மின் கம்பத்தில் ஏறி சாதனை!

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் கம்பம் நடுதல் மற்றும் புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதற்காக களப் பணியாளர்கள் 5 ஆயிரம் பேருக்கான பணியிடங்களை
மின் கம்பத்தில் ஏறி சாதனை!

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் கம்பம் நடுதல் மற்றும் புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதற்காக களப் பணியாளர்கள் 5 ஆயிரம் பேருக்கான பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களில் சுமார் 30 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடல் தகுதித் தேர்வு நடந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் லதா (26) மின்கம்பத்தில் 6 நிமிடங்களில் ஏறி, இறங்கி தேர்ச்சி பெற்றுள்ளார்.
 சேலத்தை அடுத்த உடையாபட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் இதற்கான தேர்வு நடந்து வரும் நிலையில், வியாழக்கிழமை (05.12.19) நிலவரப்படி ஒரு பெண் உள்பட 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 உடல் தகுதித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பட்டது. இதில் ஒரே ஒரு பெண் உடல் தகுதித் தேர்வில் சாதனையுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 சேலத்தை அடுத்த தொப்பூர் கம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான லதா தேர்ச்சி பெற்று சிறப்பு சேர்த்துள்ளார். இவரது கணவர் சந்திரசேகர் லாரி ஓட்டுநராக உள்ளார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். களப் பணியான காவலர் பணி மற்றும் மின்வாரிய கேங்மேன் பணியில் ஆர்வம் மிகுந்த லதா அதற்காக தயாராகி வந்தார்.
 பிளஸ் 2 வரை படித்துள்ள லதா, கடந்த 2018 -ஆம் ஆண்டில் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் போதிய உயரம் இல்லாததால் தேர்வாகவில்லை.
 இந்த இரண்டு பணிகளுக்கு காக்கி சட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பதால், லதா ஏதாவது ஒரு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். முதல் முயற்சியில் உயரம் குறைவானதால் வெளியேற்றப்பட்ட போதிலும், நம்பிக்கையை விடாமல் தன்முனைப்பால் மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்து அதற்காக தயாராகி வந்தார். தற்போது முதற்கட்டமாக உடல் தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைந்த நேரத்தில் அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து லதா கூறுகையில்:
 "எனது தந்தை தம்புசாமி குடிநீர் வாரியத்தில் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் பணி செய்து வருகிறார். எங்கள் வீட்டில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. சிறுவயதில் இளநீர் குடிக்க ஆசைப்பட்டு மரம் ஏறி பழகினேன். பின்னர் தொடர்ந்து மரங்களில் ஏற பயிற்சி பெற்றேன். இதனால் மரம் ஏறுவது எளிதாகிவிட்டது. இந்தநிலையில் மின்வாரியத்தில் உள்ள கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தேன். மின் கம்பத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைந்த நேரத்தில் அதாவது 6 நிமிடங்களில் ஏறி இறங்கினேன். இதுதவிர, கிரீப்பர் செட் மற்றும் 31 கிலோ இரும்பைத் தூக்கிக் கொண்டு 100 மீட்டரை வெறும் 46 விநாடிகளில் ஓடி கடந்தேன். இதனால் என்னை தேர்வு செய்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்று, கேங்மேன் வேலையில் சேருவேன்'' என்றார்.
 - ஆர்.ஆதித்தன்
 படங்கள்-வே.சக்தி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com