Enable Javscript for better performance
ஆங்கிலோ இந்திய உணவின் இளவரசி!- Dinamani

சுடச்சுட

  

  ஆங்கிலோ இந்திய உணவின் இளவரசி!

  By DIN  |   Published on : 04th December 2019 12:46 PM  |   அ+அ அ-   |    |  

  CHEF_BRIDGET

  சென்னையில் உள்ள, ராடிசன் ப்ளு ஹோட்டல் ஜி.ஆர்.டி.யில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு உணவகமான "சால்ட் கோ 531-இல், "பாப்-அப் ரெஸ்டாரண்ட்' என்ற புதிய கான்செஃப்ட்டின் அடிப்படையில் "மினிஸ்ட்ரி ஆஃப் சட்னிஸ்' என்ற பெயரில் நவ. 29 முதல் டிச. 15 வரை "ஆங்கிலோ - இந்தியன்' உணவுத் திருவிழாவை கொண்டாடுகிறது. நாள்தோறும் இரவு 7 மணிக்கு மேல் தொடங்கும் இந்த உணவுத் திருவிழாவில், ஆங்கிலோ இந்தியர்களின் சில பிரத்யேகமான உணவுகளான முல்லிகாதாவ்ணி சூப், கிராண்ட்மாஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன், கிளாசிக் பிரட் புட்டிங் போன்ற மறந்து போன சைவ - அசைவ உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
   வழக்கொழிந்து வரும் இவ்வகை ஆங்கில இந்திய உணவுமுறைகளை மீட்டெடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, அவற்றைத் திரட்டி எழுத்து வடிவம் தருவதில் ஆர்வம் காட்டுபவரும், ஆங்கிலோ -இந்திய உணவு சமைப்பதில் இன்றைக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்று ஆங்கிலோ இந்திய உணவுக் கலையின் இளவரசி" எனப் பாராட்டு பெற்றுள்ளவருமான உணவுக் கலை நிபுணர் செஃப் பிரிகெட் ஒயிட் குமார் இந்த உணவு திருவிழாவை வழிநடத்துகிறார்.
   செஃப் பிரிகெட் கூறுகையில்:
   " நான் கர்நாடகாவைச் சேர்ந்தவள். கோலார் தங்க வயலில் வேலை நிமித்தமாக என் மூதாதையர் காலம் முதல் இங்கு வசிக்கிறோம். நான் உண்மையில் செஃப் கிடையாது. பி.எட் முடித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியராக பணி செய்தேன். பின்னர், கனரா வங்கியில் பணிகிடைத்து, 25 ஆண்டுகளாக வங்கி ஊழியராக இருந்தேன். அப்போது, என் மகள் இங்கிலாந்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருந்தாள். அங்கு அவளுக்கு சரியான உணவு கிடைக்காததால், நான் அவ்வப்போது, வீட்டிலேயே செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் உணவுகளுக்கான சமையல் குறிப்புகளை எழுதி அவளுக்கு அனுப்பி வைப்பேன்.
   இந்நிலையில், 2000-இல் விருப்ப ஓய்வு பெற்றேன். அதன்பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, என் பாட்டி என் அம்மாவுக்கு கொடுத்து, என் அம்மா எனக்கு கொடுத்த ரெசிபி புக் ஒன்று வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்தது. அந்த புத்தகம், "மெட்ராஸ் குக்கரி' என்ற பெயரில் யார் எழுதியது என்று தெரியவில்லை. ஹிக்கின்பாதம்ஸ் 1802-இல் அதை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த புத்தகம் எனக்கு கிடைத்தபோது அது 3-ஆவது எடிஷன். புத்தகத்தை கையில் எடுக்கும்போதே அதன் தாள்கள் உடைந்து நொறுங்கின. அத்தனை பழைய புத்தகம் அது.
   அந்த புத்தகம், அந்தக்காலத்தில் சமையல் செய்த முறைகளை கொண்டு எழுதப்பட்டிருந்தது. அளவுகள், செய்முறை எல்லாம் சரியாக எழுதப்படவில்லை. இருந்தாலும், அந்த பாரம்பரிய உணவுகளை செய்து பார்க்க வேண்டும். அதன் சுவை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அதில் எழுதப்பட்டிருந்த முறையில் சில ரெசிபிகளை செய்துபார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. அதன்பிறகு அந்தப் புத்தகத்தில் இருந்த அனைத்து ரெசிபிகளைகளையும் செய்து பார்த்தேன்; எல்லாமே சரியாக வந்தது.
   இவ்வளவு அருமையாக இருக்கும், இந்த பாரம்பரிய உணவுமுறைகள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று அதில் உள்ள ரெசிபிகளுக்கு சரியான அளவு, நவீன உபகரணங்களை பயன்படுத்தி முறையாக எப்படி செய்வது போன்றவற்றை எல்லாம் எழுதி "த பெஸ்ட் ஆஃப் ஆங்கிலோ குசின்' என்ற பெயரில் ஒரு பகுதியை மட்டும் முதலில் புத்தகமாக வெளியிட்டேன்.
   நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில், "ஃப்ளேவர்ஸ் ஆஃப் த பாஸ்ட்' , "ஸ்நாக்ஸ் பாக்ஸ்' போன்று இதுவரை 7 புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதையெல்லாம் நெட்டில் ஒரு ப்ளாக் தொடங்கி அதில் வெளியிட்டேன்.

   அதைப் பார்த்துவிட்டு சென்னை, தாஜ் ஹோட்டலில் இருந்து அழைத்து, அங்கே ஆங்கிலோ இந்திய உணவுத் திருவிழா ஒன்று நடத்தி தரும்படி கேட்டனர். அதன்பிறகு நிறைய ஸ்டார் ஹோட்டலில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. சிலர் உணவு திருவிழா நடத்துவதற்கும், சிலர் அவர்கள் ஹோட்டலில் உள்ள செப்பிற்கு ஆங்கிலோ இந்திய உணவுகளை சமைக்க பயிற்சி தரும்படியும் அழைத்தனர். அதன்பிறகு இந்தியா முழுக்க பல ஹோட்டல்களுக்கு பயணம் செய்யத் தொடங்கினேன். இப்படித்தான் நான் செஃப் ஆனது.
   அந்த வகையில், தற்போது ராடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து அழைத்திருக்கிறார்கள். இங்கே இந்த ஆங்கிலோ -இந்திய உணவு திருவிழாவை நடத்திக் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
   ஆங்கிலோ - இந்திய உணவு என்பது, ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்ட காலத்தில், இந்தியா வந்து இங்கேயே தங்கி இங்கேயே மணம் செய்துகொன்டு வாழ்ந்த தலைமுறையினரான "ஆங்கிலோ இந்திய' சமூகத்தினரின் உணவு முறையும், வகைகளும் விநோதமானவை. அவை, நமது இந்திய உணவு முறைகளின் பல சிறப்பு அம்சங்களை கொண்டவை. அதை அவர்களது பாரம்பரிய உணவுப் பழக்கத் தோடு இணைத்து ஏற்படுத்திய உணவு வகைகள், மணத்திலும், குணத்திலும் அலாதியானவை. இத்தனை பாரம்பரிய சுவைக் கொண்ட இந்த ஆங்கிலோ இந்திய உணவுகளை சுவைக்க அனைவருக்கும் இது வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.
   - ஸ்ரீதேவி குமரேசன்
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai