குழந்தைகளை மனவலிமை மிக்கவர்களாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற்றோர் தருகின்றனர்.
குழந்தைகளை மனவலிமை மிக்கவர்களாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற்றோர் தருகின்றனர். ஆனால், நல்ல வாசிப்பு பழக்கமோ, விளையாட்டுகளில் சிறந்த திறனோ எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்வை அந்தக் குழந்தைக்கு கொடுக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 
சமூக மற்றும் உணர்ச்சி அடிப்படையிலான திறன்களே குழந்தையின் எதிர்கால வெற்றியை தீர்மானிப்பவை என பொது சுகாதாரத்துக்கான அமெரிக்க ஜர்னலின் ஆய்வு கூறுகிறது. மழலையர் பள்ளியிலேயே மிகவும் உணர்ச்சிவயப்பட்ட, மன மற்றும் சமூக திறன் பெற்ற குழந்தைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதோடு, இவர்கள் 25 வயதில் முழுநேர பணிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் சொல்கிறது. மிகக் குறைந்த சமூக மற்றும் உணர்வு திறன் பெற்ற குழந்தைகள், பள்ளியை விட்டு இடை நிற்றல், சட்ட சிக்கல்களை சந்திப்பது, போதைபொருள் பழக்கத்திற்கு ஆட்படுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர் எனவும் ஆய்வு கூறுகிறது. 
நல்லவேளையாக, சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை கற்பிக்க முடியும். உங்கள் குழந்தையுடனான உங்கள் அன்றாட தொடர்புகளில் சில எளிய உத்திகள் மூலம் இதைச் செய்ய முடியும். வெற்றிகரமான, மன வலிமை கொண்ட குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்:
பல நேரங்களில் குழந்தைகளின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருக்காது. அவர்களை நாம் உடனே அதட்டி, "அமைதியாக இரு! இது பெரிய விஷயமல்ல, "அல்லது" பயப்பட வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும்" என்று அவர்களை அடக்க முயற்சிக்கிறோம். ஆனால், இது அவர்களை அவமதிப்பதாக மாறிவிடுகிறது.
அவர்களின் உணர்வுகளை, அவை எத்தகைய முறையில் வெளிப்பட்டாலும், அவை உண்மையானவை. அறிவுள்ள பெற்றோர் அந்த உணர்வை சரி என ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதில் என்ன பிரச்னை உள்ளது என்பதை சரி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஒரு குழந்தை கோபப்பட்டு, அண்ணனையோ, தம்பியையோ அடிக்கிறது எனில், அந்தக் குழந்தையிடம் "நீ கோபப்பட்டது சரி, ஆனால், அவனை அடிப்பது சரியல்ல' என எடுத்துச் சொல்ல வேண்டும்.
உணர்வுகளை எப்படி கையாள்வது எனக் கற்றுக்கொடுங்கள்:
வெற்றிகரமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். குழந்தைகள் வருத்தப்படும்போது அவர்களை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக அல்லது அவர்கள் சோகமாக இருக்கும்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் சொந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தேவையான கருவிகளைக் கொடுக்கிறார்கள்.
எந்த வகையான சமாளிக்கும் திறன் தனக்கு பொருந்தும் என குழந்தைகளுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஒரு குழந்தை சோகமாக இருப்பதை சமாளிக்க வண்ணம் தீட்டுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும், மற்றொரு குழந்தைக்கு உணர்ச்சி மேலிட்ட தருணங்களில் இசையைக் கேட்பது ஆறுதல் அளிக்கக்கூடும். இப்படி உங்கள் குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் விஷயங்களை முன்கூட்டியே கண்டுபிடியுங்கள். 

குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்:
குழந்தை குழப்பமடைவதைப் பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு கடினமான விஷயம் என்றாலும், நீங்கள் புத்திசாலி பெற்றோர் எனில் தவறுகளை கற்றல் வாய்ப்புகளாக மாற்றுவீர்கள். தவறு செய்வதன் மூலமாக ஏற்படும் இயற்கையான விளைவுகள் வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆசிரியராக இருக்கலாம்.
ஒரு குழந்தை தனது தண்ணீர் பாட்டிலை மறந்துவிட்டாலும், அல்லது தனது அறிவியல் ப்ராஜெக்டை கடைசி நிமிடம் வரை செய்யாமல் இருந்தாலோ, பெற்றோர் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற முயலக்கூடாது. அதற்கு பதிலாக, எதிர்காலத்தில் இப்படி நிகழாமல் சிறப்பாகச் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.
பிரச்னையை சேர்ந்தே தீர்க்க முயலுங்கள் :
குழந்தைகள் தங்கள் வேலைகளைச் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற போராடுகிறார்கள் என்றாலோ, புத்திசாலித்தனமான பெற்றோர் குழந்தைகளையே அந்தச் சிக்கலை தீர்ப்பதில் ஈடுபடுத்துகிறார்கள். 
நீ இன்னும் அதிக பொறுப்புடன் இருக்க நான் என்ன உதவி செய்ய வேண்டும்" போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும். மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்..
அவர்களுடைய இலக்கில் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களை அவமானப்படுத்தாமல், தங்களுடைய இலக்கில் கவனம் செலுத்தி அடுத்தமுறை சிறப்பாக செய்ய அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அசௌகரியத்தை உணர வையுங்கள்:
அசௌகரியத்தை உணர அனுமதிப்பது குழந்தைகளின் திறனை பயிற்சி பெற பெற்றோர் அளிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளை கடினமாக்குவதற்காக, கடுமையான சூழ்நிலைக்கு தள்ள வேண்டும் என்பதில்லை. அதாவது, அவர்களை சில நேரங்களில் சலிப்பு, ஏமாற்றம், விரக்தி நிலைகளை உணர வைக்க வேண்டும். 
இத்தகைய சூழல்களில் "பயப்பட வேண்டாம்' என உதவுவதற்குப் பதிலாக, குழந்தைகளை "தைரியமாக' இருக்க ஊக்கப்படுத்துங்கள். கடுமையான சூழல்களை சகித்துக் கொள்ளும்போது அவர்கள் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள். அவர்களால் செய்ய முடியாது என நினைத்த விஷயத்தை செய்ய முடியும் என கற்றுக்கொள்கிறார்கள். 
- மு.வி.நந்தினி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com