சமையல்! சமையல்!

ஆவாரம் பூ கூட்டு, வாழைப்பூ கட்லெட், முருங்கைப் பூ அடை, வேப்பம் பூ ரசம்  

ஆவாரம் பூ கூட்டு 
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ - அரை கிண்ணம்
கடலைப் பருப்பு - அரை கிண்ணம்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
செய்முறை: குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். ஆவாரம் பூவினை அலசி நீரினை நன்கு வடிக்கவும். பருப்பு வெந்ததும் ஆவாரம்பூ மற்றும் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வேக வைக்கவும். பூ நன்கு வெந்து குழைந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும்.
- லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

வாழைப்பூ கட்லெட் 
தேவையான பொருட்கள்:
வாழைப் பூ - 1
உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1 குழிக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
புளி - 1 உருண்டை
மிளகுத்தூள், சோம்பு, சீரகம் - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை 2 கப் நீரில் கரைத்து நறுக்கி வைத்துள்ள வாழைப் பூவில் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வாழைப்பூவை நீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வேண்டிய வடிவில் தட்டி பொரித்து எடுக்கவும்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி. 

முருங்கைப் பூ அடை 
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கிண்ணம் 
பச்சரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
சீரகம் - 1தேக்கரண்டி
முருங்கைப் பூ - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
பச்சை மிளகாய் - 2 
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு 
நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 
இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யைச் சேர்த்து நறுக்கிய முருங்கைப் பூ, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் ராகி மாவு, பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் வதக்கிய கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து மாவை சப்பாத்தி போல் திரட்டி இருபுறமும் நன்கு வேகவைக்கவும். தேங்காய்ச் சட்னி (அ) தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வேப்பம் பூ ரசம் 
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ - 3 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
மிளகு, சீரகம், தனியா, 
துவரம்பருப்பு, கடுகு - தலா கால் தேக்கரண்டி
புளிக்கரைசல், உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லித் தழை - சிறிது
பூண்டு - 4 பல்
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: வேப்பம் பூவை நெய்யில்வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு இவற்றை வறுத்து மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, புளிக்கரைசல், உப்பு போட்டு தேவையான அளவு நீர்விட்டு கரைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானாதும் கடுகு தாளித்து கரைத்து வைத்துள்ள நீரைவிட்டு சூடாக்கவும். ரசம் நுரைத்து வரும் நிலையில் வறுத்த வேப்பம் பூவை தூவி இறக்கி முடிவிடவும். ( குறிப்பு: ரசம் அதிகம் கொதித்தால் கசந்துவிடும். எனவே கொதிக்கும் முன்பே இறக்கிவிடவும்)
- எஸ்.சரோஜா, திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com