சூழலியல் பாதுகாவலர்கள்!

ராஜஸ்தானில் மரங்களைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட "சிப்கோ இயக்கம்', கென்யாவில் வங்காரி மாதாய் தலைமையிலான "பசுமை வளைய இயக்கம்', அமெரிக்காவில் "நோடால்ப் இயக்கம்' என
சூழலியல் பாதுகாவலர்கள்!

ராஜஸ்தானில் மரங்களைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட "சிப்கோ இயக்கம்', கென்யாவில் வங்காரி மாதாய் தலைமையிலான "பசுமை வளைய இயக்கம்', 
அமெரிக்காவில் "நோடால்ப் இயக்கம்' என பெண்கள் முன்னின்று நடத்திய சூழலியல் போராட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை; பெண்கள் சிறந்த 
சூழலியல் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு முன்னுதாரணங்கள் இவை. அந்த வகையில், சமீபத்தில் உலகெங்கிலும் பேசப்பட்ட சூழலியல் போராளினியான கிரேட்டா தன்பர்க் தொடங்கி வைத்த இயக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வரிசையில் மேலும் பல பெண் சூழலியல் 
போராளினிகள் எதிர்கால சந்ததியினருக்காகப் போராடி வருகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகம் இங்கே:
தயாமனி பர்லா

மிகவும் ஏழ்மை நிலையில், ஜார்க்கண்டின் முண்டா பழங்குடியினத்தில் பிறந்தவர் தயாமனி பர்லா. ஜார்க்கண்ட் இரும்பு, நிலக்கரி, தாமிரம், யுரேனியம் போன்ற இயற்கை வளங்களை அதிகம் கொண்ட மாநிலம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்கிற போர்வையில் இந்த இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக பழங்குடிகளை அவர்களுடைய நிலங்களிலிருந்து விரட்டியடிப்பது அங்கே வாடிக்கையாக நடந்து வரும் விஷயமாகிவிட்டது. இவர்களின் உரிமை மீறல் பிரச்னைகள் கேட்க எவரும் தயாராக இல்லை. எனவே, அதை எழுத தீர்மானித்தார் பத்திரிகை துறை குறித்து படித்த தயாமனி. குக்கிராமங்கள், மலைகிராமங்கள், காடுகளுக்கு இருக்கும் குடியிருப்புகளுக்குச் சென்று செய்தி சேகரித்து எழுதத் தொடங்கினார். பழங்குடியினரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர் என்பதோடு, தாங்கள் வாழும் சூழலைக் காப்பாற்றும் செயல்பாட்டாளராகவும் மாறினார் தயாமனி.
"ஒரு பழங்குடியினத்தின் பொருளாதார வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் வன உற்பத்தியில் வேரூன்றியது என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறியாமல் இருக்கின்றன. இயற்கை வளங்கள் வெறுமனே வாழ்வாதார வழிமுறைகள் மட்டுமல்ல; எங்களின் அடையாளம், கௌரவம், சுயாட்சி மற்றும் கலாசாரம் ஆகியவை பல தலைமுறையாக இவற்றின் மேலே கட்டப்பட்டவை. இந்த சமூகங்கள் இயற்கை வளங்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டால் அவர்களால் உயிர்வாழ முடியாது. அப்படியிருக்கும்போது, எங்களுக்கு மறுவாழ்வு அல்லது இழப்பீடு வழங்குவது எப்படி சாத்தியமாகும்?'' எனக் கேட்கும் தயாமனி, பழங்குடியினரின் நிலங்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் வீராங்கனையாக தொடர்கிறார். 
நினா குவாலிங்கா

இருபத்தாறு வயதான நினா குவாலிங்கா, ஈக்வெடார் அமேசானைச் சேர்ந்த கிச்வா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண். காலங்காலமாக தங்களுடைய பூர்வீகமாக இருக்கும் சரயகூ பகுதியில் எண்ணெய் உறிஞ்ச வரும் நிறுவனங்களை விரட்டி யடிக்கும் கிச்வா பழங்குடியின மக்களின் கூட்டுக்குரலாய் இருக்கிறார் நினா குவாலிங்கா.
"பழங்குடி மக்கள் உயிர்வாழ்வதற்கு முழுமையாக இந்தச் சுற்றுச்சூழலையே நம்பியிருக்கிறார்கள். இந்தக் காரணத்துக் காகத்தான் பழங்குடி மக்கள் சிறந்த பாதுகாவலர்களாகவும் இருக்க முடியும் எனக் கருதுகிறேன். பூர்வகுடிகள் வசிக்கும் பகுதியே உலகின் மிகவும் பல்லுயிர்ப் பெருக்கம் மிகுந்த இடங்களாக உள்ளன. உலகின் மொத்த பல்லுயிர்ப் பெருக்கத்தில் 80 சதவிகிதம் இந்த நிலங்களில்தான் உள்ளது'' என தங்களுடைய எதிர்ப்புக்கான காரணத்தை அழுத்தமாக உணர்த்துகிறார் நினா.
தன்னுடைய பதின்பருவம் முதல், இயற்கை வளங்களை உறிஞ்சும் அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான சரயகூ மக்களின் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் இவர். சரயகூ மக்கள் 2012-ஆம் ஆண்டில் தங்களுடைய சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியின உரிமைகளை காப்பதற்காக ஈக்வெடார் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து வென்றனர். ஒன்றிணைந்து போராடியதன் மூலம் ஈக்வெடார் ராணுவம், மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களை தங்கள் நிலங்களிலிருந்து விரட்டியடித்தனர் அம்மக்கள்.
"பழங்குடி பெண்கள் சக்தியற்றவர்கள் அல்ல. அடர் வனத்திலிருந்து, பெண்களின் இயக்கம் எழுந்துள்ளது. அவர்கள் இந்த விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் எடுத்தலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோருகிறார்கள். மேலும் பழங்குடி மக்களையும் அவர்களின் பிரதேசங்களையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துகின்றனர். அமேசானைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நிலத்தையும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க அரசியல், சட்ட மற்றும் தார்மீக ரீதியாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் கலாசாரத்துக்காகவும் அவர்களுடைய வாழ்விடத்துக்காகவும் போராடுகிறார்கள்''" என தனது இனத்தின் கூட்டுக்குரலை ஒலிக்கிறார் நினா.
மேக்ஸிமா அகுனா

