ஏரோபிக்ஸில் சர்வதேச சாதனை!
By DIN | Published On : 25th December 2019 11:33 AM | Last Updated : 25th December 2019 11:33 AM | அ+அ அ- |

ஏரோபிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பதக்கங்களை வென்றுள்ளார் சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பி.சுப்ரஜா.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீராங்கனையான இவரது தாயார் பார்வதி, அவரது சிறு வயது முதலே பல்வேறு தென்னிந்திய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். தற்போது ஜிம்னாஸ்டிக் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சுப்ரஜாவின் தந்தை பெருமாள் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
தனது தாயாரின் பயிற்சியை சிறுவயது முதலே கண்டு வந்த சுப்ரஜாவுக்கு, ஜிம்னாஸ்டிக் மற்றும் ஏரோபிக்ஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட தனது மகளுக்கு பயிற்சியளிக்க தொடங்கினார் பார்வதி. பள்ளிப் பருவத்திலேயே தீவிர பயிற்சி மேற்கொண்ட சுப்ரஜா, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல படைத்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வரும் சுப்ரஜா, ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்று தாயகத்துக்குச் சிறப்பு சேர்த்துள்ளார். இதனையடுத்து, வரும் 2020 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மேலும், கடந்த நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் "ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்' என்ற பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஏரோபிக்ஸ் தவிர, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, கூடைப்பந்து மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார் இவர்.
வாய்ப்புகள் குறித்து மாணவி பி.சுப்ரஜா கூறியது:
""சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகளான எனக்கு ஆரம்பத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. எனினும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை பி.டி.உஷா மற்றும் ஷைனி வில்சன் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு, எனது தந்தை கொடுத்த ஊக்கம் மற்றும் தாயார் அளித்த பயிற்சியின் காரணமாக மனம் தளராமல் வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் எல்லாம் பங்கேற்றதால் பதக்கங்கள் பல பெற முடிந்தது.
மேலும், கல்லூரித் தாளாளரும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி அளித்து ஆதரவளித்தார்.
ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே என் நோக்கமாகும். ஆனால், ஒவ்வொரு முறையும் போட்டிகளிலும் பங்கேற்க ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. போதிய நிதியுதவி இல்லாததால் ஒவ்வொரு முறையும் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆண்டுதோறும் ஒரே இடத்தில் நிதியுதவி கோரி போட்டிகளில் பங்கேற்க இயலாது. எனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தால் மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவேன்'' என்றார் அவர்.
- எஸ்.ஷேக் முகமது.
படங்கள்: வே.சக்தி.