Enable Javscript for better performance
கொஞ்சம் கசப்பு... பொதுவாக இனிப்பு!- Dinamani

சுடச்சுட

  
  mn2

  இனிக்கும் தேனில் எத்தனை வகை இருக்கிறது ?  காட்டுத் தேன், கொம்புத்தேன்,  சிறுதேன்...  அதற்கு மேல்  தேனின் பெயரைச் சொல்ல வாய்ப்பில்லை. மதுரையில்  ஜோசபின் என்ற பெண்மணி முப்பத்தைந்து வகை தேன்களை உற்பத்திச் செய்வதுடன் விற்பனையும்  செய்து வருகிறார்.  இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது  நாவல் தேன், முருங்கைத் தேன், வேம்புத் தேன்...  இந்த தேன் வகைகள் அதிக சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்த உதவுகிறதாம்.  தேன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஜோசபின் மட்டுமே இந்தியாவில் முப்பத்தைந்து வகை தேன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். "விபிஸ்  தேன்' என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன்  தொழில்முனைவரான ஜோசபின்  தேனீக்கள்  வளர்த்து தேன் எடுப்பது  குறித்து  மாதத்தில் இருமுறை இலவசப் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்.  இவரது மேற்பார்வையில் சுமார் எட்டாயிரம் பேர் தேனீக்கள்  வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து ஜோசபின்  சொல்வது :

  ""எனக்கு சொந்த  ஊர் சிவகங்கை மாவட்டத்தில்  இருக்கும்  முத்துப்பட்டி. திருமணத்திற்குப் பின்  மதுரைக்கு வெகு அருகில் இருக்கும்  கடச்சனேந்தல் கிராமத்திற்கு  வந்தேன், அந்த சமயத்தில்  பிளஸ் டூ  முடித்திருந்தேன். திருமணத்திற்குப் பின்  இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.  மகன், மகள் பிறந்தார்கள்.  குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி.  இதனால்,  நாம் ஏதாவது வேலைக்குப் போனா  பொருளாதார நெருக்கடி குறையும்  என்று நினைத்து .. வேலை வாய்ப்புகளைத் தேடி அலைந்தேன்.  அந்த சூழ் நிலையில்தான்  மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி  கொடுத்து வருவது தெரிய வந்தது.  பயிற்சி  வகுப்புகளில் கலந்து கொண்டேன். பயிற்சி முடிந்ததும்,  வேளாண் அறிவியல் மையம்    தேனீ வளர்க்க  பத்து தேனீக்கள் அடங்கிய  பெட்டிகளை வழங்கினார்கள்.   பெட்டிகளை வைக்க  தோட்டம் வேண்டும்.  எனக்கு மதுரையில்  தோட்டம் துறவு ஏதும் இல்லை. அதனால் எனது அப்பாவின் தோட்டத்தில்  தேனீ  வளர்க்க ஆரம்பித்தேன். வாரம் ஒருமுறை சென்று  தேனீ பெட்டிகளைப்  பார்த்து கண்காணித்து வருவேன்.  அந்த முயற்சியில்  எட்டு கிலோ தேன் கிடைக்கவே  மனமெல்லாம் இனித்தது. தொடர்ந்து தேனீக்களை வளர்க்க  ஊக்கம் தந்தது.  போகப் போக  ஒன்று விளங்கியது. தேனீக்களை வளர்த்து தேன் சேகரித்து விற்று வரும் வருமானத்தை விட, தேனீக்களை  வளர்த்து  விற்றால் அதிக வருமானம் கிடைக்கும் என்று  செயல் ரீதியாகப்   புரிந்து கொண்டேன். தேனீக்களின் ராணி தேனியைப் பிரித்தெடுக்கும் யுக்தியையும் கற்றுக் கொண்டேன்.  கடன் வாங்கி  தேனீக்கள் வளர்க்கும்  பெட்டிகளை உருவாக்கினேன்.  அந்த சூழ்நிலையில்,  மகள் கீழே விழுந்து  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மகளின்  சிகிச்சைக்காக  அலைந்தேன்.  மருத்துவ சோதனையின்போது மகளுக்கு எலும்பு   புற்றுநோய் தாக்கியிருப்பதாக  தெரியவந்தது.    அதிர்ச்சி அடைந்தோம்.  சின்ன வயதில்  எலும்பில் புற்றுநோயா..?  தேன் வளர்ப்பில் இனிமையாக   போய்க் கொண்டிருந்த வாழ்க்கை கசந்தது.  மகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்று  கடன் வாங்கி வைத்தியம் பார்த்தோம். பலனில்லை. மகள் மறைந்துவிட்டாள்.

  "இந்த சோதனை போதாது என்று  தேனீக்கள் வளர்க்கும் பெட்டிகளில் எறும்புகள் மொய்த்து   தேனீக்கள்  இல்லாமல் போயிருந்தன.  மகளின் மருத்துவம் பார்க்க  அலைந்ததில் தேனீக்கள்  வாழும்  பெட்டிகளைப் பராமரிக்க இயலாமல் போனதால் வந்த வினை.  அடுத்த  சோகமும் எனது வாழ்க்கையில் வந்து சேர்ந்தது.  கணவரும்  உடல்நலம் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.  வாழ்க்கையே சூனியமாகிவிட்டது. யாருக்காக வாழ வேண்டும்  என்று நினைத்தாலும், மகனுக்காக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.  சொந்தங்களும்,  பயிற்சி கொடுத்த அதிகாரிகளும்,  மீண்டும் தேனீக்கள் வளர்க்க  உற்சாகப்படுத்தினர்.  துவண்டு கிடந்த நான்  வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட ,  தயார் ஆனேன்.  தேனீக்கள் வளர்ப்பில் மீண்டும்  ஈடுபடத்  தொடங்கினேன்.   

  தேனீ வளர்ப்பில்  ஈடுபாடுடன்  கண்காணித்து  மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்க ஆரம்பித்தேன்.   தன்னம்பிக்கை  வந்ததும்,  வங்கியில் கடன் வாங்கி விபிஸ் இயற்கை தேனீ பண்ணையைத்  தொடங்கினேன். 

  தொழில் முனைவரானதும், புதிய துவக்கமாக   சிவகங்கை கண்மாய் ஓரங்களில்  தளதளவென்று வளர்ந்து  நிற்கும்  நாவல் மரங்களுக்கு  இடையில் தேனீ பெட்டியினை வைத்தேன்.  சில  வாரங்களில்  தேனீக்கள் நாவல் மரப் பூக்களில் போய் அமர்ந்து  அதிலுள்ள தேனைக் குடித்து  கூட்டில்  சேகரிக்கத் தொடங்கின. கொஞ்சம்  கசப்பு..  ஆனால் பொதுவாக இனிப்புடன்  இருந்த நாவல் தேன், சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.   விற்பனையும் அதிகரித்தது.  தொடர்ந்து  முருங்கை,  வேப்ப  மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில்  தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். முருங்கைத் தேன்,  வேம்புத் தேன் என்று தொடங்கி, காப்பித் தேன்  உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேறினேன்.  தேனீக்கள்  அவை வசிக்கும் கூட்டிலிருந்து இரண்டு   கி. மீ சுற்றளவிற்குப் பறந்து போய் தேனைச் சேகரிக்கும். அந்த இரண்டு கி.மீ சுற்றளவில் எந்த மரங்கள் அதிகம் உள்ளதோ  அந்த  மரங்களின் மலர்களிலிருந்து  தேனை தேனீக்களைக் கொண்டு சேகரிக்கலாம்.  தேனீ வளர்ப்பிற்கு அதிக முதலீடு தேவையில்லை. அதிக நேரம் உழைக்க வேண்டியதுமில்லை. ஆனால் தேனீ பெட்டிகளைக் கண்காணிக்க வேண்டும். எறும்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  தேனீ வளர்ப்பில் பயிற்சி தந்து  சுமார்  எட்டாயிரம் பேரை  தேனீ வளர்ப்பில் ஈடுபடுத்தியிருக்கிறேன். அவர்கள் சேகரிக்கும் தேனை  நானே வாங்கிக் கொள்கிறேன். மாதம்  சுமார் ஐயாயிரம் கிலோ தேனை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எனது பண்ணையிலும்  தேன்  உற்பத்தி நடக்கிறது. சுமார் ஐம்பது ஊழியர்கள்  இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 

  "தேன்  தயாரித்தால் மட்டும் போதாது.  அது நுகர்வோர்களை சென்றடைய வேண்டும்.  பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தேன்  சந்தையில் நமக்கு ஓர் இடம் பிடிப்பது  சவாலான விஷயம்.  நமது தேனின்  தரம் குறித்து பலருக்கும் சந்தேகம்  எழும்.  விளக்கிச் சொல்ல வேண்டும். இந்த முயற்சியில் முதலில் வேண்டாம் என்று சொன்னவர்களை  வாங்க வைத்தோம். அவர்கள் திருப்திப்பட்டதும்   எங்களுக்கும் சந்தை கிடைத்தது.  வித்தியாசமாகச்  செய்ய வேண்டும் என்பதற்காக   தேனில் மதிப்பு கூட்டத்  தொடங்கினேன். சோதனைகளின்   விளைவாக துளசித்தேன், பூண்டுத்தேன், மாம்பழம் தேன், நெல்லிக்கனி தேன், அத்திப்பழ தேன், பலாப்பழத்தேன்  என்று இருபத்தைந்து வகை  தேன்களை  வர்த்தகத்திற்காக  தயாரித்து வருகிறேன். 
  தேன்  சேகரிப்பதை  "பழுப்பு புரட்சி'  என்கிறோம்.  தேனீ வளர்ப்பு குறித்து நான்

  இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.  "அயல் மகரந்த  சேர்க்கை நடை பெற்றால்தான்  விளைச்சல்  அதிகமாகும்.  இந்த அயல் மகரந்த சேர்க்கை நடக்க பெரிதும் உதவுபவை தேனீக்கள்தான்.  இதை உணர்ந்த  விவசாயிகள் தேனீக்களை  தங்கள் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில் வளர்க்க   தேனீக்களை வாங்கிச் செல்கின்றனர்.  

  தேனீ வளர்ப்பில்  எனது பங்களிப்பு   எனக்கு ஆறு  தேசிய விருதுகளையும், முப்பத்தாறு   மாநில விருதுகளையும்  பெற்றுத் தந்துள்ளது'' என்கிறார் ஜோசபின்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai