பாரம்பரிய நெசவாளர்களுக்கு வேலை!

தமிழகத்தில் காஞ்சிபுரம் கைத்தறி நெசவுத் துணிகளுக்கு இணையாக சேலம் பகுதியில் நெசவு செய்யப்படும் துணிகள் பிரசித்தி பெற்றதாகும்.
பாரம்பரிய நெசவாளர்களுக்கு வேலை!

தமிழகத்தில் காஞ்சிபுரம் கைத்தறி நெசவுத் துணிகளுக்கு இணையாக சேலம் பகுதியில் நெசவு செய்யப்படும் துணிகள் பிரசித்தி பெற்றதாகும். காலப்போக்கில் விசைத்தறி வந்துவிட்ட நிலையில், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணியை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலை உருவாகி உள்ளது.
 இதில் வீட்டில் இருந்தபடியே பழமையான கைத்தறி நெசவுத் தொழிலுக்கு புத்துயிர் தரும் வகையில், கைத்தறி நெசவாளர்களைக் கொண்டு சேலைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி அதில் லாபம் ஈட்டி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த ஆயத்த ஆடை வடிவமைப்பு பட்டதாரி கீர்த்தனா. இவர், பாரம்பரிய கைத்தறி தொழிலாளரும், இயற்கை முறையிலான மாடித் தோட்டம் அமைப்பவரும், இயற்கை ஆர்வலருமான அல்லியின் மகள் ஆவார். இவர், கைத்தறித் தொழிலைப் பற்றி கூறியது:
 "ஆரம்பத்தில் பாரம்பரியமாக எனது தாயார் குடும்பத்தினர் கைத்தறி நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நாகரிக காலத்தில் நெசவுத் தொழிலில் பின்னடைவு ஏற்படவே, பலர் அவரை விட்டு விலகினர். எனினும், எனது தாயார் குடும்பத்தினர் தொடர்ந்து இந்தத் தொழிலை பல்வேறு சிரமங்களுக்கும் இடையில் நடத்தி வந்தனர்.
 இந்த நிலையில், நான் ஆயத்த ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு முடித்த பின் பல்வேறு இடங்களில் நல்ல ஊதியத்தில் என்னைப் பணியில் அமர்த்த அழைத்தனர். எனினும் அழிந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்க இத்தொழிலைத் தேர்ந்தெடுத்து, என்னையும், எனது சகோதரரையும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், தனிமையில் இருந்த எனது தாயாருடன் இணைந்துஇத்தொழிலில் முழுமனதோடு ஈடுபட்டேன்.
 அதனடிப்படையில், கைத்தறியில் மாதிரி படம் வரையும் கலையையும் ஏற்படுத்தினேன். தற்போது சேலை மற்றும் சுடிதார்களில் பல்வேறு படங்கள் வரையப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பி வீட்டிலிருந்தபடியே வருமானம் பெறுகிறேன்.
 கைத்தறி நெசவு செய்யும் முறை:
 முதற்படியாக சேலையில் நெசவு செய்யப்பட வேண்டிய வடிவாக்கத்தை கணினி மூலம் வரைந்து நெசவுக்கு அனுப்பிவிடுவோம். பின்பு நெசவாளர்கள் துணிகளில் அந்தந்த வடிவத்தை நெசவு செய்து அனுப்பிவிடுவர். பின்னர், பளபளப்பூட்டி சேலைகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்துவிடுவோம்.
 நவீன இயந்திரங்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் துணியில் வெறும் நூல் மட்டுமே நெசவு செய்யப்படுகிறது. ஆனால், கைத்தறியின் மூலம் நெசவு செய்யப்படும் உடைகளில் நெசவாளர்கள் நூலோடு தங்கள் அன்பினையும் சேர்த்து நெசவு செய்கின்றனர்.
 கைத்தறியில் நெசவு செய்யப்படும் சேலைகள் ரூ. 350 முதல் ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவாறு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சேலைகளை வடிவமைத்துத் தருவதால், தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற வெளியூர்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வீடு தேடி வந்து சேலைகள் வாங்கிச் செல்கின்றனர்.
 மேலும், கணினி மூலம் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு ஏற்றவாறு சேலைகளை வடிவாக்கம் செய்து நெசவுக்கு அனுப்புகிறோம். பண்டிகைக் காலங்களிலும் சேலைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
 வீட்டில் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் நேரத்தை வீணாக்காமல் இதுபோன்ற கைத்தொழில்களில் ஈடுபட்டு, சிறிய வருமானம் ஈட்டுவதன் மூலம் குடும்பச் செலவுக்கு உதவியாக இருக்கும்.
 இதன்மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ. 20 ஆயிரம் வரை சம்பதிக்கலாம். இதுபோன்ற கைத்தொழில்கள் ஏதேனும் ஒன்று கற்றுக் கொண்டால், சமுதாயத்தில் பெண்களின் மதிப்பும் தரமும் உயரும்'' என்றார்.
 - எஸ்.ஷேக் முகமது
 படங்கள்: வி.சக்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com