சுடச்சுட

  
  SHIKA

  இந்த ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற வீரசாகச மோட்டார் சைக்கிள் விளையாட்டை நடத்தும் பொறுப்பை முதன் முறையாக கேப்டன் ஷிகா சுரபி ஏற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
   இந்திய, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் 2.4கி.மீ. தொலைவு ராணுவ அணி வகுப்பின் போது, 9 மோட்டார் சைக்கிள்களில் 32 வீரர்களுடன் மனித கோபுரம் அமைத்து, இந்திய தேசியக் கொடி, ராணுவக் கொடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் சிக்னல் கொடி ஆகிய கொடிகளை ஏந்தியபடி செல்லும்போது, புல்லட் மோட்டார் சைக்கிளில் நின்றபடி குடியரசு தலைவருக்கு சல்யூட் அடித்தபடி குழுவினரை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு இந்தமுறை பெண் ராணுவ அதிகாரி ஷிகா சுரபிக்கு வழங்கப்பட்டது. இது போன்ற சாகச நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
   "இது ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த உயர் அதிகாரிகளுக்கு, நான் நன்றி சொல்ல வேண்டும். ஏற்கெனவே ஃபைட்டர் பைலட் என்ற முறையில் இந்திய விமானத்துறையில் பல பெண்கள் வீரசாகசங்கள் புரிந்துள்ளனர். என்னுடைய துணிச்சல் இந்த நாட்டின் பெருமைக்குரிய பெண்களுக்கு உந்துதலையும், பெருமையையும் கொடுக்குமென நினைக்கிறேன்'' என்று கூறும் ஷிகா சுரபி, "உறுதியுடனும், தீர்மானத்துடனும் மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து கடுமையான பயிற்சி கொண்டதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் காரணம்'' என்கிறார்.

  ராணுவத்தில் சேர இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?
   இவரது உறவினர்கள் பலர் ராணுவத்தில் உள்ளனர். இவருக்குச் சிறு வயதிலிருந்தே துணிச்சல் அதிகம். பத்து வயதிலேயே புல்லட் ஓட்ட பழகிக் கொண்ட இவர், கூடவே மலையேறும் பயிற்சி, மங்கிஜம்ப், மார்ஷல் ஆர்ட், நீண்டப் பயணம், கட்டுமர பயணம் எனப் பல வீர செயல்களில் பயிற்சி பெற்றிருந்ததால் ராணுவத்தில் சேர உதவியாக இருந்தது.
   2014 - ஆம் ஆண்டு அலகாபாத்தில் உள்ள சேவை தேர்வு மையம் மூலம் தேர்வு பெற்ற இவர், மேற்கொண்டு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, 2015- ஆம் ஆண்டு முதன்முதலாக அருணாசல பிரதேசத்தில் பணியில் நியமிக்கப்பட்டார். தற்போது பஞ்சாபில் பணியாற்றி வருகிறார்.
   "அபாயகரமான விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது ஆபத்தானது என்றாலும், நாளடைவில், பழக்கமான பின்பு சாகசங்கள் செய்வது சுலபமாகிவிடும். முதலில் நான் பணியில் சேர்ந்தபோது, என் தலைமையின் கீழ் ராணுவ முகாமில் 136 வீரர்கள் இருந்தனர். அனைவரையும் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்கள் தோழமையுடன் பழகி, என் கட்டளைகளை ஏற்று ஒத்துழைப்பு அளித்து என் பயத்தை போக்கி உற்சாகத்துடன் பணிபுரிய வைத்தது. அதிகாரிகளும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். குறிப்பாக கேப்டன் அங்கிட் என்னிடம் காட்டிய பரிவு எனக்கு பெரும் பலமாக இருந்தது.
   என் மனதிலும் இடம் பிடித்துவிட்டதால் எங்கள் திருமணம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். வீரதீர சாகசத்தில் அவர் என்னைவிட பத்துமடங்கு துணிச்சலானவர்'' என்று கூறினார் ஷிகா சுரபி.
   - அ.குமார்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai