சுடச்சுட

  
  mm3

  தினமணி மற்றும் திண்டுக்கல் வரதராஜ் காம்ப்ளக்ஸ் ஸ்ரீவாசவி தங்க மாளிகை இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப் பந்தாட்டப் போட்டி ஜனவரி 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில், லீக் சுற்றுப் போட்டிகளுக்கு 4 அணிகள் தேர்வுப் பெற்றன. அதில் ஒன்றான சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி அணியின் வீராங்கனை தீபிகாவின் ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தீபிகாவின் ஜெர்சி எண் 13. எம்.ஓ.பி அணி விளையாடும் போதெல்லாம், பார்வையாளர்கள் மட்டுமின்றி எதிரணி வீராங்கனைகளின் கவனம் முழுவதும் 13-ஆம் எண் கொண்ட தீபிகா மீதே இருந்தது.
   தீபிகாவின் கைகளில் சிக்கும் பந்து, எதிரணி வீராங்கனைகளைக் கடந்து எதிர் முனையிலுள்ள கூடையை நோக்கி லாகவமாக கடத்திச் செல்லப்படுவது மட்டுமின்றி, கூடைக்குள் செலுத்தி புள்ளிகளை பெறுவதன் மூலம் கைத் தட்டல்களை அள்ளினார்.
   கூடைப் பந்தாட்டத்தைப் பொருத்தவரை "பால் ஹேண்டலர்' என்ற நிலையில் விளையாடும் வீராங்கனையே முக்கிய ஆட்டத்தின் மூளையாக கருதப்படுகிறார். இந்த பால் ஹேண்டலர் நிலையில் ஆடும் தீபிகாவுக்கு, பார்வர்ட் நிலையிலும் சிறப்பாகச் செயல்படும் திறன் இருப்பதால், 2 நிலைகளிலும் ஆடி எதிரணியினருக்கு சவாலாக விளங்கி வருகிறார்.
   இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகளில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் போது தொடர்ந்து 3 முறை தமிழகத்திற்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ள தீபிகா, பெடரேஷன் கோப்பை போட்டியிலும் தமிழக அணிக்காக 2 முறை (2017, 2018) விளையாடியுள்ளார்.
   மேலும், அகில இந்திய அளவிலான கூடைப் பந்தாட்டப் போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணிக்காகவும் தீபிகா விளையாடியுள்ளார். இந்நிலையில் தினமணி சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப் பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். 4 லீக் சுற்றுப் போட்டிகளில் முறையே 15, 20, 25, 16 என மொத்தம் 76 புள்ளிகள் பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
   சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மைதிலி தம்பதியரின் 2-ஆவது மகளான தீபிகா, எம்.ஓ.பி வைஷ்ணவ கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். தனது அக்கா மோனிஷாவை பின் தொடர்ந்து 12 - ஆவது வயது முதலேயே கூடைப் பந்தாட்டத்தில் முத்திரைப் பதிக்க தொடங்கியுள்ளார்.
   இது தொடர்பாக தீபிகா நம்மிடம் கூறியதாவது:
   "6-ஆம் வகுப்பு முதல் கூடைப்பந்து விளையாடத் தொடங்கினேன். கூடைப் பந்தாட்ட வீராங்கனையான எனது அக்கா மோனிஷாவே ரோல் மாடல். நடுநிலைப் பள்ளி நாள்களில் பயிற்சியாளர் ராமச்சந்திரனின் வழிகாட்டுதலோடு கூடைப் பந்தாட்டத்தில் கவனம் செலுத்தினேன்.
   உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் டெரிக் ஹட்சன் அளித்த பயிற்சி என்னை மேலும் வலுப்படுத்தியது. தற்போது, கல்லூரி அணிக்காக விளையாடத் தொடங்கிய எனக்கு பயிற்சியாளர் சம்பத் சிறப்பான ஊக்கம் அளித்து வருகிறார்.
   தமிழக அணிக்காக விளையாடும் வாய்ப்பினை, 10-ஆம் வகுப்பு முதலே பெற்றேன். கல்லூரிக்கு வந்த பின்னர், அகில இந்திய அளவிலான பெடரேஷன் கோப்பைக்கானப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய கூடைப் பந்தாட்ட அணிக்கு தேர்வு செய்யப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளேன்'' என்றார்.
   - ஆ.நங்கையார் மணி.
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai