Enable Javscript for better performance
சமையல்! சமையல்!- Dinamani

சுடச்சுட

    

    சமையல்! சமையல்!

    By DIN  |   Published on : 18th December 2019 11:26 AM  |   அ+அ அ-   |  

    மங்களூர் போண்டா 

    தேவையானவை: மைதா மாவு - 1கிண்ணம், சற்று புளித்த தயிர் -–அரை கிண்ணம், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைகேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - அரைத் தேக்கரண்டி.
    செய்முறை: மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெய்யைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

    பொட்டுக்கடலை வடை 

    தேவையானவை: பொட்டுக்கடலை - 1 கிண்ணம், பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
    செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். சில நிமிடங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

    தாளிச்ச போண்டா 

    தேவையானவை: புழுங்கலரிசி -1 கிண்ணம், பச்சரிசி -1கிண்ணம், உளுந்தம்பருப்பு - முக்கால் கிண்ணம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1 கிண்ணம், பச்சை மிளகாய் -3, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
    செய்முறை: அரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு அரையுங்கள். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். எண்ணெய்யைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

    கல்கண்டு வடை 

    தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கிண்ணம், பச்சரிசி- கால் கிண்ணம், கல்கண்டு - ஒன்னேகால் கிண்ணம், எண்ணெய் - தேவையான அளவு.
    செய்முறை: உளுந்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக அரைப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெக்கவும்.

    கார்ன் போண்டா 

    தேவையானவை: சோளம் - 2, மைதா - 2 தேக்கரண்டி, கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம், இஞ்சி -1 துண்டு, பச்சை மிளகாய் -3, எலுமிச்சம்பழச் சாறு -1தேக்கரண்டி, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.
    செய்முறை: சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய்யைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறவும். 

    பாசிப்பருப்பு போண்டா 

    தேவையானவை: பாசிப்பருப்பு - 1கிண்ணம், துருவிய சுரைக்காய் - அரை கிண்ணம், துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் -1, கடலை மாவு -1 தேக்கரண்டி, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் }தேவையான அளவு.
    செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேர்க்கவும். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர், எண்ணெய்யைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
    - கே.முத்துலட்சுமி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai