சமையல்! சமையல்!

கேழ்வரகு இனிப்பு அடை, நெல்லிக்காய் துவையல், பிடிகருணை குழம்பு, கலவை தானிய உருண்டை, புளியந்தளிர் பருப்புக் கூட்டு, இஞ்சி துவையல்

கேழ்வரகு இனிப்பு அடை

தேவையானவை: 
கேழ்வரகு மாவு - ஒரு கிண்ணம், வெல்லம் - முக்கால் கிண்ணம், தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம், ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - சிறிது, நெய் - தேவையான அளவு
செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

நெல்லிக்காய் துவையல்

தேவையானவை: 
பெரிய நெல்லிக்காய் - 6 
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, எண்ணெய் - சிறிதளவு. 
செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்யில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

பிடிகருணை குழம்பு

தேவையானவை: பிடிகருணை - 200 கிராம், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - 2, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, குழம்பு மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி, வடகம், வெல்லம் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணையை மண் போக கழுவி, வேக வைத்து, தோலுரித்து, வட்டம் வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி... துண்டுகளாக்கிய பிடிகருணையை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை விட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானதும் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட... சுவை அள்ளும்! 

கலவை தானிய உருண்டை

தேவையானவை: கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கிண்ணம், சர்க்கரை - இரண்டரை கிண்ணம் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம், நெய் - அரை கிண்ணம்.
செய்முறை: தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டைப் பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டைப் பிடிக்கலாம்).
புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

புளியந்தளிர் பருப்புக் கூட்டு

தேவையானவை: புளியந்தளிர் - அரை கிண்ணம், துவரம்பருப்பு - அரை கிண்ணம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: குழம்பு வடகம் - சிறிதளவு, மிளகாய் வற்றல் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி , கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு.
செய்முறை: துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வெந்த துவரம்பருப்புடன் புளியந்தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கல வையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இஞ்சி துவையல்

தேவையானவை: இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோலை நீக்கி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய் வற்றல் - 3, தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம், புளி - சிறிதளவு, உளுத்தம் பருப்பு (வறுக்க) - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு (தாளிக்க) - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல், தேங்காய்த் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். துவையலை அம்மியில் அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

கமகம கமர்கட்

தேவையானவை: தேங்காய்த்துருவல் - 2 கிண்ணம்
பாகு வெல்லம் - ஒன்றரை கிண்ணம், 
நெய் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடுப்பை "சிம்' மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க... கமகம கமர்கட் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com