சூழலியல் செயல்பாட்டுக்கான உயரிய விருதான 2010-ஆம் ஆண்டு "கோல்டுமேன்' பரிசை பெற்றவர் மேக்ஸிமா அகுனா. பெருவின் வடக்கு பகுதியில் வளங்களை சுரண்டும் தங்கம் மற்றும் தாமிர சுரங்கங்களை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர். மிக மிக எளிய பின்னணியில் வந்த பெண், எழுதப் படிக்கக்கூட தெரியாதவர் உலக பெருநிறுவனங்களை எதிர்த்து வெற்றி கண்டிருக்கிறார்.
பெருவின் வடக்கு மலைப் பகுதியில் மேக்ஸிமாவின் கணவர் சில ஏக்கர்கள் நிலம் வாங்கினார். இதில் ஒரு சிறு வீட்டைக் கட்டி, நிலத்தில் பயிர் செய்து மூன்று குழந்தைகளுடனும் கால்நடைகளுடனும் வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். 2011-ஆம் ஆண்டு வாக்கில், அகுனா குடும்பத்தின் கதவைத் தட்டிய சுரங்க நிறுவனம் அவர்கள் வசிக்கும் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறியது. மறுத்தபோது, சுரங்க நிறுவனத்துக்காக வந்த காவலர்கள் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் அடித்தது, வீட்டை நொறுக்கியது. 
போதாதென்று அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று சுரங்க நிறுவனம் வழக்குத் தொடுத்தது. மேக்ஸிமாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததோடு, 2000 டாலர்கள் அபராதமும் விதித்தது. சாதாரண விவசாயியால் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அது.
தன்னுடைய நிலத்தை இழந்து வீதிக்கு வந்த தன் குடும்பத்துக்கு நீதி கேட்கும் போராட்டத்தை சிறையிலிருந்து திரும்பிய மேக்ஸிமா தொடங்கினார். தன்னுடைய நிலம் தனக்கே சொந்தம் என நிரூபிக்கும் ஆதாரங்களைத் திரட்டத் தொடங்கினார். 2014-ஆம் ஆண்டு மீண்டும் நீதிமன்றம் சென்று, வெற்றி கண்டார்.
"சுரங்க நிறுவனங்கள் கஜாமார்காவிலிருந்து தங்கத்தை எடுக்கிறார்கள். அந்தத் தங்கம் ரத்தம் தோய்ந்த தங்கம். ஏழை மக்களின் கண்ணீரில் மூழ்கியது. நீரையும் நிலத்தையும் காக்க மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சுரங்க நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு லாபம் ஒன்றே இலக்கு''" என்கிறார் 47 வயதான இந்த சூழலியல் போராளி. 
பனோ ஹராலு 

சிறிய இறையுண்ணி பறவையான நாகாலாந்தின் அமூர் ராஜாளி சிறப்புக்குரியது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் சைபீரியாவிலிருந்து வடகிழக்கு மாநிலமான நாகாலாந்துக்கு வலசை வரும் ராஜாளிகளை, உள்ளூர் வேட்டைக்காரர்கள் பெருந்திரளாக கொன்று குவித்தார்கள். 2012-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான ராஜாளிகளை வேட்டையாடி குவித்திருக்கிறார்கள். மலைப்பகுதியான நாகாலாந்து மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இப்படி பெருந்திரளாக வேட்டையாடுதல் தவறு என்கிற எண்ணம் அங்கு வலுப்பெறவில்லை. ஆனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பனோ ஹராலு என்கிற பத்திரிகையாளருக்கு இது மிகப்பெரும் படுகொலையாகப்பட்டது.
தூர்தர்ஷன், என்.டி டிவி போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் 20 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய பனோ, அதையும்விட சிறப்பான பணி, முக்கியமான பணி தனக்கு காத்திருப்பதை தெரிந்து கொண்டார். பத்திரிகையாளர் பணியை உதறிவிட்டு, இன்னும் சில நண்பர்களுடன் இணைந்து 2012-ஆம் ஆண்டு அமூர் ராஜாளி பாதிப்பு இயக்கத்தை தொடங்கினார். 
கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் அமூர் ராஜாளிகள் கொல்லப்படுவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது. சமகாலத்தில் மிக வெற்றிகரமான சூழலியல் பாதுகாப்பு திட்டம் இது என பல சூழலியல் செயல்பாட்டாளர்கள் பானோவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
"இந்த பதில் காற்றில் மிதக்கிறது' எனப் பிரபல பாடகரும் பாடலாசிரியருமான பாப் டைலான் சொன்னார். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அமூர் ராஜாளிகளின் வலசை திருவிழாவை நாகாலாந்து மக்கள் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். வேட்டையாடுதல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மிக நிறைவாக நான் இப்போது உணர்கிறேன்'' என்கிறார் பனோ பெருமிதம் பொங்க.
- மு.வி. நந்தினி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com