக அதிகம். அதிலும் பழங்களை அனைவரும் விரும்பி உண்கிறோம். இந்த பழக்கழிவுகள் காய்கறிக்கழிவுகளை விட அதிகமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு சாத்துக்குடியை எடுத்துக்கொள்வோம். அதிலிருக்கும் உட்பகுதியை உண்டுவிட்டு பார்த்தால் வெளிப்பகுதிதான் அதிக எடைகொண்டிருக்கும்.
 வேறு எந்த பிரத்தியேக செலவுமின்றி இந்த கழிவுகளை வைத்துக்கொண்டு தரமான உரத்தை தயாரிக்க முடியும்.
 உரம் தயாரிக்க தேவையான பொருட்களில் முக்கியமானது. மண்ணாலான குவளைகள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு பழைய வாளியை எடுத்துக் கொள்ளலாம்.
 கடைகளில் கிடைக்கும் மண்குவளைகளின் அடிப்பகுதியில் வலைப்பின்னல் இருக்கும். அவற்றை அவ்வாறே பயன்படுத்தலாம். வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை பயன்படுத்தும்பொழுது அதன் அடியில் ஒரு சென்டிமீட்டர் அளவில் நான்கு துளைகளை இட வேண்டும். காற்றோட்டத்திற்காகவும், கழிவுகளில் அதிகப்படியான நீர் தன்மை இருந்தால் அவை வெளியேறவும் இது உதவும்.
 பின் உள்பகுதியில் ஒரு இன்ச் அளவிற்கு கருங்கல்லை நிரப்ப வேண்டும். அதன் மேல் சிறிது மணலை இடவேண்டும். தேவையற்ற காகிதங்களை அதன்மேல் இட வேண்டும். இப்பொழுது நம் உரக் குவளை தயாராகிவிட்டது. இனி அன்றாடம் கிடைக்கக்கூடிய சமையலறைக் கழிவுகளை அதிக நீரின்றி ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்து இந்த உரக் குவளையில் இடவேண்டும். அருகில் காய்ந்த இலை சருகுகள் கிடைத்தால் அவற்றை ஒவ்வொரு நாளும் சமையலறைக்கழிவுகளை இட்டபின் இடுவது சிறந்தது, இல்லையென்றால் காகிதங்களை சிறுதுண்டுகளாக்கி அதன்மேல் இடலாம். இவ்வாறு செய்வதால் ஈரப்பதத்தை சமமாக்க முடியும். உரக்குழியில் அதிக ஈரமிருந்தால் கழிவுகள் மக்குவதற்கு பதில் பூஞ்சணங்கள் ஏற்படும். அதனால் பூச்சிகள், கொசுக்கள் போன்றவை வரும் அதோடு துர்நாற்றமும் வீசும். அதனால் ஈரப்பதத்தையும் காற்றோட்டத்தையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் இவற்றை நிரப்பியபின் சல்லடைபோன்ற மூடியைக்கொண்டு மூடுவது சிறந்தது அல்லது துணியை கொண்டும் மூடலாம். இவை இரண்டும் இல்லையென்றால் மூடியிலும் அங்கங்கே துளைகளிட்டு மூடவேண்டும். இந்த குவளையை நிழலில் வைக்க வேண்டும்.
 வாய்ப்பிருப்பவர்கள் அன்றாடம் சாணப் பொடியை சிறிதளவு இந்த கழிவுகள் மேல் தூவுவது சிறந்தது. இதனால் விரைவாக சமையலறைக் கழிவுகள் உரமாக மாறுவதோடு தரமான உரமாகவும் இருக்கும்.
 குவளை நிரம்பும் வரை இவ்வாறு கழிவுகள் அதன் மேல் சருகுகள் என்று அடுக்குகளாக இடவேண்டும். நிரம்பிய பின் அவற்றை சல்லடை மூடியுடன் வைத்துவிட்டு வாரம் ஒருமுறை மேலிருந்து கீழாக புரட்ட வேண்டும். இவ்வாறு செய்ய ஓரிரு மாதத்திற்குள் இந்த கழிவுகள் நன்கு மக்கி மண்வாசனையை வெளிப்படுத்தும்.
 இவற்றை நேரடியாகவும் நமது மண்ணோடு கலந்து விதை விதைத்து செடிகளை வளர்க்கலாம் அல்லது இவற்றில் நமது அருகில் இருக்கும் வளமான மண்ணிலிருக்கும் மண்புழுக்களை விட ஒருமாதத்திற்குள் வளமான மண்புழு உரத்தை பெறலாம்.
 பின் இதனுடன் சரிபங்கு மண் கலந்து சிறுதொட்டிகளில் நிரப்பி தேவையான விதையை தூவவேண்டும். உதாரணத்திற்கு கீரை, வெண்டை, புதினா என எந்த செடியையும் வளர்க்கலாம்.
 சராசரியா மூன்று குவளைகள் இருந்தால் போதும் சுழற்சி முறையில் கழிவிலிருந்து உரத்தை ஆண்டு முழுவதும் பெறலாம். ஆக வீட்டுக்கழிவுகள் மூலம் வீட்டிற்கு தேவையான காய், கீரைகளை எளிமையாக பெற உதவும். இனி குப்பைகள் என்று வீட்டின் பொன்னான சமையலறைக்கழிவுகளை நெகிழியுடன் சேர்த்து கொட்டி மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசையேற்படுத்தாமல் நமக்கான நச்சற்ற இயற்கையான உணவைப் பெறலாம். இந்த குவளையை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க எந்த பிரத்தியேக இடமும் தேவையில்லை, பால்கனியே போதும். நேரம், இடம், பொருட் செலவு எதுவுமின்றி சுலபமாக நமது உரத்தை நாமே இனி பெறலாம்.
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com